அளப்பருங்கருணை – நடன நாடகத்தைப் பற்றியதோர் அறிமுகம்

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடமானது நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வித்தியாசமானதொரு கலைப் படைப்புடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. யாழ் மருத்துவ பீடத்தின் பழைய மாணவர்கள் – தற்போது வைத்தியர்களாகக் கடமை புரியவர்கள் – தமது பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வதிவிட வசதியை மேம்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பின் ஒரு பகுதியாக இந்த நடன நாடகத்தை மேடையேற்றுகிறார்கள்.

ஒருவருடைய சுகநலம் என்னும் எண்ணக்கருவை அவர் நோயற்று இருப்பது என்னும் குறுகிய வரைவலக்கணத்துக்குள் அடக்காது அவர் தனது உடல், உள, சமூக மற்றும் ஆத்மீக தளங்களில் நன்நிலையோடு இருத்தல் எனும் பரந்துபட்ட புரிதலுக்குள் உள்வாங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் விதந்துரை செய்கின்றது.

தற்போதைய சூழமைவில் நாம் மிகவும் வேகமாகவும், இயந்திரத்தனமாகவும் இயங்கிக் கொண்டும், நுகர்வுக் கலாசாரத்தில் அகப்பட்டுக் கொண்டும் அல்லலுற்று அலைகின்றோம். எமக்கு என்று தனித்துவமாக இருந்த பண்பாடுகள் பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் எனபவற்றைத் தொலைத்து விட்டு, நவீனம் என்கின்ற ஒரு எண்ணக் கருவின் ஓரிரு பக்கங்களை மட்டும் பிரதி செய்து வாழத் தலைப்படுகின்றோம்.

இதன் காரணமாக நாம் எம்மைப் பற்றியும், எம்மைச் சூழவுள்ள உலகு பற்றியும் அதிகம் அக்கறை செலுத்தாது, பொறுப்புணர்வு குறைந்தும், பொருத்தமான எதிர்வினைகளைக் காட்டத் தவறியும் வாழ்ந்து வருகின்றோம். எங்களின் இந்தப் பழக்கமானது பொதுவாக எதிர்பார்க்கப்படும் காலங்களுக்கு மிக முன்னதாகவே நோய்களை நோக்கி எம்மை அழைத்துச் செல்கின்றது. எங்களில் பலர் தற்பொழுது ஒன்றிற்கு மேற்பட்ட உடல் உள நோய்களோடு வாழ்க்கையை ஓட்டி வருகின்றோம்.

எமது உடல் உள ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தத் தவறும் நாம் வாழ்க்கை தொடர்பான தத்தவார்த்தமான சிந்தனைகளிலும் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றோம். எமது ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கிய பயணமானது வெறுமனே சமயச் சடங்குகளுக்குள்ளும், புண்ணிய பாவக் கணக்குகளுக்குள்ளும் மட்டுப்பட்டு நின்றுவிடப் பார்க்கின்றது.

இந்த விதமான ஒரு பின்னணியில், நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் ஆழமான சிந்தனைகளைத் தாங்கியதாக இந்தப் படைப்பு அமைந்திருக்கின்றது. தாகூரினுடைய ‘சன்யாசி’ எனும் நாடகத்தையும், அவருடைய ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘வசந்தத்தின் சுழற்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து முக்கியமான சில கவிதைகளையும் கொண்டதாக ‘அளப்பருங்கருணை’ எனும் இந்த நடன நாடகம் அமைந்திருக்கின்றது.

அதிகாலைப் பொழுதொன்றின் சூரியோதயத்தை வரவேற்கும் பாடலுடன் ஆரம்பிக்கும் இந்த நடன நாடகம் மகத்தான துறவியாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் ஒருவருடைய வாழ்க்கையின் முக்கியமான சில கணங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அவர் ஊரை விட்டும் உறவுகளை விட்டும் பிரிந்து சென்று, மலையடிவாரம் ஒன்றில் அமைந்துள்ள, இருள் படர்ந்த ஒரு குகையினுள், தனிமையில் இருந்தபடி தனது துறவு வாழ்க்கையை வாழ முயற்சிக்கின்றார். அவ்வப்போது அவர் மனிதர்களுடைய வாழ்வில் நடக்கின்ற பல சம்பவங்களையும், உறவு நிலைகளையும் புறத்தே நின்றபடி அவதானித்தும், அவை பற்றிய தனது எண்ணக் கிடக்கைகளை வெளிப்படுத்தியும் வருகின்றார். அந்த வேளையில் அவரிடம் தாய் தந்தை இல்லாத, அன்புக்காக ஏங்கியலைகின்ற ஒரு சிறுபெண் வந்து சேர்கின்றாள். அவளது வரவும், இயல்பாகப் பழகும் அவளது பண்பும் துறவியின் மனதில் அவர் இதுவரை அனுபவித்திராத மென்நய உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. இருதலைக் கொள்ளியினுள் அகப்பட்டதோர் உணர்வைப் பெறும் அவர் இறுதியில் அவளைத் துறந்து விடுவதுதான் சரி என முடிவெடுக்கின்றார். ஆயினும் காலஞ் செல்லச் செல்ல அவரது மனதில் அந்தச் சிறுபெண்ணின் வரவு ஏற்படுத்திய அதிர்வுகளை அவரால் மறுதலிக்க முடியவில்லை. அவர் தன்னில் ஏற்பட்ட அன்புசார் உணர்வுகளையும், பண்புசார் மாற்றங்களையும் விளங்கிக் கொள்ளத் தலைப்படுகின்றார். அவளைத் தேடியலைகின்றார்.

இந்த நடன நாடகத்தில் துறவியினுடைய எண்ணக் கிடக்கைகளுக்கும், நடைபெறும் சில சம்பவங்களுக்கும் பொருத்தமான எதிர்வினைகளையும், விளக்கங்களையும் கொடுப்பதனை நோக்காகக் கொண்டு தாகூரின் முக்கியமான சில கவிதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளானவை நாடகத்தில் கவிஞராக வருகின்ற ஒரு பாத்திரம் மூலமும், ஏனைய நடன மாந்தர்கள் ஊடாகவும் மறைபொருள் முறையில் அளிக்கை செய்யப்படுகின்றன.

‘எனது மீட்பு துறவில் இல்லை’ எனக் கூறும் தாகூர் அவர்கள், அந்த மீட்பானது ‘ஆனந்தத்தின் ஆயிரம் பிணைப்புகளில் விடுதலையின் அணைப்பை உணர்வதாகும்’ என வலியுறுத்துகின்றார். இயற்கையை மிகவும் இரசனையுடன் உள்வாங்கி, அதற்கு மதிப்பளிக்கும் தாகூர், தனது பல கவிதைகளில் அந்த இயற்கையிலேயே இறைபொருளைத் தரிசிக்கலாம் எனக் கூறுகின்றார். ‘நுழைவாயிலெல்லாம் மூடிய கோயிலின், இருள்நிறை தனிமையின் இந்த மூலையில் யாரையையா நீ வழிபடுகின்றாய்?’ எனக் கேள்வியெழுப்பும் தாகூர் அவர்கள் ‘கண்களைத் திறந்து உனது கடவுள் உன்முன் இல்லை என்பதை அறிவாய்’ என்று கூறி, ‘கடுநிலமதனைப் பண்படுத்தும் உழவனும், கற்களை உடைத்து வழிசமைப்போனும் இருக்கும் இடத்தில் அவன் இருக்கின்றான்ளூ வெயில் மழை இரண்டிலும் அவர்களோடிருக்கிறான்’ என்று அழகுறக் கூறுகின்றார். எமது வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் எமக்கு இறையன்பும் மெய்ஞ்ஞானமும் கிட்டுகின்ற பொழுதும், நாம் அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுப் பின்னர் வருந்தி அலைகிறோம் என்பதனைத் தாகூர் தனது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலியின்’ பல கவிதைகளில், தன்னை மையப்படுத்திச் சொல்வது போல் சொல்லியிருக்கின்றார். ‘தாமரை மலர்ந்த அந்த நாளன்று ஐயோ என் மனம் குறிகெட்டலைந்தது’ என்றும் ‘அந்தவேளை அதை நான் அறிந்திருக்கவில்லை’ என்றும் தாகூர் சுயபச்சாதாபம் கொள்கின்றார்.

இந்த நாடகத்தின் எழுத்துருவை ஆக்கிய ஈழத்தின் மூத்த நாடகவியலாளர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் கடந்த பல வருடங்களாக தாகூரின் பல்வேறுபட்ட படைப்புகளைப் வாசித்தும், தமிழில் மொழி பெயர்த்தும், தனது நண்பர்களுடன் பகிர்ந்தும் வருபவர். அவர் தன்னுடைய பார்வையில் ‘ஆனந்தத்தை உலகினில் தேடு, உன் வாழ்வினில் நாடு, அன்பினில் கண்டுகொள்’ என்பதே தாகூரின் அடிப்படையான சித்தாந்தமாக இருக்கின்றது எனத் தான் விளங்கிக் கொள்வதாகக் கூறுகிறார். அவ்வாறான ஒரு சிந்தனைத் தளத்துள் இருந்தே இந்த ‘அளப்பருங்கருணை’ நாடகமானது முகிழ்த்து எழுந்திருக்கின்றது. இந்நாடக எழுத்துருவானது சமகால வாழ்க்கை ஓட்டத்தின் பின்னணியில் தாகூரினுடைய சிந்தனைகளை அளிக்கை செய்கின்றது.

வசன கவிதைகளாலும், பாடல்களாலும் நிறைந்திருக்கும் இந்தாடகத்தின் நடன அளிக்கையை மிகவும் அனுபவம் மிக்க, மூத்த நடனக் கலைஞரான, பல்வேறு நடனவாளர்களின் குருவாக இருந்து, தனது தந்தையார் தொடக்கி வைத்த பணியைக் கொக்குவில் கலாபவனத்தினூடாகத் தொடர்ந்து வருபவரான திருமதி சாந்தினி சிவநேசன் அவர்கள் வடிவமைத்திருக்கின்றார். நடன வடிவமைப்பாளர்களுக்குச் சாவாலாக இருக்கக் கூடிய இந்த நாடக எழுத்துருவை அவர் தனது அனுபவ முதிர்ச்சியினூடு இலாவகமாகக் கையாண்டிருக்கின்றார். அவருக்கு உதவியாக அவரது மகளான திருமதி தேவந்தி திருநந்தன் அவர்கள் பணியாற்றியிருக்கின்றார்.

ஈழத்தில் நன்கு அறியப்பட்ட இசையாளாரான தவநாதன் றொபேட் அவர்கள் இந்த நடன நாடகத்தில் வருகின்ற அத்தனை கவிதைகளையும், பாடல்களையும் இசைகொண்டு ஆராதித்திருக்கின்றார். அவர் இந் நாடகத்திற்கான தனது இசையமைப்பை மிகுந்த சிரத்தையோடும், இரசனையோடும் ஓர் இசைவிருந்துக்கான பண்புகளோடமையும் வண்ணமும் மேற்கொண்டுள்ளார். தற்காலத்து நடைமுறை யதார்த்தத்தின் பல மட்டுப்படுத்தல்களுக்குள்ளும், தேர்ந்தெடுக்கப்பட்ட இசையாளர்களோடு அவர் அதனை அளிக்கை செய்கின்றார்.

இந்த நடன நாடகத்தின் இன்னுமொரு சிறப்பம்சமாக ஓவியக் கலைஞரான சனாதனன் அவர்களது இணைவு அமைந்திருக்கின்றது. அவர் இந்த நடன அளிக்கை முழுவதிலும் வர்ணங்களினாலும், வடிவங்களினாலும், தனது துறைசார் நிபுணத்துவத்தை வழங்கியிருக்கின்றார்.

இங்கே குறிப்பிட்டவர்களை விடவும் இன்னும் பல கலைஞர்களும், துறைசார் நிபுணர்களும் இந்த நடன நாடக அளிக்கையில் தம்மை இணைத்துள்ளார்கள். வழமையான கதைகளும், காவியம் அல்லது புராணங்களினது கூறுகளும் இல்லாத இந்த நடன நாடகமானது மாறுபட்ட சிந்தனையை ஆத்மீகம்சார் தளங்களில் தூண்டுவதாக அமைந்திருக்கின்றது. இன்னுமொரு வகையில் கூறினால் ‘இரண்டு மணி நேரச் சிந்தனைக்கு’ எனத் தாயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படைப்பானது எங்களது வழமையான வேகஓட்டங்களிலிருந்து விடுபட்டு, சற்று நின்று நிதானிக்க உதவும் என நாம் நம்பலாம்.

இந்தப் படைப்பைப் பார்வையிடுவதன் மூலம் நாம் வித்தியாசமானதோர் உணர்வையும் சிந்தனையோட்டத்தையும் பெறலாம். அத்துடன் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட யாழ் மருத்துவபீட மாணவர்களுடைய வதிவிட வசதிகளின் மேம்பாடுக்கான எமது பங்களிப்பையும் செய்தவர்களாகலாம்.

சா. சிவயோகன்
உளமருத்துவ நிபுணர்
(யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கம் சார்பாக)