உரிமைப்போராட்டம் – 2 சி. சிவன்சுதன்

??????????? ??????

ஒருவரின் உரிமைகளை இன்னொருவர் மதித்து நடக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான சமுதாயம் உதயமாகும் அந்த வகையில் நோயுற்று இருக்கும் ஒருவரின் உரிமைகள் என்ன? அது மீறப்படுவதை தடுப்பதற்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது..
முதலாவதாக நோயுற்றவரின் நோய்நிலை சம்பந்தமான தகவல்கள் பிறருக்கு தெரியாதவாறு இரகசியமாகப் பேணப்படுகின்றனவா?” என்ற வினாவை முன்வைத்தால் அதற்கு இல்லை என்பதே பதிலாக வருகின்றது. நோயுற்ற ஒருவரின் நோய் சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் உணர்வபூர்வமானவை. அது சாதாரண நோயாக இருந்தாலும், கடுமையான நோயாக இருந்தாலும் அல்லது அது அவரின் அந்தரங்கங்கள் சம்பந்தப்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோய் சம்பந்தமான தவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாக்கவேண்டியது மருத்துவக் குழுவின் கடமையாகும்.
18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தமது சுகாதார நிலை சம்பந்தமான தகவல்களை வேறு எவருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் உரிமை இருக்கின்றது. சம்பந்தப்பட்டவரின் அனுமதி இன்றி அவரின் நெருங்கிய உறவுகளான பெற்றோருக்கோ, கணவன் மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ கூட அவரின் மருத்துவ தகவல்களை தெரிவிக்கும் உரிமை மருத்துவக் குழுவிற்கு இல்லை. நோயுற்றவர் வைத்தியரிடம் தனிப்பட்டமுறையில் பேச விருப்பப்பட்டால் அதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு பெற்றுக்கொள்ளும் உரிமையும் அவருக்கு இருக்கின்றது.
வைத்தியத்துறையிலே இவை எவ்வளவுதூரம் கடைப்பிடிக்கப்படுகினறன? இவற்றை கடைப்பிடிப்பதிலே எதிர்நோக்கப்படுகின்ற சிக்கல்கள் எவை? என்பது பற்றி சிந்திப்பது பயன்தரும்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள், எதிரிகள், விடுப்புவிசாரிப்போர் போன்ற பலதரப்பட்டவர்களும் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நேரடியாகவும் தொலைபேசிமூலமாகவும் மருத்துவக்குழுவிடம் நோயுற்றவரின் நோய்நிலை சம்பந்தமாக வினவுவது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்துவருகின்றது. அத்துடன் நிவாரணம் பெறுவதற்கும் குடும்ப உறுப்பினர்கள் விசா பெறுவதற்கும், குடும்பபத்தவரின் தொழில் இடமாற்றம் தொடர்பான விடயங்களை கையாழ்வதற்கும் றோயுற்றவரின் இரகசியமான மருத்துவத் தகவல்களை கடிதம் மூலம் எழுதித்தருமாறு கேட்டு வைத்தியரிடம் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
சிலசமயம் பத்திரிகைகள் கூட நோயுற்றவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றன. உதாரணமாக “AIDS நோயாளி வைத்திய சாலையில் அனுமதி” “பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமிக்கு சிகிச்சை” “சட்டவிரோத கருகலைப்பு பெண் ஆபத்தான நிலையில் அனுமதி” போன்ற செய்திகள் சர்வசாதரணமாகி வருகின்றது.
தமது நோய்நிலை அம்பலப்படுத்தப்பட்டுவிடும் என்று அஞ்சி பலர் தமது நோய் நிலையின் உண்மையான வடிவத்தை மருத்துவரிடம் வெளிப்படுத்த தயங்குகின்றனர். இதனால் பல பாரதூரமான விளைவுகளும் ஏன் இறப்புகளும்கூட ஏற்பட்டுவருகின்றன.
ஒரு குடும்பமோ சமூகமோ அல்லது மருத்துவக்குழுவோ நோயுற்றவர்மீது அவரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சிகிச்சைமுறையை திணிக்கமுடியாது. மருத்துவக்குழு நோயுற்றவர்களுக்கு சொல்வது ஆலோசனைகளே தவிர கட்டளைகள் அல்ல. அது அவரது மருந்துகள் சம்பந்தமாக இருந்தாலும் சத்திரசிகிச்சைகள் சம்பந்தமாக இருந்தாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு இறுதித்தீர்மானம் எடுக்கும் உரிமை நோயுற்றவர்களுக்கே இருக்கின்றது. அந்த ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படா விட்டால் கோபித்துக்கொள்ளும் உரிமை மருத்துவக்குழுவுக்கு இல்லை. உதாரணமாக ஒருவர் கொடுக்கப்பட்ட மருந்துகளை ஒழுங்காக பாவிக்காது உடற்பயிற்சியோ உணவுக்கட்டுப்பாடோ எதுவும் செய்யாது உடல் பருத்து புகைக்கும் தன் பழக்கத்தையும் தொடர்ந்து கொண்டு குடிபோதையில் மருத்துவரைச் சந்திக்கப்போனால் கூட அவரைக் கோபித்துக்கொள்ளும் உரிமை மருத்துவக் குழுவிற்கு இல்லை.

தொடரும்…

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்