21 வயது. கர்ப்பமாக இருக்கின்றேன். எனக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. தீர்வு என்ன?

எனக்கு 21 வயது ஆகின்றது. நான் கர்ப்பமாக இருக்கின்றேன். எனக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வு என்ன??

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவாக பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல் இதற்கு ஓமோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் குடற்றொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம், கர்ப்பப்பையின் அளவு, திணி அதிகரித்தல், இக்காலத்தில் பாவிக்கப்படும் இரும்புச்சத்துக் குளிசைகள், உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ( நார்ச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ளல், நீர் அருந்துதல் போதாமை) ஒழுங்கற்ற முறையில் மலங்கழிக்கச் செல்லுதல், போதியளவு உடற்பயிற்சியின்மை என்பன காரணமாக அமைகின்றன. சில அரிதான சந்தர்ப்பங்களிலேயே மருத்துவக் காரணங்களினால் இது ஏற்படலாம்

எனவே நீங்கள் இதை எண்ணிக் கவலைப்படத் தேவையில்லை. தகுந்த முறையில் உங்கள் வாழ்க்கை முறைகளைமாற்றி அமைப்பதன் மூலம் இதன் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதற்காக தேவையான அளவில் நீரை நாளந்தம் எடுத்துக்கொள்ளல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை (பழங்கள், மரக்கறிகள்) அதிக அளவில் உட்கொள்ளல், ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளல், தினமும் குறித்த ஒரே நேரத்தில் மலங்கழிக்கப் பழக்கிக் கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக மருந்துகளைப் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஆனாலும் இவற்றிற்கு உங்கள் மலச்சிக்கல் குறையவில்லை எனின் தகுந்த முறையில் வைத்தியரை அணுகி சிகிச்சை பெறுவது சிறந்தது