நஞ்சுண்ட நாயகனே… சி.சிவன்சுதன்

உன் உயிருக்கு உலை வைத்து
வாழ்வுக்கு அஞ்சி
நஞ்சுண்ணத் துணிந்துவிட்ட நாயகனே!

உடலையும் உயிரையும் ஒட்டவைக்கத்தான்
எத்தனை போராட்டங்கள்
சுடலை வழி மறித்துச் செய்யும்
இந்தச் சுதந்திரப் போரிலே
நீயும் போராளியாகிப் பார்
உயிரின் மகிமை உனக்குப் புரியும்.

உனக்காக நஞ்சுண்ட நீ
கோழையாகிப் பேழையிலே போனபின்
உன் பிஞ்சுகளின் இரைப்பை
காற்றைக் குடிக்கும். சுவாசப்பை போல
உன்னவரின் கனவுகள் கானலாகி
கண்ணீர் திவலைகளில் கலங்கிப் போகும்

எம் தேவர் குலம் காக்க
கழுத்திலே நஞ்சேந்திய
திரு நீலகண்ட வரலாறு ஒரு தியாகம்
இன்று நீ நஞ்சுண்டது
பச்சைத் துரோகமாகாதா?
உன்னை வஞ்சித்து உறவுகளை வஞ்சித்து
ஊரையும் உற்றாரையும் சேர்த்தே வஞ்சித்து
வைத்தியசாலை வளங்களையும் வாரிச் சுருட்டி
உனக்காக நீயாடும் சுயநலக் கூத்து
நீயாயம் தானா?

அடக்கமுடியாத ஆத்திரத்திற்கு – எம்
ஆரோக்கியத்தை அடகு வைப்பதா?
ஏமாற்றப்பட்டதற்காய் நாம்
ஏமாளி ஆகுவதா?
அரிய உயிர்கள் அலறித்துடித்து
அலரி விதையில் அடங்குவதா?

ஏமாற்றம் இங்கு புதிதல்ல
ஏமாற்றுபவர்கள் தான் புதிது புதிதாய்
பிறப்பெடுப்பர் – பொறுத்திரு
அடிபட்டமனிதங்கள் – நித்தம்
ஆனந்தக் கண்ணீர்வடிப்பதாயும்
அறிவிக்கப்படும் – ஆத்திரப்படாதே
அடிவானம் அழுது கண் சிவக்கையிலும்
நாணி கன்னம் சிவந்து போனதாய்
கதைவரும் – கவலைப்படாதே
மாண்டு போனது எம் மானமல்ல
மீண்டும் எழு.

தோல்விகளை நியாய வேள்விக்கு
நெய்யாக்கு
அவமதிப்புகளை அமைதி வழிநின்று
பொய்யாக்கு

எத்தனை துயர் சுமந்த நாம்
உயிர் சுமக்க அஞ்சுவதா?
நெஞ்சுரம் கொண்டோர்
நஞ்சிடம் தஞ்சமாவதா?

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.