15 வயது, இன்னமும் பூப்படையவில்லை இதற்கு என்ன செய்யலாம்?

எனது மகளுக்குப் 15 வயது ஆகிவிட்டது அவள் இன்னமும் பூப்படையவில்லை இதற்கு என்ன செய்யலாம்?

இவ்வாறான நிலைமை பிந்திய பூப்படைதல் (Delayed Menarchae) என்று கூறப்படும். துணைப் பாலியல்புகள் விருத்தியடையாத ஒரு பெண்ணில் 14வயது வரையும் அல்லது துணைப்பாலியல்புகள் விருத்தியடைந்த ஒரு பெண்ணில் 16 வயது வரையும் முதலாவது மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் நிலைமையை நாம் இவ்வாறு கூறலாம்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றில் சில முழுமையாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளாகவும், சில தீர்வு காணமுடியாத பிரச் சினைகளாகவும் இருக்கும். முதலாவது மாதவிடாய் ஏற்படும் வயது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவான காரணிகள் பின்வருமாறு,

01. குடும்பத்தில் ஏனைய பெண்கள் பிந்திய வயதில் பூப்படைதல்.

இங்கு உடல் ரீதியாக எந்தவிதமான பாதிப்போ அல்லது நோயோ இருப்பதில்லை. இவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருக்கலாம். குடும்பத்தில் மற்றப் பெண்கள் எந்த வயதில் பூப்படைவார்களோ அந்த வயதில் இவர்களும் பூப்பெய்துவார்கள். ஆகவே நீங்கள் அதுவரை காத்திருக்கலாம். இவர்களுக்கு அநேகமாக எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படுவதில்லை.

02. சத்துள்ள உணவு வகைகளை உள்ளெடுத்தல் சத்துள்ள உணவு வகைகளை உள்ளெடுக்காமல் இருக்கும் மற்றும் உடல்நிறை குறைவாக இருக்கும் பெண்கள் பூப்படைவதற்குப் பிந்தலாம். இவ்வாறானவர்கள் சத்துள்ள உணவு களை உள்ளெடுத்து உடல் நிறையை அதிகரிக்கச் செய்வதன்மூலம் பயனடைய முடியும்.

03. உடல்நலப் பிரச்சினைகள்

வேறு ஏதாவது நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் (உதாரணம் சிறுவயதில் நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்) மற்றும் சிலவகை ஓமோன் குறைபாடு உடையவர்கள் (உதாரணம் தைரொயிட் கபச் சுரப்பி, பருவகக் கீழ் சுரப்பி பிரச்சினைகள்) இவர்களில் உரிய வயதில் பூப்பெய்வது பாதிக்கப்படலாம்.

இவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்று ஓமோன் சிகிச்சையோ அல்லது அவர்களின் நோய்க்கான சரியான சிகிச்சையையோ பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவையே அநேகமான பெண் களின் முதலாவது மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படாமைக்கான காரணங்களாக அமைகின்றன.

ஆரம்பத்தில் கூறப்பட்ட வயதெல்லையைத் தாண்டியும் உங்கள் மகள் பூப்படையாவிட்டால் நீங்கள் ஒரு பெண் நோயியல் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. மருத்துவர் உங்கள் மகளைப் பரிசோதித்து உங்கள் பிரச்சினைக்குரிய சரியான காரணத்தைக் கண்டறிந்து அது குணப்படுத்தக்கூடியதாயின் அதற்கான சிகிச்சை வழங்குவார்.

அவ்வாறான சிகிச்சையளிக்கக்கூடிய சில காரணங்கள் வருமாறு,

1. பிறப்பு வாயிலில் உள்ள சவ்வு அடைப்பை ஏற்படுத்துதல்.

இதனால் மாதவிடாயின்போது வரும் குருதி வெளியேறமுடியாத நிலை ஏற்படும். இவ்வாறானவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் ஏற்படும் காலத்தில் அடிவயிற்றில் நோவு ஏற்படும். சத்திசிகிச்சைசெய்து அடைப்பை ஏற்படுத்தும் சவ்வை அகற்றுவதன் மூலம் இந்த நிலை குணமாக்கப்படும்.

2. பிறப்பிலே ஏற்படும் சில குரோமோசம் குறைபாடுகள்.

உதாரணம் -Turners syndrome

இவர்கள் அகன்ற தோள்களைக் கொண்டவர்களாகவும், உயரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கும் சூலகத்திலே குறைபாடு உள்ளவர்களுக்கும் சில ஓமோன்களை வழங்குவதன் மூலம் துணைப் பாலியல்புகளையும் மாதவிடாயையும் ஏற்படுத்த முடியும். ஆனால் இவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது..

3. பரிவகக்கீழ் சுரப்பியின் குறைபாடு இவர்களுக்கு CnRH – ஓமோனை வழங்குவதன் மூலம் இந்த நிலையைக் குணப்படுத்தலாம் ஆனால் இது மிகவும் செலவு கூடிய ஒருமுறையாகும். மேலும் பல பிறப்புக் குறைபாடுகளும் மாதவிடாய் ஏற்படாமைக்கான காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணிகள் மிகக் குறைவாகும்.

எனவே நீங்கள் ஒரு பெண் நோயியல் வைத்தியரைச் சந்தித்து பரிசோதித்துக்கொள்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்