மகப்பேறு தாமதமடைதல். காரணங்களும் சிகிச்சை முறைகளும் Dr. தேவரஞ்சனா புவனேந்திரன்

உலக சனத்தொகையில் சராசரியாக ஏழு தம்பதியரில் ஒருவருக்கு மக்பேறு தாமதடைதல் என்னும் நிலைமை காணப்படுகின்றது. மகப்பேறு தாமதடைதல் என்பது ஒழுங்கான, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் தம்பதியரில் ஒரு வருடமாகியும் கருத்தரித்து மகப்பேறடைய முடியாத ஒரு நிலைமையாகும். ஒருதடவை கூட கருத்தரிக்கவில்லையெனின் அடிப்படை மகப்பேற்றின்மை எனவும், முன்னர் கருத்தரித்திருப்பின் இரண்டாந்தர மகப்பேறின்மை எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மகப்பேறுதாமதமடைதலுக்கு ஆண் அல்லது பெண் அல்லது இருவருமே காரணமாக இருக்கலாம்.

சாதாரண கருத்தரிப்புக்கு அவசியமானவை

I.ஆரோக்கியமான விந்து பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியை அடைதல்

II.பெண்ணில் சாதாரண சூலிடல் நிகழல்

III.கருப்பைக் கழுத்தின் சீதச் சுரப்பு வாங்குந்தன்மையுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் இருத்தல்

IV.விந்து கருப்பையின் உள்ளும் பின்னர், கருப்பைக்குழாயையும் ( Fallopian tube) சென்றடைதல்

V.சூலிடலைத் தொடர்ந்து சூல் கருப்பைக்குழாயை வந்தடைதல்

VI.விந்து சூலைத் துளைத்து கருக்கட்டலைப் பூரணப்படுத்தல்

VII.கருக்கட்டப்பட்ட சூல் மீளவும் கருப்பையை அடைதல்

VIII.கருப்பை அகவணி கருக்கட்டப்பட்ட சூலை ஏற்குந்தகவுடையதாக இருத்தல்

சாதரண பெண் ஒருவரில் சாதாரண மாதவிடாய்ச் சக்கரம் 28 நாட்கள் உடையதாக இருக்கும் போது 14 ம் நாளில் சூலிடல் நிகழும். சூலின் சராசரி வாழ்தகவு நேரம் 24 மணித்தியாலங்களாகவும் சுக்கிலப்பாய வெளியேற்றத்தின் பின் பெண் இனப்பெருக்கத்தொகுதியில் விந்து வாழக்கூடிய காலம் 72 மணித்தியாலங்களாகவும் காணப்படும். பொதுவாக 90 வீதமான தம்பதியர் தமது பாதுகாப்பற்ற ஓழுங்கான உடலுறவின் மூன்று வருட காலப்பகுதிக்குள் மகப்பேறடையும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்.

சாதாரண கருக்கட்டலைப் பாதிக்கவல்ல சில பொதுவான காரணிகள்.

I.வயது – 35 வயதின் பின் சூலின் தரமும், எண்ணிக்கையும் குறைவடைவதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு பெண்ணில் கணிசமானளவு குறைவடைகின்றது.

II.புகைப்பிடித்தல் – ஆண்களின் சுக்கிலப்பாயத்தின் தரத்தையும், பெண்களில் கருத்தரிக்கும் வாய்ப்பையும் குறைக்கின்றது.

III.உடலுறவின் எண்ணிக்கை – மன அழுத்தம், மனக்கவலை என்பன உடலுறவு மீதான ஆர்வமின்மையையும், விந்துகளின் எண்ணிக்கையையும் பாதிக்கும். வாரத்தில் 2- 3 தடவைகள் உடலுறவு கொள்ளல் சிபாரிசு செய்யப்படுகின்றது.

IV.மதுபானம் – கருவையும், விந்தின் தரத்தையும் அதிக மதுபாவனை வெகுவாகப் பாதிக்கும்.

V.உடல்நிறை – உடற்திணிவுச் சுட்டி 19 – 29  இற்குள் பேணப்பட வேண்டும்.

VI.மருந்துகள் – வலி நிவாரணிகள் (NSAIDS) சூலிடலைப் பாதிக்கும். Cimetidine, Sulphasalasine, Androgens – விந்தின் தரத்தைப் பாதிக்கும். புற்றுநோய்  மருந்துகள் – விந்து, சூல் உடற்பத்தியைப் பாதிக்கும்.

VII.தொழில் ரீதியான பாதிப்புக்கள் – இரசாயனப் பொருட்கள், கதிர்வீச்சு என்பவற்றுடன் தொடர்பான தொழில் புாிவோரில் மகப்பேறுதாமதமடைய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

கருவில் ஏற்படக்கூடிய நரம்புத்தொகுதிப் பாதிப்பைத் தவிர்க்க கருத்தரிப்பின் முன்னரான (Peri conceptional Folic Acid) போலிக்கமில மாத்திரைப் பாவனை அவசியம். அத்துடன் ருபெல்லா அல்லது ஜேர்மன் சின்னமுத்து (Rubella) இற்கெதிரான தடுப்பு மருந்து ஏற்றப்பட்டிருத்தலும் அவசியமாகும்.

 மகப்பேற்றின்மைக்கான காரணங்கள்
இல ஆண் (1/3) பெண் (1/3) இருவரும்(1/3)
1 விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் பரிவகக்கீழ் –கபச்சுரப்பி – சூலக அச்சில் ஏற்படும் பிரச்சினைகள் அறியப்படாதன
2 விந்து கடத்தப்படலில் ஏற்படும் பிரச்சினைகள் கருப்பைக்குழாயிலுள்ள பிரச்சினைகள்
3 சுக்கிலப்பாயத்திலுள்ள குறைபாடுகள் கருப்பையிலுள்ள பிரச்சினைகள்
4 கருப்பை கழுத்திலுள்ள பிரச்சினைகள்
5 பிறப்புவழியிலுள்ள பிரச்சினைகள்
6 இடுப்புக்குழியிலுள்ள பிரச்சினைகள்

 

ஆண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல்

இந்த நிலைமை சராசரியாக 20 ஆண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. ஆண்களில் விந்து உற்பத்தி ஆனது பூப்படைதலைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற ஒரு செயன்முறையாகும். விதைகளில் உற்பத்தியாகும் விந்து அப்பாற்செலுத்திகளூடாக விதைமேற்றிணிவை அடைந்து, விதைமேற்றிணிவில் சேமிக்கப்பட்டு சுக்கிலப் பாயத்தினூடாக வெளியேற்றப் படுகின்றது.

   1. விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள்
    1. விதைப்பையினுள் விதை இறங்காமை, விதை முதிர்வில் ஏற்படும் பாதிப்புக்கள்
    2. கூகைக்கட்டு (Mumps), சின்னமுத்து ( Measles) காரணமாக விதையில் பாதிப்பு ஏற்படல் – பூப்பின் பின் Mumps epididymo orchitis ஏற்படின் விந்து உற்பத்தியில் நிரந்தரப் பாதிப்பு ஏற்படலாம்.
    3. போஷாக்குக் குறைபாடுகள்
    4. புகைத்தல், மதுபாவனை, போதைப் பொருள் பாவனை
    5. நீரிழிவு, தைரொய்ட் சுரப்பி குறைபாடுகள், கபச்சுரப்பிக் குறைபாடுகள்
    6. கதிர்வீச்சு
    7. சில வகை மருந்துகள் – வலிப்பு, மனஅழுத்தம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப் படுகின்ற மருந்துகள் (cimetidine, sulphasalazine, Androgens (ஓமோன்கள்)
    8. பிறப்புரிமைக் குறைபாடுகள்
    9. விந்துகளுக்கெதிராக உடலில் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள்
    10.  சூழல் மாசடைதல்
   2. விந்து கடத்தலில் ஏற்படும் பிரச்சினைகள்
    1. சில வகைத் தொற்றுகள் ( காசநோய், கொனோரியா – Gonorrhoea, யானைக்கால் விதைமேற்றிணிவு அழற்சி – Filarial epididimitis)
    2. இனப்பெருக்கத் தொகுதி சார்ந்த சத்திர சிகிச்சைகளும், அடிபடுதல் அல்லது காயமேற்படலும் (Trauma)
    3. பிறப்புக் குறைபாடுகள்.
   3. சுக்கிலப் பாயத்திலுள்ள குறைபாடுகள்
    1. விந்து எண்ணிககையும், தரமும் குறைவாக இருத்தல்
    2. சுக்கிலப் பாயத்தின் பாகுமை மாற்றங்கள்
    3. சுக்கிலப் பாயத்தின் Fructose  அளவு குறைவடைதல்.
    4. உடலுறவின் முன் சுக்கிலப்பாயம் வெளியேறுதல்.
    5. சுக்கிலப்பாயம் சிறுநீரினுள் வெளியேறல்

பெண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல்:

   1. பரிவக்கீழ் – கபச்சுரப்பி – சூலக  அச்சில் ஏற்படும் பிரச்சினைகள்
    • இவ் அச்சு பாதிக்கப்படும் போது இவற்றினால் தொகுக்கப்படுகின்ற ஒமோன்களின்(GnRH, FSH, LH)  செல்வாக்கினால் ஏற்படுத்தப்படும் உடலியற் தொழிற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் விளைவினால் சூலிடலும் பாதிக்கப்படுகின்றது.
    • சூலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளே பெண்களில் ஏற்படும் மகப்பேற்றின்மைக்கான பொதுவான காரணியாகும். அவர்களில் பலர் Poly Cystic Ovarian Syndrome (PCOS) இனால் பாதிப்புற்றிருப்பர்.
   2. கருப்பைக்குழாயில் ஏற்படும் பிரச்சினைகள்
    • வயிற்றைக் குழியிலிருந்து சூல் கருப்பைக்குழாயினூடு கருப்பையை அடைய கருப்பைக் குழாயின் சீரான கட்டமைப்பும், தொழிற்பாடும் அவசியம்.
    • கருப்பைக்குழாயின் பகுதியான அல்லது முழுமையான அடைப்பு – இவை முன்னைய தொற்றுக்களால் / இடுப்புக்குழியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளால் / முன்னைய கருச்சிதைவுகளால் ஏற்பட்டிருக்கலாம்.
   3. கருப்பையிலுள்ள பிரச்சினைகள்
    • பிறப்பிலே ஏற்படும் கட்டமைப்புப் பிரச்சினைகள்
    • கருப்பைக் கட்டிகள்
    • தொற்றுக்கள்
   4. கருப்பைக் கழுத்திலுள்ள பிரச்சினைகள்
    • கட்டமைப்பு பிரச்சினைகள்
    • விந்தை வாங்குந்தன்மையுள்ள சீதச்சுரப்பு இன்மை
    • விந்துகளுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் காணப்படல்.
   5. பிறப்பு வழியிலுள்ள பிரச்சினைகள்
    • கட்டமைப்பு பிரச்சினைகள்
   6. இடுப்புக்குழியிலுள்ள பிரச்சினைகள்
    • Endometriosis – இதுவும் பெண்களில் ஏற்படவல்ல மகப்பேற்றின்மைக்கான பொதுவான காரணியாகும். இங்கு கருப்பை அகலவணிக்கலங்கள் கருப்பை அல்லாத இடங்களில் இருப்பதுடன் மாதவிடாய் காலத்தில் குருதிக் கசிவையும் ஏற்படுத்தும்.

 

மகப்பேறு தாமதமடைதலுக்கான சோதனைகள்

மருத்துவரால் தனித்தனியாக தம்பதியர் இருவரும் அவர்களின் மருத்துவ, பாலியல் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றன பரீட்சிக்கப்பட்ட பின்னர் சில  ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைக்கேற்ப மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவர். முதலில் நோவற்ற அதிக சிரமம் அற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னரே அடுத்தபடிநிலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

உதாரணம் –

  1. SFA – Seminal Fluid Analysis – சுக்கிலப் பாய மதிப்பீடு
   • பரிசோதனை நாளுக்கு முன்னதாக 48 – 72 மணித்தியாலங்கள் உடலுறவு மேற்கொள்ளாதிருந்து தற்புணர்ச்சி ( Masturbation) முறையில் சுக்கிலப்பாயம் சேகரிக்கப்படும்.
   • சுக்கிலப்பாயம் சுத்தமான, அகன்ற வாயுடைய போத்தலில் சேகரிக்கப்பட்டு 30 நிமிடத்தினுள் ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.
   • சாதாரண SFA பெறுமானங்கள் களவளவு           –   >2ml PH                 –   >7.2 விந்து செறிவு       –   20million/ml விந்து அளவு வீதம் –   >50% grade a & b உருவவியல் வீதம்  –   >30% சாதாரண வடிவம்
   • <10,000,000/ml (100 மில்லியன்/ml)  உள்ள ஒருவரில் விந்து உற்பத்தியைத் தூண்ட சிகிச்சை அளிக்கப்படும். சிலரின் சுக்கிலப்பாயத்தில் விந்துகள் அற்ற நிலை (Azoospermia) காணப்படின் மேலதிக சோதனைகளின் பின் மகப்பேற்றின்மையை ஏற்றுக்கொள்ள அல்லது மாற்றுமுறைகளில் மகப்பேறடைய ஆலோசனை வழங்கப்படும் உதாரணம் – விந்துவங்கியிலிருந்து விந்தைப்பெற்று சோதனைக்குழாய் மூலம் கருவை வளர்த்தல்
   • சிறுநீர்வழித்தொற்று இருப்பின் ஏற்ற வகையில் சிகிச்சையளிக்கப்படும்.
   • குறைவான கனவளவு தவறான சேகரிப்பினால் ஏற்படுகின்ற போதும் தொடர்ச்சியான கனவளவுக்குறைவு விந்து கடத்தப்படும் பாதையில் நோய் நிலைமைகள் இருத்தலைக்காட்டும்
   • சுக்கிலப்பாயத்தில் ஏற்படும் தொற்று மகப்பேற்றை தாமதமடையச்செய்யும் ஆணின் காரணிகளில் பிரதான பங்கு வகிக்கின்றது. ஒருவாரத்திற்கு வழங்கப்படும் Antibiotic மருந்தினால் இத்தொற்று முற்றாக அழிக்கப்படும்.
  2. சூலிடலை அறிதல்

ஓமோன்களின் அளவை அறிதலினூடாக (Day 21 Progsterone Assay), கருப்பை அகவணி இழைய மாதிரிச் சோதனையூடாக, தொடர்ச்சியான ஸ்கானின் மூலமாக, மற்றும் லப்ரஸ்கோமி (Laparoscopy) சோதனையூடாக சூலிடல் நிகழ்கின்றதா எனவும், சூலிடல் எப்போது நிகழ்கின்றது எனவும் அறியலாம்.

 1. கருப்பைக்குழாயின் கட்டமைப்பை அறிதல்
  • Hysterosalphingogram எனப்படும் பரிசோதனை – கதிர்வீச்சு சாயம் கருப்பைக்குழியினுள் செலுத்தப்பட்டு கருப்பைக்குழி மற்றும் கருப்பைக் குழாய்களின் கட்டமைப்பு அறியப்படும். இவ் வகைச் சோதனைகள் மாதவிடாய் சக்கரத்தின் முதற்பாதியில் மேற்கொள்ளப்படும்.
  • Laparoscopy & Dye test அதிக உட்புகுதன்மையுடைய பரிசோதனையாகும். ஏனைய சோதனை முடிவுகளில் மகப்பேறின்மைக்கான காரணம் அறிப்படாதவிடத்து பொதுவாக இறுதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையாகும். இப் பரிசோதனை மூலம் நேரடியாக கருப்பைக்குழி, வயிற்றறைக்குழி மற்றும் இடுப்புக்குழி என்பவற்றைக் காட்சிப்படுத்த முடிவதுடன், பெறப்படும் விம்பங்களை எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கவும், ஏனைய துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசிக்கவும் முடியும்.

மகப்பேறு தாமதமடைதலுக்கான சிகிச்சை முறைகள்.

மேற்படி சோதனைகளின் மூலம் காரணியைக் கண்டறியப்படும் பட்சத்தில் அதற்குரிய சிகிச்சைகள் தனித்துவமான முறையில் மருந்துகள் மூலமாகவோ அல்லது சத்திரசிகிச்சை மூலமாகவோ வழங்கப்படும்.

 • சூலிடலைத் தூண்டுவதற்காக (clomifene citrate ) வகை மருந்துகளும் Laparoscopy  உதவியுடன் சூலகத்தைத் துளையிடலும் நடைமுறையிலுள்ளது.
 • Intra uterine insemination (IUI) என்பது சூலிடல் தூண்டலைத் தொடர்ந்து, சூல்கள் சேகரிக்கப்பட்டு விந்தை ஆய்வுகூடத்தில் செயற்கை முறையில் சூலுடன் சேர்த்து கருக்கட்டலை ஏற்படுத்திய பின்னர் கருக்கட்டப்பட்ட சூல் அல்லது சூல்களை மீள கருப்பைக்குழியினுட் பதித்தலாகும். 35 வயதின் கீழான பெண்களில் சக்கரம் ஒன்றுக்கான வெற்றி வீதம் (Success Rate)  30 வீதம் ஆகும்.
 • புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவோர் மற்றும் கதிர்வீச்சுக்கு உட்படுவோரில் சூல் அல்லது விந்து எதிர்காலத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு சேமிக்கப்படுவதுண்டு.
 • சிகிச்சைகள் யாவும் பெண்நோயியல் – மகப்பேறற்றியல் விஷேட மருத்துவநிபுணர்களின் ஆலோசனைப்படி அவர்களின்  விஷேட கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்.

Dr. தேவரஞ்சனா புவனேந்திரன்