வாயுத் தொல்லையால் அவதிப்படுகின்றேன். ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்?

இயற்கையுடன் இணைந்து வாழும் மனித சமூகத்தில் உணவு உண்ட பின்பு ஏப்பமிடுதலும், வாயு வெளியேறுதலும் இயற்கையான சாதாரண விடயமாகும். இது ஒரு நோய் அல்ல. இது ஒரு வகைத் தொல்லை. சிலருக்கு மிதமிஞ்சிய ஏப்பமிடுதலும். வயிறு ஊதுதல் மற்றும் வாயுத்தொல்லை, மலவாசலின் ஊடாக வாயு வெளியேறுதல் ஆகிய அசௌகரியத்தையும் மற்றவர்கள் உள்ள வேளைகளில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஏப்பமிடுதல் என்பது எமது வயிற்றில் உள்ள மேலதிகமான காற்றை வெளியேற்றுவதற்கு எமது உடல் செய்கின்ற செயற்பாடு ஆகும்.
நாம் அவசரமாக உண்ணும் போதும் , பருகும்போதும் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுறோம். இவற்றின் பெரும் பகுதி ஏப்பமாக வெளிவருகிறது. மிகுதி எமது உணவுக் கால்வாயின் ஊடு பயணம் செய்யும் போது ஒரளவு உறிஞ்சப்பட மிகுதி மலவாசலின் ஊடாக வாயுவாக வெளியேறுகிறது. அத்துடன் எளிதில் சமிபாடு அடையாத சிக்கலான புரதங்களையும் உடைய அவரை இன உணவுகள் பயறு, பருப்பு வகை போன்றவை சமிபாடு அடையும் போது வெளியிடப்படும் நைதரசன் போன்ற வாயுக்களும் எமது குடலால் உறிஞ்சப்படுவதில்லை. இவையும் மலவாசலின் ஊடாக வாயுவாக வெளியேறும். மற்றும் நாம் உண்ணும் உணவில் சமிபாடு அடையாத உணவுப் பகுதிகளுடன் பக்ரீறியா கிருமிகள் தாக்கத்துக்கு ஆளாகும் போது வாயு உற்பத்தியாகிறது. இதுவும் மலவாசலின் ஊடு வாயுவாக வெளியேறுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் அதிகநேரம் சமிபாடு அடையாத உணவுப் பகுதிகள் குடலில் தங்கியிருக்கும்போது அவ்வளவு நேரத்துக்கு உணவுப் பகுதிகள் நொதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதனால் வெளியேற்றப்படும் வாயுவும் நொதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதனால் வெளியேற்றப்படும் வாயுவும் வயிற்றுப் பொருமல் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்துகிறது.
சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் வெளிவருவது Acid Reflex அல்லது இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்குள் உணவு மேல் வருவது போன்ற கோளாறுகள். Gastroeso Phagal Reflex disease இதன்போதும் இருக்கும். இதை இல்லாமல் செய்வதற்காக மீண்டும் மீண்டும் விழுங்கவேண்டி ஏற்படும் போதும் கூடுதலான காற்றையும் விழுங்க வேண்டி ஏற்படுகின்றது. இதனாலும் வாயுத் தொல்லை ஏற்படுகின்றது. மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பல காரணங்களால் வயிற்றுப் பொருமல், வாயுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே இவற்றைக் குறைப்பதற்கு சில ஆலோசனைகள்
– மெதுவாக உண்ணுதல், பருகுதல் போதிய நேரம் எடுத்து ஆறுதலாக உண்பதால், பருகுவதால் காற்று உள்ளெடுப்பதை மிகவும் குறைத்துக் கொள்ள முடியும்.
-காபனேற் ஏற்றப்பட்ட பானங்கள் சோடா, பியர் போன்றவற்றை பருகுவதைத் தவிர்த்தல்.
-புகைத்தலைத் தவிருங்கள், புகையை உள்ளெடுக்கும் போது நீங்கள் காற்றையும் விழுங்கி விடுகிறீர்கள்.
-குறைந்த கொழுப்புள்ள உணவுகளை எடுங்கள். கொழுப்பு சமிபாடு அடைவதை தாமதப்படுத்துவதால் அதிக நேரம் உணவு குடலில் தங்கியிருக்கும் நிலை ஏற்படும். இதனால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்கும்.
-உணவு உண்டபின் நடவுங்கள். இது வாயுத் தொல்லைகளின் பாதிப்பைக் குறைக்கும்.
-உங்களுக்கும் அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுவகைகளைத் தவிருங்கள்.
-பயறு உழுந்து போன்ற அவரையின உணவு வகைகளைச் சமைக்கும் போது அவற்றை நீரில் நனைத்து அல்லது ஈரத்துணியில் மூடி வைத்து முளைக்க வைத்த பின் சமைப்பதால் இலகுவில் சமிபாடு அடைவதுடன் வாயுத்தொல்லையும் குறைவாக இருக்கும். நன்றாக வேகவைத்து உண்பது நல்லது.