ஆரம்ப கர்ப்ப காலமும் சில அறிவுரைகளும் Dr. கந்தையா குருபரன்

கர்ப்பம் தரித்தல் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகும். இது அந்த தாயின் முதலாவது பிள்ளையாக இருக்கலாம் இல்லை நான்காவது பிள்ளையாக இருக்கலாம். எத்தனையாவது கர்ப்பம் என்றாலும் சில சந்தேகங்கள் எல்லாரிடமும் இருக்கும். இதே மாதிரி திருமணமானவுடன் புதுமணதம்பதிகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்நோக்கும் ஒரு கேள்வி “இன்னும் வயிற்றில் ஒன்றும் உருவாக இல்லையா” என்பதாகும்.
கர்ப்பமாகிய முதல் மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானது. இந்த ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆரம்ப கர்ப்ப காலத்தில் பெரியளவில் எந்த பிரச்சினைகளையும் வருவதில்லை. ஏனெனில் கர்ப்பம் தரித்தல் ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதப்படுகிறது(normal physiology). ஒரு சுகதேகியான பெண் இலகுவில் கர்ப்பம் தரிக்கும் சாத்தியங்கள் அதிகம். ஏதாவது வருத்தங்கள் (வலிப்பு நோய், இதய வருத்தம்) இருப்பின், தாயாக முதல் உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுகொள்ளுதல் சிறந்தது. (Pre pregnancy counseling) தாயாகுதலை எதிர்பார்த்து இருக்கும் பெண்களுக்கு அவர்களுடைய மாத சுகவீனம் தள்ளிப்போகும் போது கர்ப்பம் தரித்துள்ளதா என்பதை மிக இலகுவில் ஒரு சிறுநீர் பரிசோதனை(urine pregnancy test) மூலம் சோதித்து அறிந்து கொள்ளலாம்.

பின்னர் அவர் தனது பகுதியிலுள்ள கிளினிக்கில் பதிந்து மேலதிக கவனிப்புகளை பெறலாம். இவ்வாறு செய்யும் போது சில அடிப்படை பரிசோதனைகளையும், மேலதிக சோதனைகளையும் செய்ய வேண்டி வரும்.

என்னென்ன மாற்றங்கள் இந்த நாட்களில் ஏற்படும்?

பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆரம்ப கர்ப்ப காலத்தில்

உடலில் காய்ச்சல் வருவது போல் இருக்கும்.
உடலில் உள்ள மூட்டுக்கள் நோகும்.
இலகுவில் களைப்படையலாம்.
உணவு சமிபாடடைவது குறையலாம் .
சிலருக்கு புளிப்பாக வாயில் ஊறுவது போலவும் இருக்கும்.
சிறுநீர் அடிக்கடி போக வேணும் போல் இருக்கலாம்
இப்படியான உடல் அறிகுறிகள் பிள்ளை கருவில் வளரும் போது ஏற்படும். ஆயினும் சிலருக்கு மட்டும் வைத்திய உதவியை நாடவேண்டிய தேவைகள் வரலாம். அவ்வாறான விடயங்களை நாம் பார்ப்போம்.

ஆரம்ப நாட்களில் உதிரப்போக்கு (Bleeding) சிறிதளவில் இருக்கலாம்.
சிலருக்கு உதிரப்போக்குடன் அடி வயிற்று நோவும்(Bleeding with lower abdominal pain) இருக்கலாம்.
சிலருக்கு எந்த உ ணவிலும் நாட்டமின்றி கூடியளவில் சத்தியும் வயிற்று பிரட்டும் இருக்கலாம்(nausea and vomiting).
இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்திய ஆலோசனையை நாடுதல் நல்லது

இரத்தப்போக்கு (Bleeding)

நோவுடன் கூடியதா அல்லது நோ இல்லாத இரத்தப்போக்கா என்பதே நாம் முதலில் கவனிக்க வேண்டியது. அத்துடன் இரத்தப்போக்கு (Bleeding) எத்தனையாவது கிழமையில் நிகழ்ந்தது என்பதும் முக்கியமானது .

எவ்வகையான இரத்தப்போக்கென்றாலும் உடனடியாக ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறவும்.
ஒரு ஸ்கேன் பரிசோதனை இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசியம்.
இதற்கான காரணங்களை முக்கியமாக இரண்டு வகைப்படுத்தலாம்.

• ஆரம்பகால கருச்சிதைவு (early miscarriage)
• கர்ப்பப்பைக்கு வெளியே தங்கிய கர்ப்பம் (ectopic pregnancy)

Capture

நோ கூடியளவில் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி மருத்துவ சேவையை நாட வேண்டும். இதனால் தேவை இல்லாத ஆபத்தான பின் விளைவுகளை தவிர்க்கலாம்.

இந்த இரத்தப்போக்கு சிலவேளைகளில் தானாக நின்றுபோய்விடும். சிலரில் நீண்டகாலம் (2-3 கிழமைகள்) தொடரலாம். இன்னும் சிலருக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படலாம்.
எதுவெனிலும் உரிய மருத்துவ சோதனைகளின் (இரத்தசோதனை, ஸ்கேன் பரிசோதனை) பின்பே சரியான காரணத்தை கண்டு பிடிக்கலாம்.

வயிற்று பிரட்டும் சத்தியும் (Nausea & Vomiting)
அடுத்த முக்கியமான ஒரு விடயம் சத்தியும் வயிற்று பிரட்டும் ஆகும். சாதாரணமாக ஆறுகிழமையளவில் ஆரம்பித்து பன்னிரு கிழமையளவில் முடிவுக்கு வரும் ஒரு அசௌகரியம் இதுவாகும்.

பொதுவாக மருந்துகள் எதுவுமின்றி தானாகவே சத்தி நிற்கும்.

சிலரில் மட்டும் உணவோ அல்லது நீராகாரமோ எடுக்க முடியாமல் உடலில் நீரிழப்பையும் இயலாமையையும்ஏற்படுத்தும்.
இவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். வைத்திய சாலையில் நின்று தேவையான சிகிச்சையை பெறவேண்டி வரும். சிலருக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்ய வேண்டியும் வரும்
சத்தியை நிறுத்தும் மருந்துகளும் சிலவேளைகளில் செலைன் திரவமும் வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள்.நோயின் தீவிரத்திற்கு ஏற்ற மாதிரி மருத்துவம் செய்யவேண்டி வரும்.
இலகுவில் செமிக்கக்கூடிய உணவுகளை யே இந்நாள்களில் எடுக்க வேண்டும்

Dr. கந்தையா குருபரன்
பெண் நோயியல் மகப்பேற்றியல் நிபுணர்