“மற்றும் ஒரு கற்பகதரு ஜம்பு..”

எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது ஜம்பு. இதுவோர் முதல் இலை வரை பயன்படக்கூடியதும் மருத்துவ குணங்களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும்.

ஜம்பு மரத்தினுடைய வரலாறு, பயன்கள் எப்படி நடுவது என்பவை பற்றிப் பார்ப்போம்.

ஜம்பு மரத்தின் வரலாறு

முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே ”ஜம்பு” என்றழைப்பது போல் ஆங்கிலத்தில் இதனை றோஸ் அப்பிள் (Rose apple), பெல் பழம் (Bell fruit), றோயல் அப்பிள் ( Royal apple) வாக்ஸ் பழம் (Wax furit) என்றழைப்பார்கள்.
அதிலும் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கருஞ்சிவப்பு நிறமான ஜம்புப் பழத்தை (Black pearl) அதாவது கறுப்பு முத்து என்று அழைப்பார்கள்.
இதனுடைய தாவரவியல் விஞ்ஞானப் பெயர் Syzygium samarangense ஆகும்.
ஜம்பு மரம் இந்தியா, இந்தோனேஷியா நாடுகளினதும், அந்தமான், நிக்கோபார், மலேயா தீவுகளின் கடற்கரையோடு காடுகளினதும் சுதேசமரமாகும்.
அதன்பிறகு, வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே பிலிப்பைன்ஸ் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அசோகச் சக்கரவர்த்தியின் மகன் “மகிந்த” என்ற மன்னன் ஜம்பு மரத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இலங்கை மன்னன் தேவநம்பிய தீசனிடம் கொடுத்ததாக மகாவம்ச வரலாறு கூறுகிறது.
ஜம்புமரம் உயர் வெப்ப மண்டலத்தின் தாழ் நிலங்களில் மிகச் சிறப்பாக வளரக்கூடியது.
இலங்கையின் காலநிலையைப் பொறுத்தவரையில் இது மிகவும் சிறப்பாக வளரக்கூடியது. அதுவும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் ஜம்பு மரம் கனிகளைத் தரக்கூடிய காலமாகும்.
ஒரு மரத்தில் இருந்து 700 வரையான கனிகளைப் பெறமுடியும்.
ஒருமரம் 15 அடி முதல் 50 அடிவரையும் வளரக்கூடியது.
முன்னைய காலங்களில் ஜம்பு பழங்களை உண்டுபார்த்தபின் இப்போது இந்த ஜம்பு மரத்துக்கும் எமது இந்து புராணக்கதைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அறிய முடிகிறது.
விஸ்ணு புராணத்தில் இந்தப் பிரபஞ்சம், 7 தீவு கண்டங்களாகவும் அதனைச்சூழவுள்ள 7 சமுத்திரங்களாகவும் பிரிக்கப்பட்டது. ஒரு கண்டத்தில் ஜம்பு மரங்கள் செறிந்து காணப்பட்டதால் ஜம்புத் தீவு அதாவது ஜம்பு மரங்கள் செறிந்து காணப்பட்டதால் ஜம்புத் தீவு அதாவது ஜம்பு மரங்களின் நாடு என்று அழைக்கப்பட்டது. என்று விஸ்ணு புராணத்தில் கூறப்படுகின்றது.
எம் எல்லோருக்கும் தெரிந்த அயல் நாடான இந்தியாவே முன்பு ஜம்புத்தீவு என்றழைக்கப்பட்டது.
விஸ்ணு புராணத்தின் இன்னுமொரு பகுதியில் இந்த ஜம்பு பழங்கள் மிகவும் பெரியன அதாவது யானையளவு பெரியன எனவும் மலையொன்றின் உச்சியிலே காணப்பட்ட ஜம்பு மரங்களில் இருந்து கீழே விழுந்து வெளிப்பட்ட பழச்சாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நதியாக ஒடியது எனவும் அதுவே ஜம்பு நதி எனவும் கூறப்படுகின்றது.
அதைவிட இன்று இந்தியாவின் திருச்சிராப்பள்ளியின் அருகிலுள்ள ஸ்ரீ ரங்கத்தில் ஜம்புகேஸ்வர கோயிலின் ஸ்தல புராணத்தில் இன்றும் கோயிலில் காணப்படுகின்ற ஜம்பு மரத்தின் கீழுள்ள சிவலிங்கம் பற்றி ஒரு கதை இருக்கின்றது.சிவபெருமான் ஒரு நாள் மரமொன்றின் கீழ் இருந்து தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ள மரமொன்றிலிருந்து பழம் ஒன்று இவர் அருகில் விழுந்தது. சிவபெருமான் அந்தப் பழத்தை எடுத்து உண்டுவிட்டு அதனுடைய வித்தை வெளியே துப்பினார். அந்த வித்திலிருந்து முளைத்த மரமே ஜம்பு மரமாகவும் சிவபெருமானே சிவலிங்கமாகவும் அவ்விடத்தில் இன்றும் வழிபடப்படுகின்றது.
இராமாயணத்தில் இராமர் 14 ஆண்டு கால வனவாசத்தின் போது காட்டிலுள்ள இந்த ஜம்புப் பழங்களை உண்டார் எனவும் இராமாயணக் கதை கூறுகின்றது.
இந்த ஜம்பு மரம் பெரிய மரக்கொப்புகளைக் கொண்டதும், பெரிய நிழல் தரக்கூடிய குளிர்ச்சியான மரம் என்பதால் பல ஞானிகள், யோகிகள் இந்த மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தார்கள் என பல கதைகள் உண்டு.
பழம்

உணவாகப் பயன்படுகின்றது. நீர்த்தன்மை கூடிய பழம், உடலின் குளிர்மையைப் பேணுகிறது. பழத்தில் பழச்சாறு செய்து பருகலாம். ஒரு சலரோக நோயாளியைப் பார்த்து ஒரு துண்டு மாம்பழம் உண்ணுங்கள் என்போம் ஒரு துண்டு சுவைத்தவரால் மீதியைவிட்டு வைக்க மனம் வராது. இவ்வாறு உண்டு சலரோகம் கட்டுப்பாடு இழந்து வைததியசாலையே வாசம் என இருப்போர் மத்தியில் ஜம்புப்பழத்தின் அறிமுகமானது ஒரு கொடை, இந்தப்பழத்தை விரும்பிய அளவு உண்ணலாம் கெடுதல் இல்லை.

ஜம்புப்பழம் இலை, பூ, விதைகள், வேர், பட்டை என்பவற்றில் மருத்துவத் தன்மைகள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. சில ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஜம்புப்பழம் விற்றமின் “சி” கூடிய உணவாகவும், நார்த்தன்மை கூடிய உணவாகவும் காணப்படுகின்றது. நார்த்தன்மை காரணமாக உடலின் கொழுப்புத் தன்மை அதாவது Cholesterol குறைவடைவதாக ஆய்வுகளிலிருந்து அறியப்படுகின்றது. சதையின் தொழிற்பாடு குறைவடைவதால் ஏற்படும் சலரோக நோயாளிகளில் மாச்சத்து வெல்லமாக மாறுவதைக் கட்டுப்படுதுகிறது.

ஜம்புப்பழ வித்தில் Jumboline என்ற இரசாயனப் பதார்த்தம் காணப்படுகின்றது. இது சலத்தில் வெளியேறும் வெல்லத்தின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஜம்புப்பழம் மறைமுகமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறைக் குறைப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜம்புப் பழச்சாறு மூளை, ஈரல்களுக்கு நன்மையளிப்பதாகவும், ஜம்புப் பூவிலிருந்து பெறப்படும் சாறு காய்ச்சலைக் குறைப்பதாகவும். இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இருமல், மூட்டு வாதத்துக்கு பயன் படுவதாயும் சிறுநீரின் அளவை அதிகரிக்கும் (Diuretic) தன்மையைக் கொண்டிருப்பதாயும் ஆய்வுகள் கூறுகின்றன. ஜம்புப்பழ விதைகளில் உணர் வழியில் தன்மை இருப்பதாகவும், வேரில் வலிப்பு நோயைக் குறைக்கும் தன்மை காணப்படுவதாகவும் நம்பப்படுகின்றது. மருத்துவம் தவிர விதைகள் நீக்கப்பட்ட பழத்திலிருந்து – பன்னீர், இலைச் சாற்றிலிருந்து வாசனைத்திரவியம் (perfume) மற்றும் மரத்திலிருந்து வயலின், கிற்றார், போன்ற இசைக்கருவிகளும் உருவாக்கப் படுகின்றன.

நடுவது எப்படி?

கீழ்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு நடவேண்டும்.

2 x 2 x 2 அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழி வெட்டவும். மரக்கன்றுகளை இயற்கை உரம் கொண்டு மூடவும்.
முதற்கிழமை ஒவ்வொருநாளும் நீர் ஊற்றவும்.
இரண்டாவது கிழமை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றவும்.
மூன்றாவது கிழமை மூன்று நாள்களுக்கு ஒரு முறை நீருற்றவும்.
மூன்று மாதங்கள் கடந்த பின் கீழ்பகுதியில் உள்ள பக்க கிளைகளை கத்தரித்து விடுவதன் மூலம் நேராக வளர்க்க முடியும்.
சிறிய நிலப்பரப்புகள் உள்ள வீடுகளிலும் வளர்க்க முடியும். வருடத்துக்கு இரு தடவைகள் பழங்களைத் தரக்கூடியது. வலை கொண்டு மரத்தை மூடுவதன் மூலமும், பைகள் கொண்டு பழங்களை மறைப்பதன் மூலமும் பறவைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.

வீட்டிற்கொரு ஜம்புமரம் நடுவோம் பயன்பெறுவோம்