அதிகரித்த நிறையுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்களே? உடல் மெலிந்து விட்டால் நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்து ஏற்படாதா?

எனது நிறை அதிகம் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். உணவைக்குறைத்து சாப்பிடாமல் இருந்தால் தலை சுற்றுகிறது. உணவைக் கடுமையாகக் குறைத்தால் உடல் பலவீனப்பட்டுவிடும் என்று பயமாக இருக்கிறது. உடற் களைப்பை போக்குவதற்கு எந்த வகையான சத்துமா வகைகளைச் சாப்பிடலாம். உப்புச்சோடா குடித்தால் நிறை அதிகரிக்குமா?அதிகரித்த நிறையுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்களே? உடல் மெலிந்து விட்டால் நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்து ஏற்படாதா?

உங்கள் களைப்புக்கு முக்கிய காரணியாக இருப்பது உங்களது அதிகரித்த உடல் நிறையே. உங்கள் அதிகரித்த உடல் நிறையைச் சமாளிக்கும் வல்லமை உங்கள் உடல் உறுப்புகளுக்குப் போதாமல் இருக்கும் பொழுது களைப்பு ஏற்படுகிறது. உங்கள் களைப்புக்கு வேறு ஏதாவது காரணிகளும் இருக்கிறதா என்று உங்கள் வைத்தியர் உங்களைச் சோதித்து பார்த்திருப்பார். உணவைக் கடுமையாகக் குறைத்து பட்டினிகிடந்துதான் உடல் நிறையைக் குறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு செய்தால் உங்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் தலைச்சுற்றும் களைப்பும் ஏற்படுவதுடன் உடலும் பலவீனமாகும். உடல் நிறையைக் குறைப்பதற்குச் சாப்பாட்டு வகையிலேயே மாற்றம் செய்யவேண்டும் என்பதே முக்கியமானதாகும். நீங்கள் நிறையைக் குறைப்பதற்கு மாப்பொருள் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்து நல்ல ஊட்டச்சத்துள்ள, புரதம் நிறைந்த கனியுப்புகள் நிறைந்த, விட்டமின்கள்
நிறைந்த உணவுகளைப் போதியளவில் உண்ணமுடியும். நீங்கள் போதியளவில் உண்ணக்கூடிய உணவுகளாவன – ஆடை நீக்கிய பால், மரக்கறி வகைகள், கௌப்பி, முட்டை, மீன், இறால், பயறு, பருப்பு வகைகள், பழவகைகள், கோழி இறைச்சி,சுறா, சோயா, அவரை, இலை வகைகள், கொண்டல் கடலை போண்றவையாகும். இவற்றைப் போதியளவில் உண்டு நிறை குறைந்து வரும் போது உங்கள் உடல் பலவீனப்படமாட்டாது. நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்தும் ஏற்படாது. மேலதிக சத்துமாக்களும் தேவைப்படாது. சோடா வகைகள் உடலுக்குப் பாதுகாப்பானது அல்ல. அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதிகரித்த நிறையுள்ளவர்கள் அது எந்தக் காரணத்திற்காகவும் ஏற்பட்டிருந்தாலும் பரம்பரை காரணமாக ஏற்பட்டிருந்தாலும் கூட நிறையைக் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். நிறையைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நிறையைக் குறைப்பது கடினமல்ல முயற்சி எடுங்கள்