ஒரு வாரத்திற்கு முன்னர் எனக்கு முதலாவது குழந்தை பிறந்தது. தற்போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கின்றது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பொதுவாகப் பல தாய்மார் தமது பாற்சுரப்புக் குறைவாக உள்ளது என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர். ஆனால் உண்மை அப்படி அல்ல. உங்களின் குழந்தையின் விகிதாசாரமான நிறை அதிகரிப்பு, போதுமானளவு சிறுநீர் கழித்தல் அடிக்கடி பாலுட்டப்படல் ஆகியன உரிய அளவு பாற்சுரப்பை எடுத்துக்காட்டும் சான்றுகளாகும். பாற்சுரப்புக் குறைவை ஏற்படுத்தும் காரணிகளாக மாப்பால், பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றால் பாலுட்டல் பிரதியீடு செய்யப்படுதல், பாலுட்டப் பயக்படுத்தப்படும் சூப்பிகளால் தாயின் முலைக்காம்புகள் மீதான சிசுவின் நாட்டமின்மை. முலைக் காம்புக் கவசம், சீரான கால இடை வெளியிலான திட்டமிடப்பட்ட பாலூட்டல், உறங்கும் குழந்தை சிசு பாலுறிஞ்சலை நிறுத்தமுன் பாலூட்டலை நிறுத்தல் அதிகரித்த பாற்கொழுப்பு, ஒரு மார்பகத்தை மட்டும் பாலூட்டலுக்குப் பயன்படுத்தல் போன்றவவை அடையாளப்படுத்தப்படுகின்றன. இனி பாற்சுரப்பை அதிகரிக்கும் வழி வகைகள் பற்றிப் பார்ப்போம். பாற்சுரப்பானது தேவைக்கேற்றவாறே நிர்ணயிக்கப்படுகின்றது. உங்களுக்கு அதிகரித்த பால் தேவைப்படுகையில் பாற்சுரப்பு அதிகரிக்கும். உங்கள் சிசுவிற்கு மிகத்திறனுடன் பாலூட்டுவதை உறுதிப்படுத்தவும். சிசுவால் அதிகளவு பால் உறிஞ்சலின்மூலம் அகற்றப்படுமிடத்து மேலும் மேலும் பாற்சுரப்பு அதிகரிக்கும். பாலுட்டலின்போது குழந்தையின் தலையும் உடலும் ஒரே நேர்தளத்திலிருத்தல், குழந்தையின் முகம் தாய் மார்பத்துக்கும் முலைக்காம்புக்கும் எதிராக இருத்தல், குழந்தையின் மேலுதடு அல்லது மூக்கு தாயின் முலைக்காம்புக்கு எதிராக இருத்தல் ஆகியன பாற்சுரப்பைக் கூட்டும். அடிக்கடி குழந்தைக்குத் தாய்பால் ஊட்டவும். பகலில் 1.5 – 2 மணித்தியாலத்துக்கு ஒரு முறையும் இரவில் மூன்று மணித்தியாலத்திக்கொரு தடவையும் பாலூட்டல் சிறந்தது. பாலூட்டும் ஒரு தடவை ஒரு பக்க மார்பகத்தை முழுமையாக பயன்படுத்தவும். மறுமுறை மறுபக்க மார்பகத்தைப் பயன்படுத்தவும். பாலூட்டலுக்குச் சூப்பிகளையும் போத்தலையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். திண்ம திர உணவுகளைத் தவிர்க்கவும். போதுமான ஓய்வும் உறக்கமும் பாலூட்டும் தாய்க்கு மிக அவசியம். மன அமைதியும் திருப்தியும் பாலூட்டலை அதிகரிக்கும். போதுமாகளவு சுத்தமான நீரையும் சமச்சீரான போசணையுடைய உணவையும் உள்ளெடுக்கவும். ( புரதம், கல்சியம்) பாலூட்டலுக்கு இடையிலான நேரத்தில் பம்பிகளைப் பயன்படுத்தி மேலதிகமாக மார்பங்களில் தேங்கியுள்ள பாலை அகற்றல் அதிகளவு பாலுற்பத்தியைத் தூண்டும். குழந்தைக்குப் பசியெடுக்கும்போது பாலூட்டவும். மார்பங்கள் பாலினால் நிரம்பும்வரை காத்திருக்க வேண்டாம். குழந்தையுடனான நேரடித் தொடுகையானது நீண்டதும் அடிக்கடி நிகழும் பாலூட்டலைத் தோற்றுவிக்கும். பாலூட்டும் நேரத்தை உங்கள் சிசுவே தீர்மானிக்கட்டும். ஒரு பக்க மார்பின் பாலினளவு குறையும்போது மறுபக்க மார்பில் பாலூட்டலைத் தொடரவும். இரவில் குழந்தையை அருகில் பேணுவதுடன் அடிக்கடி பாலூட்டலை மேற்கொள்ளவும். பகலிலும் நேரடித் தொடுகையைப் பேணவும். இளஞ் சூடான துணியை மார்பங்களின் மேல் இறுக்கமாகக் கட்டவும், விரல் நுனிகளால் மேலிருந்து கீழாக மார்பங்களை வருடி விடவும். முலைக்காம்பைச் சுற்றி வட்ட வடிவமாக மார்பங்களை அழுத்திவிடவும். இறுக்கமாக மூடியுள்ள கையை மார்பின் மேல் வைத்து முலைக்காம்பை நோக்கிய வண்ணமாக உருட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய் நாற்காலியில் அமர்ந்து முன்புறம் குனிந்து தனக்கு முன்னுள்ள மேசையின்மேல் தலையை வைத்து ஓய்வாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தளர்வாகத் தொங்கியபடியிருக்க வேண்டும். பின்கழுத்திலிருந்து தோன்ப்பட்டைகளுக்கீழான பகுதிவரை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும் பெருவிரல்களால் அழுத்திவிடல் ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த முறைகள் பயன்தராதவிடத்து வைத்திய ஆலோசனையை நாடி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயன் பெறலாம்