வாழ்க்கைச் செலவைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் – சதா

உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், படிப்பு மற்றும் பொழுதுபோக்கு என வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் காலம் இது. இவ்வாறான செலவுகளில் பல இன்றியமையாதவையாக இருப்பினும் இவற்றில் சில அனாவசியமாக வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. இவ்வாறான அனாவசியமான வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்க சில எளிய வழிகள்:

மாதாந்த வரவு செலவுத்திட்டம்:
உங்களது மாதாந்த வருமானத்தையும், மாதாந்த செலவுகளையும் கருத்தில் கொண்டு உங்களுக்கென்று ஒரு மாதாந்த வரவு செலவுத்திட்டத்தினை வகுத்துக்கொள்ளுங்கள்.

மின்சாரப் பாவனையைக் குறைத்துக்கொள்ளுங்கள்:
அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவுகளில் மின்சாரத்திற்குரிய செலவானது மிகமுக்கிய பங்குவகிக்கின்றது.

நீங்கள் உங்களது அறையை அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற முன் அங்கு வேறு எவரும் இல்லாதவிடத்து அங்குள்ள மின்விளக்குள், மின்விசிறிகள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் வானொலிப் பெட்டி போன்ற மின்சாதனங்களை நிறுத்திவிட்டு ( Switch off செய்து விட்டு) செல்லுங்கள்.

மின்சாதனங்களைப் பாவிக்காத தருணங்களில் அவற்றை நிறுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது அவற்றின் இணைப்பு(Plug) களையும் கழற்றிவிடுங்கள். ஏனெனில், உங்களது மாதாந்த மின்சார செலவின் 5 தொடக்கம் 10 வீதமானது 24 மணித்தியாலங்களும் இணைப்பிலுள்ள மின்சாதனங்களினால் ஏற்படுபவையே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கிற்கான செலவுகளைக் குறையுங்கள்:
செலவுகள் இல்லாமல் அயலவர்களுடன் சேர்ந்து ஈடுபடும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுங்கள். புத்தகங்களை காசுகொடுத்து வாங்குவதைக்காட்டிலும் அவற்றை நூல்நிலையங்களில் படித்துக்கொள்ளுங்கள். தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான பொதிகளைத் தெரிவுசெய்யும் போது உங்களுக்குத் தேவையற்ற அலைவரிசைகளைக் கொண்ட பொதிகளை விடுத்து மிகமுக்கியமான தேவையான அலைவரிசைகளைக் கொண்ட பொதிகளைத் தெரிவுசெய்வதன் மூலம் தேவையற்ற செலவைக் குறைப்பதோடு நேரத்தையும் கூட மிச்சப்படுத்திக்கொள்ளலாம்.

போக்குவரத்துச் செலவினைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்:
நீங்கள் உங்களது வேலைத்தளத்திற்கோ, பாடசாலைக்கோ அல்லது நீங்கள் செல்லவேண்டிய இடம் எதுவாக இருந்தாலும் அதற்கு அருகாமையில் வசிக்கின்றவராக இருப்பின் இயலுமானவரை நடந்துசெல்லப் பழகிக்கொள்ளுங்கள். இல்லாவிடில் சைக்கிளில் செல்லுங்கள். இது உங்களது செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாது உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றது.

கடன் அட்டைப் பாவனையைக் குறைத்துக்கொள்ளுங்கள்:
பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இயன்றளவு கடன் அட்டைகளுக்குப் பதில் பணத்தினைப் பயன்படுத்துங்கள். இது உங்களை உங்களது வரவுசெலவுத்திட்டத்திற்குள் செலவு செய்வதற்கு வழிவகுக்கும். ஏனெனில் உங்களது கையிலுள்ள பணம் முடிவடைந்ததும் நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுவீர்கள்.

உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது:
முடியுமானவரை பொதிசெய்யப்பட்ட, செயற்கைப்பொருட்களை உள்ளடக்கிய உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் உட்கொள்வதையும் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கின்ற காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றையும் அவற்றைக்கொண்டு வீட்டிலே தயாரிக்கின்ற உணவு வகைகளையும் உட்கொள்வதன் மூலம் செலவைக்குறைத்துக்கொள்ள முடிவதுடன், இயற்கையாகக் கிடைக்கின்ற சத்துக்களை நமது உடல் பெறுவதற்கு வழிகோல முடியும். இதன் மூலம் தேவையற்ற வியாதிகள் நம்முடலை தாக்காமல் நீண்ட காலம் சுகதேகிகளாக வாழ வழிசமைக்க முடிகின்றது.
பெரிய பெரிய நவீன சந்தைகளிலே கிடைக்கின்ற பொதிசெய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட, பதனிடப்பட்ட உணவுப்பொருட்களை கூடிய விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்து உள்ளுர் சந்தைகளில் கிடைக்கின்ற அன்றாடம் அறுவடை செய்யப்பட்டு விற்கப்படுகின்ற இயற்கையான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வது செலவைக் குறைப்பதோடு சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கின்றது.

இயற்கையான உணவுப்பொருட்களை உட்கொள்வதனால் மேலதிக விற்றமின் மாத்திரைகள், ரொனிக் வகைகள் போன்றவற்றைப் பாவிப்பதற்கு அவசியமற்றுப்போகின்றது.

சிறிய நோய்கள்:
சிறிய நோய்களுக்கும் மருத்துவரை நாடுவது தற்போதைய வழக்கமாக மாறிவிட்டது. இதைத் தவிர்த்து சிறிய வருத்தங்களை தானாகவே மாறவிடுதல் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது மட்டுமல்ல தேவையற்ற செலவையும் குறைக்கின்றது.

உதாரணமாக ஜலதோசம் தும்மல் போன்றவற்றை தானாகவே மாறவிடுவதே மிகவும் சிறந்தது.
MC.Sathaharan