உரிமைப்போராட்டம் – 3 சி. சிவன்சுதன்

??????????? ??????

ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால் அவரின் தன் உடல் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமைகள் பல பறித்தெடுக்கப்பட்டுவிடுகின்றன. அவர் விரும்பும் உணவுகள் மறுக்கப்படும். சுவையற்ற உண்பதற்கு கஷ்டமான உணவுகள் அவர்மீது திணிக்கப்படும். அவருக்கு நோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அவர் அன்றாடம் செய்யும் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்படும். நோயுற்றவருடன் கலந்துரையாடாமல் அவரின் உண்மையான விருப்பு வெறுப்புக்கள் கேட்கப்படாமல் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானத்தின்பேரில் அவர் மீது பல சிகிச்சை முறைகளும் மற்றய கவனிப்பு முறைகளும் திணிக்கப்படும் நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுவிடுகிறது.
ஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனிற்கு இருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது மனிதத்துவம் ஆகாது. அந்தவகையிலே நோயுற்றவர் தனது சொந்த விருப்பப்படி நடந்துகொள்ளும் உரிமையும் மதிக்கப்படவேண்டும்.

ஒருவருடைய உடல் சம்பந்தமான விடயங்களை தீர்மானிக்கும் பொறுப்பு அவரிடமேயே இருக்கிறது. தனது நோய் நிலை சம்பந்தமான முழு விபரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உரிமை, அதற்கு செய்யக்கூடிய வைத்திய முறைகளால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை, ஒவ்வொரு சோதனைகளும் ஏதற்காகச் செய்யப்படுகின்றன என்று கேட்டு தெரிந்து கொள்ளும் உரிமை, உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு நடத்தை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் பிரதி கூலங்கள் எவை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை போன்ற உரிமைகளை நோயுற்ற ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே அவரினால் தனது சிகிச்சைமுறைகள் சம்பந்தமான தீர்மானத்தை சரியான முறையில் எடுக்கமுடியும்.
ஒரு சிகிச்சை முறையில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதவிடத்து அதனை வேண்டாம் என்று மறுதலிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இதற்காக மருத்துவக்குழு அவரை கோபித்துக்கொள்ள முடியாது.
ஒருவர் ஒரு சிகிச்சை முறையை மறுதலித்தால் அவருக்கு வேறு எந்த முறைகளில் மருத்துவம் செய்யமுடியும் என்பது பற்றியே மருத்துவக் குழு ஆராயும். இதனால் நோயுற்றவருக்கும் மருத்துவக்குழுவிற்கும் இடையில் இருக்கும் உறவுநிலையிலோ அல்லது புரிந்துணர்விலோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படமாட்டாது. பொருத்தமான சிகிச்சை முறைகளை தெரிந்தெடுப்பதில் நோயுற்றவருக்கும் மருத்துவக்குழுவிற்கும் சமபங்கு இருக்கின்றது.
நோயுற்ற ஒருவர் மருந்தை பாவிக்காமல் இருப்பதற்கு விருப்பப்படலாம், சத்திரசிகிச்சை செய்யாமல் இருக்க விரும்பலாம், தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விருப்பப்படலாம் உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய சோதனைகளை செய்யாமல் விடுவோம் என்று நினைக்கலாம், தொடர்ந்து குடிவகைகள் பாவிக்க ஆசைப்படலாம், வேறோரு மருத்துவரின் இரண்டாவது அபிப்பிராயத்தை கேட்க விரும்பலாம், கோயிலுக்குச் சென்று சில சமயப்பெரியவர்களின் ஆசியும் அறிவுரையும் பெற்றுவர விருப்பப்படலாம், வேறு ஒரு மருத்துவ முறைக்கு மாறுவதற்கு விருப்பப்படலாம், சொந்த விருப்பத்தின் பெயரில் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல நினைக்கலாம், உணவுக்கட்டுப்பாட்டை தவிர்த்துக்கொள்ள விருப்பப்படலாம். இது போன்ற பல விருப்பங்கள் நோய்வாய்பட்ட ஒருவருக்கு இருக்க முடியும். மருத்துவத்துறையிலே ஒருவர் வாழும் காலத்தை நீடிக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோனதோ அதே அளவு முக்கியத்துவம் அவர் வாழும் காலத்திலே மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழவேண்டும், வாழவைக்கவேண்டும் என்பதிலும் இருக்கின்றது. எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் தமது மனநிறைவுக்காக சுகாதாரம் சம்பந்தமான தமது சொந்த விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு தயங்காமல் தெரியப்படுத்த முடியும். அந்த விருப்பங்களை நிறைவுசெய்ய உதவுவது மத்துவக் குழுவின் கடமையாகும்.
ஒவ்வொருவரும் தமது உண்மையான நிலைப்பாட்டை அல்லது விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு சொல்வதனால் அவர்களின் மருத்துவக் கவனிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிவிடமுடியாது. மருத்துவக்குழு நோய்வாய்ப்பட்டவருக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த இது உதவியாக இருக்கும். அத்துடன் ஒருவர் சத்திரசிகிச்சை செய்ய விரும்பாவிடின் வேறு என்ன சிகிச்சைகள் செய்ய முடியும் எனச் சிந்திக்கலாம். சிலவகையான மருந்துகளை ஒருவர் பாவிக்க விரும்பாவிடின் வேறு எந்த மருந்துகள் மூலம் அல்லது நடைமுறைகள் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் எனச் சிந்திக்க முடியும். ஒருவர் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வீடுசெல்ல விருப்பப்படின் வீட்டுச் சூழ்நிலையிலும் கிளினிக் மட்டத்திலும் அவரின் மருத்துவக் கவனிப்பை எவ்வாறு தொடரமுடியும் எனச் சிந்திக்க முடியும். வேறு ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனையையும் பெறவிருப்பப்பட்டால் அதனையும் ஒழுங்குசெய்து கொடுக்க முடியும். புகைக்கவோ குடிக்கவோ விருப்பப்பட்டால் அதற்கு அடிப்படைக்காரணங்கள் என்ன என்பதை ஆராயமுடியும்.
தொடரும்…..

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்