உயிர்குடிக்கும் உண்ணிக்காய்ச்சல் Scrub Typhus. Dr.S.கேதீஸ்வரன்

இன்று காய்ச்சல் என்றவுடன் எல்லோரும் பயப்படுவது டெங்குக் காய்ச்சலுக்குத்தான். ஆனால் டெங்கைப்போல ஆபத்தான காய்ச்சல் ஒன்று இருப்பதைப்பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் உண்ணிக்காய்ச்சல். இது யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. விரைவில் இனங்காணப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

உண்ணிக்காய்ச்சலை ஆங்கிலத்தில் “ஸ்கிரப் டைபஸ்” (Scrub Typhus) என அழைப்பார்கள். இது Orientia tsutsugamushi என்னும் சிறிய Richetsia ஆல் ஏற்படுகின்றது. ( பக்டீரியா போன்ற நுண்ணுயிர்) இந்தக்கிருமிகள் Trambiculid mits எனப்படும் தெள்ளின் குடம்பிப்பருவத்தினால் பரப்ப்படுகின்றன. இந்தக் குடம்பிகள் “சிகர்” (Chigger) என அழைக்கப்படுகின்றன. இக்குடம்பிகள் மிகச் சிறியவை (0.2mm) வெற்றுக்கண்களால் பார்க்கும்போது ஒரு சிகப்புப்புள்ளியாகத் தென்படும்.

Trambiculd mits பற்றைகளிலும் புதர்களிலும் வாழ்கின்றது. குடம்பிப்பருவம் மட்டும் விலங்குகளின் உடலி ஏறி ( குறிப்பாக எலிகள், முயல்கள்) தோலிலுள்ள திரவத்தை உறிஞ்சுகின்றன. இலைபற்றைகளின் இலைகளின் விளிம்பில் இருந்து விலங்குகளின் உடலில் ஏறுகின்றன. மனிதன் பற்றைக்காடுகளில் நடமாடும்போது மனிதனின் உடலில் ஏறி ஊர்ந்து சென்று மறைவான இடங்களில் கடிக்கின்றன. கடித்து 6 – 18 நாட்களில் காய்ச்சல் ஏற்படுகின்றது.

இனி உண்ணிக்காய்ச்சலின் அறிகுறிகளைப்பார்ப்போம்.

பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். தலையிடி, உடல்நோ, கண்கள் சிகப்படைதல் என்பவையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் சாதாரண வைரஸ்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், வெப்டோஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்களிலும் ஏற்படும் என்பதால் வேறுபடுத்தி அறிவது கடினம். ஆனால் உண்ணிக்காய்ச்சலைக் கண்டுபிடிக்க ஒரு வழியுண்டு அதுதான் Eschar எனப்படும் கறுப்பு நிற அயறு ஆகும். இது குடம்பி கடித்த இடத்தில் ஏற்படும். இது சிகரட் சுட்ட புண்ணைப்போன்ற அமைப்புடையது. இது கமக்கட்டு அரை போன்ற மறைவான ஈரளிப்பான இடங்களில் காணப்படும். இது நோவையோ சொறிச்சலையோ ஏற்படுத்துவதில்லை. எனவே நோயாளி இது பற்றிப்பெரிது படுத்துவதோ அவதானிப்பதோ இல்லை. தற்செயலாக நீங்கள் இதை அவதானித்தால் வைத்தியரிடம் தெரியப்படுத்துங்கள். ஆனால் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதமானவர்களுக்கே இந்த அயறு ஏற்படுகின்றது.

உண்ணிக்காய்ச்சலை கண்டுபிடிக்காமல் உரிய சிகிச்சையளிக்காமல் விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம், மூளை அழற்சி, நிமோனியா, இருதையப்பாதிப்பு, மற்றும் குருதியமுக்கம் குறைவடைதல் போன்ற பலபிரச்சினைகள் ஏற்பட்டு இறுதியில் இறப்பு ஏற்படலாம்.

உண்ணிக்காய்ச்சலுக்கு நல்ல சிகிச்சை முறைகள் உள்ளதால் தகுதியான வைத்தியரிடமோ அல்லது வைத்திய சாலையியோ காலம் தாழ்த்தாது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இனி உண்ணிக்காய்ச்சல் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

குடம்பிகள் பற்றைகளில் காணப்படுவதால் வீட்டைச் சுற்றியுள்ள பற்றைகளையும், புதர்களையும் அழித்து விடுங்கள். பீடை நாசினிகளை விசுறுவதன் மூலமும் குடம்பிகள் பரவுவதைத்தடுக்கலாம். பற்றைகளிலும் புதர்களிலும் நடமாடுவதை இயன்றளவில் தவிருங்கள் அவ்வாறு நடமாடவேண்டிய தேவையிருந்தால் சப்பாத்து, காலுறை, முழுநீளக்காற்சட்டை அணிந்து செல்லுங்கள். உங்கள் செல்லப்பிராணிகள், வளர்ப்பு மிருகங்களுக்கு தெள்ளு, உண்ணி என்பவை தொற்றாது பாதுகாத்துக்கொள்ளுங்கள். புற்தரையில் அமர்வதையும், குந்தியிருந்து மலசலம் கழிப்பதையும் தவிருங்கள். சித்திரனெல்லாப்புல்லெண்ணெய் போன்ற பூச்சிகளை விரட்டும் எண்ணெய்களை உடலில் பூசுவதன் மூலமும் ஒரளவு எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உண்ணிக்காய்ச்சல் அபாயகரமான மற்றும் பொதுவான நோயாகக்காணப்பட்டபோதிலும் இதைப்பற்றி விளிப்புணர்வு மக்களிடையே போதாமல் உள்ளது. எனவே உரிய தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுவதன் மூலமும் இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

Dr.S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்