ஜெலி மீன்களின் தாக்கத்தை தடுப்பது எப்படி?

வைத்திய சாலைக்கு வரும் பல்வேறு நோயாளிகள் மத்தியில் நாம் கடல்வாழ் ஜெலிமீன்களின் (Jelly fish) தாக்கத்திற்கு உட்பட்டு வரும் சிலரைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் “சுணைநீர்” அல்லது அழுக்கு நீர் பட்டதால் ஏற்பட்ட நோயெனவே இவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவற்றால் மீனவர்கள், சுற்றுலாப்பயணிகள், ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள் மற்றும் கடற்கரை வாழ் மக்கள் பாதிக்கப்படலாம். யாழ்ப்பாணத்தில் குருநகர், மண்டைதீவு, வேலணைப்பகுதியிலுள்ளவர்கள் இவற்றின் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஜெலிமீன் “Cnidaria” என்ற கடல்வாழ் விலங்கினத்தைச் சேர்ந்தது. இவை Nematocyst எனும் பாகத்தை குடை போன்ற ஒரு அமைப்பின் அடிப்பாகத்தில் கொண்டிருக்கும். இவை வேறு கடல் விலங்குகள் அல்லது மனித உடலுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அதனுள் இருந்து விஷத்தை வெளிவிடுகின்றன. இதனால் பல்வேறுபட்ட நோய்த்தாக்கங்கள் மனித உடலில் ஏற்படுகின்றது.

இந்த ஜெலி மீன்கள் அநேகமாக கடல் மேற்பரப்பு நீரில் வெளிச்சம் குறைந்த நேரத்தில் காணப்படும். சில வேளைகளில் அவை கடல் அலையின் தாக்கத்தினால் கடற்கரையிலும் காணப்படலாம். சிலவகை ஜெலிமீன்கள் பூரணைத்தினத்திலிருந்து 8 -10 நாட்களில் கூடுதலான இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் அந்தக் காலப்பகுதியில் கூடுதலான ஜெலித்தாக்கத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இத்துடன் சில பருவகாலங்களில் முக்கிய தென்மேற்கு பருவக்காற்றுக் காலப்பகுதியில் அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கும்.

ஜெலிமீன்கள் ஆனது ஒரு சில மில்லிமீற்றரிலிருந்து சென்ரிமீற்றர் வரை பருமனில் வேறுபடும். பெரும்பாலானவை கைக்கண்ணாடியினால் அல்லது நுணுக்குக்காட்டியின் உதவியினால் மட்டுமே பார்க்கக்கூடியவை. இவை சிறியனவாக இருப்பதாலும் இதன் உருவானது பல்வேறு படிநிலைகளுக்கு மாற்றமடைவதாலும். நீருடனோ அல்லது பாசியுடனோ சேர்ந்து இனங்காண்பதற்கு கடினமாக உள்ளது. இதன் காரணமாகவே இதனை சுணைநீர் அல்லது அழுக்கு நீர் என மக்கள் அழைக்கின்றனர்.

ஜெலி மீன்களின் வாழ்நாளானது சிலமணிநேரம் முதல் சில மாதங்கள் வரை வேறுபடும். ஜெலிமீன்கள் ஒக்சியன் குறைந்த அயடீன் உப்பு சேர்ந்த வெப்பமான கடல்நீரில் கூடியகாலம் உயிர் வாழும் திறமையைக் கொண்டுள்ளது. கடல் அலைகள், சுழிகள், ஒக்சியன் செறிவு, நீரின் வெப்பம் மற்றும் உணவுச்செறிவானது பல்லாயிரக்கணக்கான சிறிய ஜெலிமீன்களை ஒன்று சேர்த்து ஒரு ஜெலிக்கூட்டத்தை உருவாக்கலாம்.

ஜெலிமீன்களின் தொகை ஏன் அதிகரிக்கின்றது?

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகமாக மீன்பிடிப்பதால் ஜெலிமீன்களை சாதாரணமாக உண்ணும் கடல்மீன்களின் தொகை குறைவடைகின்றது. அத்துடன் மனிதனின் செயற்பாடுகளால் ஏற்படும் மண்ணரிப்பால் ஜெலிமீன்களுக்குத் தேவையான சத்துணவுகள் அதிகமாக கடலில் கிடைக்கின்றன. மேற்கூறிய காரணங்களால் கடல் சூழல் சமநிலையானது பாதிப்படைந்து ஜெலிமீன்கள் பெருக வழிவகுக்கின்றது.

ஜெலிமீன்கள் மனிதனுக்கு எப்போதும் பாதகமானவையா? இல்லை. பல்வேறு நாடுகளில் இவை மனித உணவாகப் பாவிக்கப்படுகின்றன. உலர்த்தப்பட்ட ஜெலியானது உணவு சுவையூட்டியாகப் பாவிக்கபடுகின்றது. ஜெலிமீன்களிலிருந்து பெறப்படும் மூலக்கூறுகளான கொலாஜன், பல்வேறுபட்ட மூட்டுநோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப் பாவிக்கப்படுகின்றது. பெரும்பாலான ஜெலிமீன்கள் மனிதனுக்குப் பாதகமற்றவை. ஆனால் சிலவகையானவை மனிதனுக்கு பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படலாம். ஜெலிமீன்களின் தொடுகை ஏற்பட்டதும் அவற்றின் nematocysts ஆனது தோலைத் துளைத்து விஷத்தை ஏற்றுகின்றது. இதனால் ஏற்படும் தாக்கமானது சிறிய தோல் எரிவிலிருந்து இறப்பு வரை வேறுபடலாம்.

ஜெலி மீன்களின் தாக்கத்தின் அறிகுறிகள்.

ஜெலிமீன் பட்ட இடத்தில் எரிவு, நோவைத் தொடர்ந்து தோலில் கடி ஏற்படும். இதனைத் தொடர்ந்து தோல் வீங்கி சிவப்பு நிறமாகத் தோன்றும். பெரிய ஜெலி மீன்கள் மனிதனைத் தாக்கும் போது அவற்றின் வால்கள் தோலில் பதிந்து நீண்ட அடையாளங்களை ஏற்படுத்தலாம்.பெரும்பாலும் கால், கைகள், இடுப்புப்பகுதி மற்றும் ஆணுறுப்புப் பகுதிகளில் அதிகமான தாக்கம் ஏற்படுகின்றது.

சிலருக்கு தோல் தாக்கத்தையும் தாண்டி வயிற்றுநோ, வாந்தி, கைகால் விறைப்பு, தசைநோ மற்றும் சுவாசிக்க இயலாமை மயக்கம் என்பன ஏற்படலாம். இவற்றிற்கு உடனடியாக மருத்துவம் வழங்கப்படாவிடின் உயிருக்கே ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

ஜெலித்தாக்கம் ஏற்பட்டவருக்கான முதலுதவி

ஆழ்கடலில் தாக்கம் ஏற்பட்டு அதிகநோ, சுவாசிக்க இயலாமை ஏற்படின் அவர் நீரில் மூழ்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. எனவே அவரைப் பாதுகாப்பாக அந்த சூழலிருந்து அகற்றுவது நீரிழ் மூழ்குவதையும் மேலும் மேலும் ஜெலித்தாக்கம் ஏற்படுவதையும் தடுக்க முதலுதவி அளிப்பவர்கள் கையுறைகள் அணிவதாலோ, ஈரமான கடலுடைகள் அணிவதாலோ தமக்கும் ஜெலித்தாக்கம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கலாம்.

சிலவேளைகளில் எமது உடலில் ஜெலிமீன்கள் பகுதிகள் ஒட்டி தொடர்ந்து விஷத்தை ஏற்றியவண்ணம் இருக்கலாம். இவற்றைப் பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். கடல்நீரால் கழுவுதல், வினாகிரி போன்ற பதார்த்தங்களால் கழுவுதல் என்பன சில செய்யத் தகுந்த நடைமுறைகளாகும். மருத்துவ ஸ்பிறிட் (Spirit) , குடிபானங்கள் மற்றும் தாக்கத்திற்குள்ளான பகுதியைத் தேய்த்துக் கழுவுதல் என்பன ஜெலித் தாக்கத்தால் ஏற்படும் விஷத்தை அதிகரிக்கச் செய்யும். இவை கட்டாயமாகத் தவிர்க்கப்படல் வேண்டும். ஜெலி மீன்களின் பாகங்கள் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியுமானால் அவற்றை பாதுகாப்பாக ஒவ்வொன்றாகக் கழற்றியெடுப்பது உகந்தது. கண்ணில் தொடுகை ஏற்படின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

நாம் எப்போது வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்?

உடனடியாக சுவாசிக்க முடியாமை, விழுங்க முடியாமை, நெஞ்சுநோ, நெஞ்சு இறுக்கம், ஜெலிமீன் தொடுகை ஏற்பட்ட இடத்தில் தாங்கமுடியாத நோ என்பன இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். அதேவேளை சிறுவர்களுக்கு அல்லது முதியோருக்கு தாக்கம் ஏற்படின் அல்லது உடலின் பெரும்பகுதி தாக்கத்திற்கு உட்படின் உடனடியாக வைத்திய உதவி பெற வேண்டும்.

வைத்திய சாலையில் உடனடியாக நோயாளி கவனிக்கப்பட்டு தேவையான ஒக்சியன், அதீத ஒவ்வாமைக்குரிய மருந்துகள், தோல் கடிக்கான மருந்துகள் என்பன வழங்கப்படும். இவர்கள் தொடர்ந்து 24-48 மணித்தியாலங்கள் அவதானிக்கப்படல் வேண்டும். சில வேளைகளில் ஒரு சில மணித்தியாலங்கள் அல்லது நாட்களின் பின்பு மீண்டும் ஒவ்வாமை அல்லது ஜெலிவிஷத்தால் ஏற்படும் அறிகுறிகள் தோன்றலாம். தேவைப்படின் இந்த நேரத்திலும் வைத்திய ஆலோசனை உடனடியாகப் பெறவேண்டும்.

ஜெலிமீன் விஷத்திற்கு உடனடியாக வைத்தியம் வழங்கப்படாவிடின் மாறாத தோல் புண்கள், சிறுநீரகச் செயலிழப்பு, சுவாசச் செயலிழப்பு மற்றும் மரணம் என்பன ஏற்படலாம்.

ஜெலிமீன்களின் விஷத்தை செயலிழக்கச் செய்யும் எதிர்விஷம் (antivenom) சில மேலை நாடுகளில் பாவனையில் உண்டு எனினும் அவை சிலவகையான ஜெலிமீன்களுக்கு எதிராக மட்டுமே அதிகம் பயனுடையதாக உள்ளதால் இவற்றின் பாவனை மட்டுப்படுத்ப்பட்ட அளவிலேதான் உள்ளது.

இலங்கையில் காணப்படும் ஜெலிமீன்கள், அவற்றின் வகைகள், அவற்றால் வரும் நோய்த்தாக்கம் அல்லது அவை செறிந்து காணப்படும் கடற்பரப்புகள் என்பன அறியப்படவில்லை. இவை சம்பந்தமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு இவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் வழிமுறைகள் கண்டறியப்படுவது அத்தியாவசியமாகும். கடலில் செல்பவர்கள் பழக்கமில்லாத தாவரங்களையோ அல்லது விலங்குகளையோ கையுறை அணியாமல் கையாள்வது தவிர்க்கப்படவேண்டும். ஜெலிமீன்களின் தாக்கத்தை உடனடியாக இனங்கண்டு உடனடியாக நோயாளியை அந்தச் சூழலிருந்து அகற்றி தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

Dr.V.சுஜனிதா
பொதுவைத்திய நிபுணர்.