ஆரோக்கியமானவர்கள் கல்சியக் குளிகைகளைப் பாவிப்பது பாதுகாப்பானது அல்ல. டாக்டர் சி. சிவன்சுதன்,

மேலைத்தேச நாடுகளிலே கல்சியக்குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிகைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன. மேலைத்தேசங்களிலே வசிக்கும் எமது உறவினர்கள் நல்ல நோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிகைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அந்தக் குளிகைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலே எமது குடி தண்ணிரில் பெருமளவு கல்சியம் இருக்கின்றது. இந்த அதிகரித்த கல்சியத்தின் அளவால் ஏதாவது பிரச்சினைகள் தோன்றிவிடுமோ என்ற ஏக்கமும் இருக்கிறது. அத்துடன் யாழ்ப்பாண உணவிலும் போதியளவு கல்சியம் இருக்கிறது. இந்த நிலையில் எமக்கு மேலதிக கல்சியக் குளிகைகள் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

கண்களை மூடிக்கொண்டு மேலைத்தேசத்தவர்களின் கலாசாரத் தையும், உணவையும் நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க முயல்கின் றோம். சொந்தமாகச் சிந்திப்பதற்கு எமக்கு நேரமில்லை. எமக்கு எது பொருத்தம் என்று சிந்திப்பதற்கு எமது சொந்த மூளையை ஏன் பாவிக்கக்கூடாது?

நீரைக் கொதிக்க வைப்பதன்மூலம் நீரிலுள்ள கல்சியத்தை அகற்றி விடமுடியும் என்ற ஒரு தப்பான கருத்தும் நிலவுகிறது. கொதித்து ஆறிய நீரிலும் கொதிக்க வைக்காத கிணற்று நீரிலும் உள்ள கல்சியத்தின் அளவின் வித்தியாசம் சிறியதாகும்.

எமது நீரிலும், அன்றாட உணவிலும் இருக்கும் கல்சியம் எமக்குப் போதுமானதாகவே இருக்கின்றது. இதற்கும் மேலதிகமாக கல்சியக் குளிகைகளை உட்கொண்டால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சில நோய் நிலைகளில் எமக்கு மேலதிகமான கல்சியக் குளிகைகள் பாவிக்கவேண்டிய தேவைஇருக்கிறது.

உதாரணமாக எலும்பு சம்பந்தமான சில நோய்கள் சிறுநீரகத் தொழிற்பாடு குறைவடைந்த நிலை சில குடல் சம்பந்தமான நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் போன்ற நோய்நிலைகளில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கல்சியக்குளிகைகளைப் பாவிக்க முடியும் வைத்திய ஆலோசனை இன்றிக் கல்சியக் குளிகைகள் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

எமது மண்ணுக்கும் சூழலுக்கும் கலாசாரத்திற்கும் ஏற்றவாறு எமதுவாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வோம்.

டாக்டர் சி. சிவன்சுதன், 
வைத்திய நிபுணர்,