மாதவிலக்கு ஓய்தல் ( Menopause) வி.சுகன்யா.

ஒரு பெண்ணின் மாதவிலக்கு சாதாரணமாக 45 – 55 வயதிற்கிடையில் நிரந்தரமாக நின்றுகொள்ளும்.

மாதவிலக்கு ஓயும்போது என்ன நேர்கின்றது. மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது ஒரு பெண்ணின் ஜனன உற்பத்தி உறுப்புக்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பாலியல் ஓமோன் திரவம் உண்டாவதும் சூல் வெளிப்படுதலும் படிப்படியாக குறைந்துகொண்டு போகும். இதனால் மாதவிலக்கு வட்டத்தில் ஒழுங்கின்மை ஏற்படலாம். ஓமோன் திரவம் குறைவடைந்ததும் நிரந்தரமாக மாதவிலக்கு ஏற்படுதலும் நின்றுவிடும்.

மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது மாதவிலக்குடன் இரத்தப்போக்கு அதிகமாக அல்லது நீண்ட நாள்களுக்கு ஏற்படுமேயானால் வைத்திய ஆலோசனை பெறுங்கள்.

மாதவிலக்கு ஓயும்போது காணப்படும் அறிகுறிகள்.

அநேகமான பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும் போதோ அல்லது அதன் பின்போ ஒரு மாற்றமும் தெரிவதில்லை. மாதவிலக்கு மட்டும் நிற்கும் சில பெண்களுக்கு பாலியல் ஓமோன் திரவம் குறைவடைவதால் கீழ்காணும் அறிகுறிகள் தென்படலாம்.

உடல்ரீதியான மாற்றங்கள்

உடலில் உஷ்ணமும் எரிவும் இருப்பதாக உணர்வர்
இது அநேகமான உடலின் மேல்பகுதியில் உண்டாகும் சில வேளைகளில் இதனுடன் அதிகமான வியர்வையும் ஏற்படும். இதனால் நித்திரைக்கும் பங்கம் ஏற்படலாம்.
யோனிப் பாதையில் திரவமற்ற தன்மையால் பாலுறவு கஷ்டமாகும். பாலுறவு விருப்பமின்மை ஏற்பட இது காரணமாகின்றது.
உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையலாம். இதனால் மெதுவாக விழுந்தாலும் கூட எலும்புமுறிவு ஏற்பட இடமுண்டு
அதிகமான களைப்பு
மூச்செறிதல்
உடல் எடை கூடுதல்
தும்மும்போது, இருமும் போது சிறுநீர் வெளியேறல்.
உளரீதியான மாற்றங்கள்

பதட்டமடையும் தன்மை
மனதில் ஆறுதலின்மை
தூக்கம் வராமை
எதிலும் கவனம் செலுத்த முடியாமை
மனதளர்ச்சி
மாற்றத்திற்கு எப்படி எம்மைத் தயார்செய்வது

உடலில் உஷ்ணமோ அல்லது எரிவோ தெரியும்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு நிமிடம் நிறுத்தி ஆறுதலாக ஓர் இடத்தில் உட்காருங்கள். இறுக்கமான உடையணிந்திருந்தால் அவற்றை தளர்த்தி மின்விசிறி மூலமோ அல்லது வேறு வழியிலோ காற்றை வீசச் செய்யுங்கள்.
பாலுறவு கொள்ளும்போது கஸ்டம் தெரிந்தால் வைத்திய ஆலோசனையின் பேரில் பொருத்தமான கிறீம் அல்லது பூச்சு மருந்தைப் பாவியுங்கள்.
எப்பொழுதும் போசாக்குள்ள உணவை உட்கொள்ளுங்கள். கூடுதலாக சீனி, எண்ணெய், கொழுப்பு, உப்பு கலந்த உணவு வகைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
தானாகவே சிறுநீர் வெளியேறுதலை விசேடமான உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
ஒழுங்கான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் இதனால் உங்கள் எலும்பின் பலவீனத்தைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் உங்கள் எடையையும் கட்டுக்குள் பேண முடியும்.
மன உளைச்சலை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை பற்றி மற்றவர்களுடன் பேசுங்கள், உங்களுக்கு தென்படும் மாற்றங்கள் பற்றி உங்கள் கணவருடன் பேசுங்கள்.
ஒழுங்கான வைத்திய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் ஆரம்பத்திலேயே மார்பகங்களில் அல்லது கர்ப்பப்பை, பாலியல் உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படுவதைக் கண்டறிய முடியும்.
மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஓமோன் சிகிச்சை முறைகளும் உண்டு. இதை வைத்தியரின் ஆலோசனையுடன் மட்டுமே பெறல் வேண்டும்.
மாதவிலக்கு நின்ற பின்பு

மாதவிலக்கு நின்றபின் ஒரு பெண்ணிற்கு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாதென்றாலும் அது பாலுறவு வாழ்க்கையின் முடிவல்ல.
கர்ப்பம் ஏற்படும் என்ற பயமே இல்லாது பாலுறவில் ஈடுபடும் சந்தர்ப்பம் உங்களுக்கு இந்தக் காலத்தில் கிட்டுகின்றது.
மாதவிலக்கு நின்ற பின் ஒரு பெண்ணிற்கு பலவிதமான உள, உடல் ரீதியான அசௌகரியங்கள் ஏற்படுமென்றாலும் அவை தொடர்பான நல விளக்கதை்தைப் பெறுவதன் மூலம் அவ் அசௌகரியங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். அவசியமான வைத்திய ஆலோசனை பெறலாம்

வி.சுகன்யா தாதியக்கல்லூரி