கோபம் வரும்போது தன்னை அடக்குபவனே உண்மையான பலசாலி

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆவான்.

கோபம் தன்னையே அழித்துவிடும். மனித தத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்குப் பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்குத் தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. கோபம் வரும் போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கின்றான்.

கோபத்தைக் குறைக்கச் சில வழிகள்.

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பைக் கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள், நிதானமாகக் கோபமூட்டிய நபரின் சூழ்நிலையைச் சிந்தியுங்கள்.
கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விடயத்தில் திருப்புங்கள்.
அவசரம் ஒரு போதும் வேண்டாம் பொறுமையாக இருங்கள்.
நேரம், மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் குழப்பமில்லாமலும் செய்யுங்கள்.
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மௌனமாக இருங்கள்.
நமது கௌரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களைவிட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடவுங்கள், நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
கோபம் வருகின்றது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள். நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் நிச்சயமாக நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.
உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

உணர்ச்சிவசப்படுதல் தான் பல்வெறு நோய்களுக்கும் மூலகாரணம் என்பது ஏனோ யாரும் புரிந்துகொள்ளுவதில்லை. இதனால் தூக்கத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்க வேண்டியிருக்கின்றது. இது மேலும் நமது உடல் நலனைப் பாதிக்கின்றது.

சரி இந்த உணர்ச்சிவசப்படுதலிருந்து விடுபடுவது எப்படி? இதோ சில யோசனைகள்.

முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி, கவலைப்படுவதற்கல்ல என்று நினையுங்கள். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதனால் பிரச்சினையே வாழ்க்கையாவது தான் சிலரது சோகம்.

நீங்களே உங்களுக்கு உற்ற நண்பர்கள். நீங்களே உங்களுக்கு பகை என்று நினைவில் கொள்ளுங்கள். நமது மேன்மைக்கும் தாழ்வுக்கும் நாமேதான் காரணமேயன்றி யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு போதும் பிறரைக் குறை சொல்லாதீர்கள். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சும்மா இருந்து விடுங்கள். நிங்கள் உலகத்தைத் திரருத்தப்போகும் தலைவனாக ஒரு போதும் நினைத்துக்கொள்ளாதீர்கள். பிறருக்கு வலியச் சென்று ஆலோசனை கூறுகிறேன் என்று வாங்கிக்கட்டிக்கொள்ளாதீர்கள். கேட்டால் மட்டும் சொல்லுங்கள். அதுவும் இது என்னுடைய கருத்து உங்களுக்கு உதவுமானால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பேசுங்கள்.

உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக்கொண்டு செல்லுங்கள். அநாவசியமாகப் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். இயற்கை நியதி என்னவென்றால் நல்லதை நினைத்தால் நல்லபடியே எல்லாம் நடக்கும். ஆகவே, ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். மனிதப் பிறவி இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். இலாபமாகக் கருதுங்கள். வளமோடு வாழ முற்படுங்கள். சுற்றுச்சூழலும் உங்களது குடும்பத்தாரும், நண்பர்களும் மற்றவர்களும் ஏடாகூடமாக நடந்து கொண்டாலும். அதனால் நீங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நமக்கு எதாவது கஸ்டம் வந்திடுமோ என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்குக் கஸ்டம் வருகிறது என்றால் நமக்கு வரக்கூடாதா? குழந்தையைப் போல மனம் இருந்தால் உங்களுக்கு ஒருபோதும் துன்பம் இல்லை.

கஸ்டமும் நஷ்டமும் இன்ப துன்பமும் இல்லாத வாழ்க்கை இல்லையே. சுழற்சிவட்டம் போல மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியில் தொடர்ந்து செல்லுங்கள். பிறர் யோசனை கூறினால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். யாருக்கும் வராத பிரச்சினை நமக்கு வந்துவிடவில்லை. அதனை தைரியமாக சமாளிக்கலாம் என்று நம்புங்கள். மக உறுதியுடன் அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ளுங்கள் காலம் மனப்புண்ணை ஆற்றும் அருமருந்தாகும். அதனால் ஆறப்போடுங்கள். பின்பு அந்தப் பிரச்சினை பிரச்சினையாகவே தோன்றாது. இதற்கு போய் வீணாக அலட்டிக்கொண்டோமே என்று எண்ணத்தோன்றும்.

ஆரம்பத்தில் எண்ண ஒட்டத்தில் மனம் அடங்காமல் உழைச்சல் அதிகமாகத்தான் இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வெறும் குப்பை. அவற்றைப் புறம் தள்ளுங்கள். இந்த எண்ணங்களுக்கு நான் ஆட்பட மாட்டேன் என்று உறுதியாக நம்புங்கள். கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் புறம்தள்ளுங்கள். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், அமைதியாக இருப்பேன், என்பது போன்று எண்ணத்தொடங்குங்கள். இத்தகைய நிறைவான எண்ணங்கள் ஆழ்மனதில் பதியப்பதியப் பதற்றமும், பரபரப்பும் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

இனிய இசைகேட்டல், நம்பிக்கை தரும் நூல்களை வாசித்தல், சற்று நேரம் வெளியே உலாவி வருதல், சமவயதுடைய நண்பர்களுடன் அளவளாவுதல், குடும்பத்தாருடன் மணம்விட்டுப் பேசுதல், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடல் இவையாவும் பதற்றத்தைக் குறைக்க உதவும். இவையாவும் பலன் தராமல் போனால் மனநல மருத்துவரை நாடித் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

Dr.N.தேவகுமார்
வைத்தியர்