“தீபன்” திரைப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் தங்கப்பனை விருது வென்றிருக்கிறது.

“தீபன்” திரைப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் தங்கப்பனை விருது வென்றிருக்கிறது.

பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய ஈழத்தமிழ் அகதிகளின் கதை “தீபன்” திரைப்படம் கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.
கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது