மலச்சிக்கலா? ஏன்? எப்போது?

சந்தர்ப்பம் 1

இடம் – வெளிநோயாளர் பிரிவு

வைத்தியர் – என்ன பிரச்சினை அம்மா?

தாய் – பிள்ளைக்கு மலச்சிக்கல், இப்ப அஞ்சு வயதாகுது. பிறந்ததில இருந்து இந்தப் பிரச்சினை இருக்குது. அடிக்கடி பாமசியில மருந்து எடது்துக் கொடுத்தாத்தான் கிரமமாப் போகும்.

வைத்தியர் – ஏன் இறுக்கமா, இரத்தம் கலந்து போறதா?

தாய் – இல்லை அப்படி ஒண்டும் இல்லை நோமலாத்தான் போறது. ஆனால் இரண்டு மூன்று நாளைக்கு ஒருக்காத்தான் போகும். ஒவ்வொரு நாளும் போறதுக்குத்தான் மருந்து கொடுத்தனான்.

சந்தர்ப்பம் 2

இடம் – குழந்தை நல கிளினிக்

வைத்தியர்- பிள்ளைக்கு மலச்சிக்கல் இருக்கிறபடியால் தான் பசிக்குறைவு, வளர்ச்சியின்மை எல்லாம் இருக்குது, ஏன் இவ்வளவு காலமும் வைத்திய ஆலோசனை எடுக்கேல்ல?

தாய் – இதலா வேறு பிரச்சினை ஏதுவும் இருக்கேல்ல. போற நாளில் மட்டும் தான் கொஞ்சநேரம் அழுகையும் ஆர்ப்பாட்டமும். அதுவும் ஐந்து நாளைக்கு ஒருக்காத்தானே … அதுதான் பிரச்சினை இல்லை எண்டுட்டு விட்டுட்டம்.

“மலச்சிக்கல்” சில வேளைகளில் அதீத மான பிரச்சினையாகக் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அதன் தீவிரம் உணரப்படாமல் மிக எளிதாக எடுக்கப்படுகிறது. மேலுள்ள இருசந்தர்ப்பங்களைப் போலவே.

ஒழுங்காக மலங்களித்தல் குழந்தையின் ஆரோக்கியத்தில் மிக இன்றியமையாத ஒரு விடயமாகும். ஒழுங்காக என்பது தினமும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 4 இலிருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை மலங்கழிப்பதும் உண்டு. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை மலங்கழிக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

வளர்ந்த சிறுவர்களில் 2 – 3 நாள்களுக்கு ஒருமுறை மலங்கழித்தல் சாதாரண நிலைமையாக கொள்ளப்படுகின்றது. அதிகரித்த கால இடை வெளியோடு மலத்தின் இறுக்கத்தன்மை, கழிக்கும் போது நோவை உணர்தல், மலத்துடன் இரத்தம் காணப்படுதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும் போதே “மலச்சிக்கல்” நோய் நிலைமையாக அடையாளம் காணப்படுகிறது.

இரண்டு கிழமைகளுக்கும் மேலாக, மலங்கழித்தலில் தாமதத்துடன் மேற்குறிப்பிட்ட சிக்கல்களும் உள்ள நிலைமையை “மலச்சிக்கல்” எனக்குறிப்பிடுகின்றோம். உணவுக்கால்வாயில் ஏற்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினையால் இந்த நிலைமை ஏற்படும்போது அல்லது தைரொயிட் சுரப்பி குறைபாட்டால் இந்த நிலைமை ஏற்படும்போது பிறந்த சில நாள்களில் இருந்தே மலச்சிக்கல் அடையாளங் காணப்படுகின்றது.

தொழிற்பாட்டுரீதியான “மலச்சிக்கல்” குழந்தையின் ஒருமாத வயது பூர்த்தியின் பின் எந்த வேளையிலும் உருவாகலாம். இது அதிகமான சந்தர்ப்பங்களில் மலங்கழிக்கும் போது பிள்ளை நோவை உணர்வதாலும் அதன் காரணமாக மலத்தை அடக்கப்படுவதாலும் ஏற்படுகின்றது.

மலங்கழிக்கும்போது, நோவை உணர்வதற்கு மலத்தின் இறுக்கத்தன்மையே பெரும்பாலும் காரணமாகிறது. உண்ணும் உணவில் நார்த்தன்மையுள்ள உணவுகள் குறைதல், போதியளவு நீர் அருந்தாமை என்பன இதில் பங்களிக்கின்றன. மலங்கழிக்கப்பழகுவதில் உள்ள குறைபாடுகளும் மலச்சிக்கலை ஏற்படுவதில் மிகப் பெருமளவு பங்களிக்கின்றன. மலங்கழித்தலுக்கான ஏற்ற சூழலை உருவாக்குவது மிக அவசியமானது.

குழந்தை மலங்கழிக்கும் உணர்வை சைகைகளாகவோ வார்த்தை மூலமாகவோ வெளிப்படுத்தும்போது அதை அடையாளம் காண்பது இவற்றில் முதற்படியாகும். குழந்தையின் வயதுக்கேற்றபடி, மலப்பெட்டியிலோ (Potty) அல்லது மலசல கூடத்திலோ அமர்த்திப் பழக்குவது மிக நன்று.

இவ்வாறு பழக்கும்போது பிள்ளைகள் நின்று கொண்டோ அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் போதோ மலங்கழிக்கப் பழகுவதும் உண்டு. இதன்போது மலங்கழித்தல் நிகழ்வுக்ப் பங்களிக்கின்ற தசைகளின் தொழிற்பாடு பூரணமாகக் கிடைப்பதில்லை. மலங்கழிப்பதன் பூரணமாக திருப்தியைக் குழந்தை பெறுவதுமில்லை. இதனால் அடுத்த தடவை மலங்கழிக்கும் உணர்வை குழந்தை பெறும்போது அதைச் செயற்படுத்துவதில் தயக்கம் கொள்கிறது. ஒழுங்கற்ற மலங்கழித்தல் திணமத் தன்மையான இறுக்கமான மலத்தை உருவாக்குகிறது. அத்துடன் மலங்கழிக்கும்போது நோவை ஏற்படுத்தி மலச்சிக்கல் என்ற நோய் நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது.

வெட்கம் காரணமாகவே, மலங்கழித்தலின்போது ஏதாவது காரணங்களுக்காக தண்டிக்கப்படுவதாலோ அல்லது பயத்தினாலோ மேற்குறிப்பிட்ட வகையான மலச்சிக்கல் உருவாக வாய்ப்புண்டு.

குழந்தை வளரும்போது மலங்கழிக்கும் செயலை குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்தில் அமர்த்திக் கிரமமாக பழக்கமாக மாற்றுவது அவசியம். தினமும் ஒரு வேளையில் சாப்பாட்டுக்கு பின் 10 – 15 நிமிடங்கள் அமர்த்திப் பழக்குவது நல்லது. வேறு நோய்கள் ஏற்படும் போது, வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, மலங்கழித்தலில் ஒழுங்கு மாற்றங்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.

நோயின் தீவிரத்தைப் போலவே, தேவையற்ற அல்லது நீண்டகால மருந்துப்பாவனையும் குழந்தைகளின் உடல் நலத்துக்கு மிகப் பாதிப்பை ஏற்படுத்தவல்லது.

மலச்சிக்கலுக்கான காரணியைக் கண்டறிந்து அதை நீக்குவது சிகிச்சையின் முதற்படியாகும். முறையான உணவுப் பழக்கங்கள், போதியளவு நீர் அருந்துதல் என்பன உறுதிசெய்யப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணவுண்ணப் பழக்குவது போல் மலங்கழித்தலைப் பயிற்றுவிப்பதையும் பெற்றோர் முக்கிய கடமையாக கருதுவது அவசியம். மலங்கழிக்கும் சூழல் வெட்கம், பயம், அருவெறுப்பு ஆகிய உணர்வுகளை தோற்றுவிக்காததாக அமைவது அவசியமாகும்.

மலச்சிக்கல் தொழிற்பாட்டு ரீதியான தெனினும் ஆரம்பத்தில் மருந்துப் பாவனை தேவைப்படலாம். எந்த வேளையிலும் மருத்துவரின் ஆலோசனையுடனேயே மருந்தைப் பெறவேண்டும்.

ஒருதடவை கொடுத்த மருந்தை மருத்துவ ஆலோசனை இன்றி மீள மருந்துக்கடைகளில் பெற்று பயன்படுத்துவது பொதுவாக அவதானிக்கப்படுவதொன்று, இது குழந்தையின் இயல்பான மலங்கழித்தலை மிக பாரதூரமாகப் பாதிக்கும் ஒரு விடயமாகும்.

ஒழுங்கான மலங்கழித்தல் பயிற்சியும், ஆரோக்கியமான மலங்கழிக்கும் சூழலும் குழந்தையின் வயது தொழிற்பாடுகளுக்கு தகுந்தவையாக வழங்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட செயன்முறைகளால் மலச்சிக்கலைக் குணப்படுத்தப்பட முடியாதபோது. வைத்திய ஆலோசனையை நாடுவது அவசியம். ஏனெனில் இந்த மலச்சிக்கலானது சில அரிதாகக் காணப்படுகின்ற நோய் நிலைமைகளாலும் ஏற்படலாம். நீண்டகால மலச்சிக்கலானது குழந்தையின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உள ஆரோக்கியத்திலும் இந்த நிலைமை பெரிய தாக்கத்தை விளைவிக்கின்றது.

மலச்சிக்கல் எனும் நோய்நிலைமையைச் சரியாக ஆரம்ப நாட்களிலேயே அடையாளம் காண்பதாலும் சரியான முறைகளைக் கடைப்பிடிப்பதாலும் குழந்தையின் உடல், உள ஆரோக்கியத்தில் நேர்முகமான பங்களிப்பைச் செய்ய முடியும்.

வைத்தியர் குமுதினி ,கலையழகன் குழந்தைநல வைத்திய நிபுணர்