உங்கள் வீட்டில் யாருக்கேனும் படுக்கைப்புண்கள் உண்டா? (Bed sore) – Dr.க.சிவசுகந்தன்

படுக்கைப்புண் என்றால் என்ன? இது எவ்வாறு ஏற்படுகிறது?

மிகவும் நலிந்த நிலையிலுள்ள நோயாளர்கள் படுக்கையில் தாமாகவே அசைந்து படுப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இவ்வழுத்தம் அப்பகுதியிலுள்ள தோலின் இரத்த ஓட்டத்தை இல்லாமல் செய்கிறது. தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இரத்த ஓட்டம் தடைப்படுமானால் அப்பகுதியில் உள்ள தோல் பழுதடைந்து புண்கள் உருவாகின்றன.

படுக்கைப்புணி யாருக்கு அதிகம் ஏற்படுகிறது?

 • உடற்பலவீனமுள்ள உடலசைவுகள் பாதிக்கப்பட்டோர். பாரிசவாத நோயாளிகள், விபத்துக்களால் கை, கால் இழந்து அசைய முடியாத நிலையிலுள்ளோர்.
 • உடலில் வலியினை உணர முடியாதோர் – நீரிழிவு நோயாளிகள், தொழு நோயாளர்கள்
 •  மனநிலை பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர்
 • அதிக போதை மற்றும் மயக்க நிலையை தோற்றுவிக்கக்கூடிய மருந்துகள் போன்றவற்றை உட்கொள்வோர்.

இது எப்பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது?

இவை பொதுவாக தோலுக்கு அருகாமையில் எலும்புகள் காணப்படும் இடங்களில் உருவாகின்றன.

 • நாரியின் கீழ்ப்புறம்
 • ஆசனப்பகுதி
 • பாதங்கள்
 • இடுப்புப்பகுதி
 • முதுகுப்பகுதி

இதன் அறிகுறிகள் என்ன?

 • முதலில் தோலின் நிறம் சிவப்பாக மாறும். அதை தொடர்ந்து கறுப்பாக மாறும்.
 • அதன் பின் தோலில் சிதைவுகள் தோன்றி புண்ணாக உருவாகும்.
 • உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடின் இது எலும்புகளை பாதிப்பதுடன் நோய்க்கிருமிகள் உடலெங்கும் பரவும்.

இது ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது?

 • இதற்கு சிகிச்சை அழிப்பது சிரமமாகும். எனவே வருமுன் தடுப்பதே சிறந்தது.
 • தொடர்ச்சியாக படுக்கயிலுள்ள நோயாளர்களை குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருதடவையேனும் புரட்டி விட வேண்டும். இதனால் ஒரே இடத்தில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுதல் தவிர்க்கப்படும்.
 • நோயாளியின் உடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக நீர் அடைத்த மெத்தைகள், காற்றடைத்த மெத்தைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது வாங்க வசதி குறைந்தோர் மிருதுவான தலையணைகள், மெத்தைகளை பயன்படுத்தலாம்.
 • நோயாளியின் உடலை எப்போதும் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். பொதுவாக இந்நோயாளிகள் தம்மை அறியாமலேயே மலம், சலம் கழிப்பர். இதனால் இடுப்புப்பகுதி, மலவாசல் போன்றவற்றை தொடர்ச்சியாக அவதானித்து உலர்வாக பேணவேண்டும்.
 • ஏதாவது இடத்தில் புண் தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படின் அந்த இடத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
 • தேவையான உடற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் உடலசைவுகளை மேம்படுத்தலாம்.
 • அன்றாடம் நோயாளியை குளிக்கவைத்து ஈர உடலை முழுமையாக துவட்டி ஈரலிப்பை உறிஞ்சக்கூடிய பவுடர் போன்றவற்றை பூசுவது நல்லது.
 • போசாக்குள்ள புரதச்சத்து நிறைந்த உணவுகளை நோயாளிக்கு வழங்குவது நல்லது.

படுக்கைப்புண் ஏற்பட்டால் நான் எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

 • ஒவ்வொரு நாளும் நோயாளியை குளிக்க வைக்கும் போது கட்டிய மருந்துகளை அகற்றி சவர்க்காரம், உப்புநீர் போன்றவற்றால் கழுவவேண்டும்.
 • தோலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பாவிக்க கூடாது.
 • கிருமி நீக்கப்பட்ட சுத்தமான பருத்தி துணியால் புண்ணை மூடி கட்டுப்போட வேண்டும்
 • புண்ணுக்கு போடப்பட்ட கட்டு நனைந்திருந்தால் உடனடியாக அதனை அகற்றி புதிய கட்டு இடுதல் வேண்டும்.
 • கிருமித்தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், சீழ்வடிதல், துர்நாற்றம் போன்றவை இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். படுக்கைப்புண் உள்ள நோயாளிகள் உளரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இதனால் உளரீதியான அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.

Dr.க.சிவசுகந்தன்