பாரிசவாதம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை

நாளாந்த கருமங்களில் ஈடுபடும் போது பின்வரும் ஏதேனும் மாற்றங்களை உணர்கின்றீர்களா?

 • உடலினோரு அங்கமோ ( முகம், கை, கால்) பாதி உடலோ உணர்வற்றதன்மை திடீரென ஏற்படுதல்
 • சடுதியானதொரு தடுமாற்றம் அல்லது பேசுவதற்று முயற்சி செய்யும் போது நாக்கு பிறழாத தன்மை அல்லது மற்றவர்கள் பேசுவதை கிரகித்து உள்வாங்க முடியாத தன்மை.
 • ஒரு பக்கப் பார்வையோ, இரு கண்களின் பார்வையிலோ திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல்.
 • நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென உருவாகும் சமனிலை குழப்பம் அல்லது உடல் கட்டுப்பாட்டுடன் இயங்குவதில் ஏற்படும் குழப்பம் அல்லது தலைச்சுற்று , சாதாரணமாக நடக்கமுடியாமை அல்லது தள்ளாட்டம்.
 • எந்தவொரு காரணமும் இன்றி உருவாகும் தாங்கமுடியாத தலைவலி

இவற்றில் எந்தவொரு மாற்றம் தென்படினும் உடனடியாக எந்தவொரு கால தாமதமுமின்றி அருகிலுள்ள உயர்மட்ட வைத்தியசாலைக்கு செல்லுங்கள். ஏனெனில் உங்களுக்குக் காட்டப்பட்ட குணங்குறிகள் பாரிசவாதமாக இருக்கலாம்.

பாரிசவாதம் மருத்துவத் துறையில் அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாகும். வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் இந்த நோய் நிலையை கூடியளவு தடுக்கமுடியும். அதனை மீறியும் நோய் ஏற்படின், குணங்குறிகள் தோன்றி நான்கரை மணித்தியாலங்களுக்குள் நோய் கண்டறியப்பட்டால் விஷேடசிகிச்சைகள் வழங்குவதன் மூலம் வீரியத்தைக் குறைக்க முடியும். எனவே பாரிசவாதம் தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது.

பாரிசவாதம்

 • இலங்கையில் ஏற்படும் வைத்தியசாலை மரணங்களுக்கான ஐந்தாவது காரணி
 • நீண்டகால இயலாமையை தோற்றுவிக்கும் பிரதானமான நோய்.
 • சீரான வாழ்க்கை முறையினாலும், போதிய தகவல் அறிவினாலும் தடுக்கப்படக்கூடியது.

மூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்படுவதனால், மூளைக்கலங்கள் போதியளவு ஒட்சிசன் அற்று செயலிழக்கின்றன நான்கு நிமிடங்களுக்கு இவ்வாறு ஒட்சிசன் தடைப்படுமாயின் நரம்புக்கலங்கள் முற்றாக செயலிழந்து இறந்து விடக்கூடியவை. மூளையானது ஏறத்தாழ 30 பில்லியன் நரம்புக்கலங்களால் ஆனது ஒவ்வொரு ஒட்சிசன் தடைப்படும் நிமிடமும் 1.4 மில்லியன் நரம்புக்கலங்கள் மரணிக்கின்றன. எனவே குருதிச் சுற்றோட்டம் தடைப்பட்டு நரம்புக்கலங்கள் இறக்கும் போது குறிப்பிட்ட மூளைப்பகுதியால் செயற்படுத்தப்படும் உடல் அங்கம் செயலற்றுப் போகின்றது. இதனையே பாரிசவாதம் என்கிறோம்.

மூளைக்கான குருதிச் சுற்றோட்டம் இரண்டு காரணங்களால் தடைப்படலாம் அவையாவன

1. இரத்தக் கசிவு
2. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு

இவை இரண்டுமே பாரிசவாதத்தை தோற்றுவிக்கலாம்.

பாரிசவாதம் ஏற்படும் போது மூளையில் உருவாகும் மாற்றங்களால் மூளைக் கலங்கள் வீக்கமடைவதால் மூளையின் தொழிற்பாடு மேலும் பாதிக்கப்படுகின்றது.

எந்த வகையான பாரிசவாதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய நோய் பற்றிய சரியான விபரம், பாதிக்கப்பட்டவரை முறையாக பரிசோதித்தல் என்பவற்றுடன் சில குருதி பரிசோதனை முடிவுகளும் CT கதிர்ப்படமும் இன்றியமையாதவை.

இரத்தக் கசிவினால் ஏற்படும் பாரிசவாதம்

15 வீதமான பாரிசவாதங்கள் மூளையினுள்ளோ மூளையை சூழவுள்ள குருதிக் கலன்களிலோ ஏற்படும் வெடிப்பினால் இரத்தக்கசிவு ஏற்பட்டு உருவாகின்றன. இவை பொதுவாக உயர் குருதி அழுக்கத்தினால் ஏற்படுபவை. மூளையை CT படம் எடுத்து உறுதிசெய்யப்படும் இந்த நிலை, குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளாலும், சில வேளைகளில் சத்திரசிகிச்சை மூலம் மூளையினுள் சேகரிக்கப்பட்ட குருதியை அகற்றுவதனாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படமுடியும்.

குருதிக் குழாயில் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதம்

85 வீதமான பாரிசவாதங்கள் குருதிக் கலன்களில் கொழுப்புப் படை படிவதால் ஏற்படும் ஒடுக்கத்தினாலோ, குருதிக் கலன்களில் ஏற்படும் அடைப்பினாலோ உருவாகின்றன. இவையும் உயர் குருதி அமுக்கத்தினால் ஏற்படலாம். இவ்வகையான பாரிசவாதம் மூன்று பிரதான காரணங்களால்
ஏற்படலாம்

 1. மூளைக்கலங்களுக்கு குருதி வழங்கும் குருதிக்குழாய்கள் கொழுப்புப் படையால் அடைக்கப்படுதல்
 2. உடலின் ஏதோவொரு பாகத்திலுள்ள குருதிக்குழாயிலுள்ள அடைப்பு குருதிச் சுற்றோட்டத்துடன் நகர்ந்து மூளைக்கான குருதிக்குழாய்களை அடைத்தல்.
 3. மாரடைப்பு போன்ற காரணங்களால் இதயத்தொழிற்பாடு குறைவடைவதனால் குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு மூளைக்கான இரத்த வழங்கல் குறைவடைதல்

மருத்துவ ரீதியில் நோக்கும் போது குருதிக் குழாய் அடைப்பால் ஏற்படும் பாரிசவாதத்தை துரிதமாக கண்டறியும் இடத்து, விஷேட ஊசிமருந்து மூலமான சிகிச்சை வழங்குதன் மூலம் ஏற்படும் பாதிப்பின் அளவை பாரியளவு குறைக்கமுடியும்.

உங்கள் உடற்றொழிற்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டு நான்கரை மணித்தியாலங்களுக்குள் CT கதிர்ப்படம் மூலம் மூளையுள் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் உருவான பாரிசவாதம் அல்ல என்பதை உறுதி செய்வதுடன், குருதி அமு்கம், குருதி உறையும் தன்மை என்பனவும் சரி செய்யக் கூடியதாக இருப்பின், குருதிக்குழாயிலுள்ள அடைப்பைக் கரைபதற்கு வழிவகைகள் செய்யக்கூடியதாக இருக்கும்.

உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவாக இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பினை கரைப்பதற்கு Alteplase எனப்படும் மருந்தை பாரிசவாதம் ஏற்பட்டு நான்கரை மணித்தியாலங்களுக்குள் ஊசி மருந்து மூலம் உட்செலுத்துவது மிகவும் அத்தியாவசியமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகமானோருக்கு இந்த மருந்தை வழங்கமுடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது. இதனாலேயே பாரிசவாத்திற்கான குணங்குறிகள் காணப்படின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை அணுகுவது அவசியமாகும்.

பாரிசவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள்.

பாரிசவாதம் ஏற்படுவதற்கான சில காரணிகளை தடுக்கமுடியாது எனினும் பெரும்பாலனவற்றை நமது வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்கமுடியும்.

வயது முதிர்வுடன் பாரிசவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. அத்துடன் ஆண்கள் இரத்த உறவினர்களுக்கு பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் மற்றும் முன்னர் சிறு பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு பாரிசவாதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

இவற்றை தவிர பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பாரிசவாதத்தால் தாக்கப்படும் வாய்ப்பை குறைத்துக் கொள்ளலாம்.

1.உயர் குருதி அமுக்கத்தை தவிர்த்தல்

 • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குருதி அமுக்கத்தை பரிசோதித்தல்
 • குருதி அமுக்கம் 140/90 mmHg க்கு மேலாக தொடர்ச்சியாக இருப்பின் வைத்திய உதவியை நாடுதல்

2.புகைத்தலை தவிர்த்தல்
3.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்

4.அதிகளவு கொழுப்புச் சத்துடைய உணவை அளவோடு உள்ளெடுத்தல்

5.தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

6.அதிகளவு மது அருந்துவதை தவிர்த்தல்

7.மன அழுத்தம் அற்ற வகையில் வாழ்க்கைமுறையை வடிவமைத்தல்

8.சிறு பாரிசாதமோ, தற்காலிக பாரிசவாதமோ ஏற்பட்டிருப்பின் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான முறையில் கிரமமாக எடுத்தல்

9.உணவுப் பழக்கவழக்கங்களை சுகாதாரமான முறையில் பின்பற்றுவதுடன், உடற்பருமனையும் சீராக பேணுதல்.

பாரிசவாதம் ஏற்படுவதை தடுக்க முயற்சிப்பதன் மூலம் வாழ்க்கையை இலகுவாக்கலாம் அவற்றையும் மீறி பாரிசவாதம் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்று உயர்மட்ட வைத்தியாசலையோன்றில் (போதனா வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதன் மூலம் இயலாமையின் அளவை குறைத்துக்கொள்ளலாம். நோயற்ற வாழ்வை வாழ்வதும், நோயுடனும் உச்சக்கட்ட செயற்றிறன் கொண்ட வாழ்வை வாழ்வதும் உங்கள் கைளிலேயே தங்கியுள்ளது.

Dr. மயூரி விஸ்வகுமார்