நோய்கள் வரும்வரை காத்திருக்காது எம்மை நாம் காத்துக் கொள்வோம் – Dr.எஸ்.சிவன்சுதன்

தமிழ் எங்கள் மூச்சு என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து மூச்சு எவ்வளவு முக்கியமான தென்பது எமக்கு தெரிந்திருக்கிறது. சுவாசம் எமது சுகத்துடன் பின்னிப்பிணைந்தது. சுவாசம்சுத்தமானதாக இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் சுகத்துடன் வாழமுடியும்.

வீடுகள்,கட்டடங்கள் கட்டப்படும் பொழுது எவ்வளவு பெரியயன்னல்கள் கதவுகள் இருக்கவேண்டும் என சட்ட விதிகள் இருக்கின்றன. இவை வீடுகளில் போது மானளவு காற்றோட்டத்தை பேணி மக்களைச் சுகத்துடன் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே ஏற்படுத்தப் பட்டவையாகும்.

இவ்வாறு அமைக்கப்பட்ட யன்னல்களையும் கதவுகளையும் திருடர்களிற்கும் நுளம்புகளிற்கும் பயந்து மூடி வைத்துவிட்டு அதனுள்ளே ஒழிந்து வாழ்ந்து வருகின்றோம். இதனால் நோய் வாய்ப்படுகின்றோம். சுத்தமான காற்றில் 20 வீதம் ஒட்சிசன் இருக்கின்றது. இது மனிதனின் சுக வாழ்விற்கு முக்கியமானது. மனிதன் சுவாசிக்கும் பொழுது இந்த ஒட்சிசன் உள் ளெடுக்கப்பட்டு காபனிரொக்சைட்டு என்ற வாயு வெளிப்படுகின்றது.எனவே பூட்டிய அறையினுள் நாம் உறங்கும் பொழுது காற்றில் ஒட்சிசன் அளவு குறை வடைந்து காபனீரொக்சைட்டின் அளவு அதிகரிக்கின்றது.

இவ்வாறு அசுத்தமடைந்த காற்றை நாம் மீண்டும் மீண்டும் சுவாசிப்பது ஆபத்தானதாகும். இந்த அசுத்தக் காற்றை மின் விசிறி போட்டு சுற்ற வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. இதனுள் நுளம்புச் சுருளும் கொளுத்திவைக்கப்படின்நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும்.

இவ்வாறாக அடைக்கப்பட்ட வீட்டினுள் நாம் அடைந்திருக்கும் பொழுது எமக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. தலையிடி முட்டு நித்திரைக் குறைவு இலகுவில் கோபம் அடைதல் கல்வி கற்றலில் கஷ்டம் வாழ்க்கையில் பிரச்சினைகள் வேறுபட்ட நுரையீரல் சம்பந்தமான நோய்கள் கிருமி தொற்றுகை போன்றவையாகும்.

எமது சொத்துக்கள் தொலைந்து விடும் என்று கதவடைப்புச் செய்து எமது சுகத்தை தொலைத்து விடுகின்றோம். சொத்தை பாதுகாக்க எமது சுகத்தை தியாகம் செய்ய துணிந்து நிற்கின்றோம்.

திருடர்கள் எமது உடமைகளை திருடுகிறார்களோ இல்லையோ எமது உடற்சுகத்தை திருடிக்கொள்கிறாள்கள்.பூட்டிய வீட்டினுள் நுளம்பு சுருள்கள் நுளம்புகள் இரத்தத்தைக் குடிப்பதைக் குறைக்கின்றனவோ இல்லையோ மனிதனின் வாழ் நாளைக் குடித்துவிடுகின்றது.

நாம் ஏன் இந்தகதவடைப்புபோரை கைவிடக்கூடாது. யன்னல்களில் மாட்டக்கூடிய நுளம்பு வலைகளை தயாள் செய்து அவற்றை யன்னலில் மாட்டி யன்னல் கதவுகளை திறந்து வைப்போம். வீடும் அறைகளும் காற்றோட்டம் உள்ளதாக இருப்பதை உறுதி செய்து கொள்வோம்.

வீட்டின் உட்புறத்தை தூசிகள் படியாதவாறு சுத்த மாக வைத்திருப்போம். நோய்கள் வரும் வரை காத்திருக்காது நோய் வரும் முன் எம்மை காத்துக் கொள்வோம்.

Dr.எஸ்.சிவன்சுதன்