மீண்டிடுமா அக்காலம்??

நெல்லரிசி, வரகரிசி, சாமை, தினை, குரக்கன் என்று
பல்வேறு தானியங்கள் பக்குவமாய் பயிரிட்டு
பொல்லா நோய் அத்தனையும் பொசுக்கியது அக்காலம்

நாட்டுக்கோழி வறுத்து நற்சீரகம் சேர்த்து
கூட்டிக் குழம்பாக்கி குடும்பமாய் உட்கார்ந்து
பாட்டி வைத்தியத்தில் பசிதணித்ததக்காலம்

அரிசிமா சேர்த்து அதில் அளவாய்த்தேன் விட்டு
சரியாக நீர் சேர்த்து எங்கள் அம்மா களிக்கிண்ட
வரிசையாய் நின்று அதை ருசித்ததுவும் அக்காலம்

தினை அரிசிச் சோறும் கேள்வரகுக் கூழும்- எங்கள்
பனைமரத்துப் பதநீரும் பனங்கட்டித்துண்டுமொன்றாய்
பினைந்தெடுத்து ஊட்டிவிடபித்தானதக்காலம்

மண்சட்டிவைத்து அதில் மஞ்சள் மண மணக்க
தண்ணீரில் தோய்த்த பருப்பெடுத்து பால் சேர்த்து
உண்ணும் வரை எச்சில் ஊற வைத்ததக்காலம்

நண்டுக் குழம்புவிட்டு நாவாரருசித்த பின்னால்
துண்டுக் காலலெடுத்து அதை உறிஞ்சு இழுத்த பின்னால்
சுண்டுவிரல் நக்கிச்சுவை பார்த்ததக்காலம்

கடினமாய்க் கழனியிலே உழைத்துக்களைத்த பின்னால்
ஒடியல் கூழ் காய்ச்சிஉறவெல்லாம் ஒரு வீட்டில்
விடிய விடிய இருந்து விருந்துண்டதக்காலம்

விழாக்காலம் என்றாலே கொண்டாட்டம் ஊரெல்லாம்
உலாப் போந்த பின்னாலே உற்றாரும் மற்றாரும் நிலாச்சோறு உண்டு மனம்
களிந்திருந்ததக்காலம்

தேரோடும் வீதியிலே மோர்ப்பந்தல் போட்டு- அதில்
போராடிமோராடிநீராடி வீதியெல்லாம்
மோரோடிக்கிடந்துமணத்ததுவும் அக்காலம்

எங்கள் உணவுகளில் ஏற்றம் இறக்கமென்று
சொல்லுதற்கு ஒரு குறையுமில்லை – ஆனால்
எங்கள் உணவிதென்று மார்தட்ட எம்மிடத்தில்
இன்றோ பல வகைகள் இல்லை

எடுக்கும் அளவறிந்து உட்கொண்டால் எப்போதும்
தடுக்கும் பல நோயை உணவு – அதை
விடுத்து விதவிதமாய் வீணாகச்சாப்பிட்டால்

வைத்தியர்.கதிரேசபிள்ளை தர்ஸனன்