மருந்துவகைகளைப் பாவிக்கும்போது விடக்கூடிய தவறுகள்

நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும்போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக் காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படு கின்றது.

 1. நோய் குணமான பின்பும் மருந்து வில்லைகளை உபயோகிக்க வேண்டும்?”
  சில நோய்கள் மட்டுமே குறுகிய மருந்துகள்மூலம் முற்றாகக் குணப்படுத்தக்கூடியன. சில நோய்களுக்கு நீண்டகால அடிப்படை யில் மருந்துகளைத் தவறாது உள்ளெடுப்பதன்மூலம்தான் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும், தாக்கத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும். இவ்வாறான நோய்களாக உயர் குருதி அமுக்கம், நீரிழிவு (சலரோகம்) போன்றவற்றைக் கூறலாம்.
  சில நோய்கள் குணமாவதற்கு நீண்டகால அடிப்படையில் இடை விடாத சிகிச்சை பெறவேண்டும். நோய் மீண்டும் வருவதற்குச் சிகிச்சையை இடைநிறுத்துதல் காரணமாக அமையலாம். உதாரணமாகக் காசநோய்.

  1. சில நோய்கள் எதிர்காலத்தில் வரலாம் என்ற ஆபத்துடையவர்கள், சில மருந்து வகைகளை முன்கூட்டியே எடுத்து அவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றனர் என்பதும் குறிப்பி டத்தக்கது. எனவே, சிகிச்சையை இடைநடுவே நிறுத்துதல் எங்கள் நோய் நிலைமையை மேலும் மோசமானதாக்கும் என்பதனைக்கவனத்திற் கொள்வோம்.
 2. “மருந்து மாத்திரைகளைப் போட்டவுடன் எனது தலை சுற்றுகிறது. வயிறு எரிகின்றது. அன்றாடக் கடமைகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அதனால் அந்த மருந்து வகைகளை நான் பாவிப்பதே இல்லை” என்று கூறுகின்றனர். வைத்தியரால் வழங்கப்படும் மாத்திரைகள், நல்ல விளைவுகளுக்கு மேலதிகமாக சிலருக்கு மட்டும் சில வேண்டத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லன. சிலருக்கு ஒவ்வாமை, தலைச்சுற்று, தலைவலி, வாந்தி வருவதுபோல் இருத்தல், வயிறு எரிவு, நெஞ்சு எரிவு போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் அதனை நாம் மறைக்காமல், வைத்தியரிடம் கூறி அந்த மருந்துக்குப் பதிலாக வேறு மாற்று மருந்துகளைப் பெற்றுப் பூரணசுகம் பெறலாம். நாமாகவே சிகிச்சையை இடைநிறுத்தும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகள், பக்க விளைவுகளினை விடப் பல மடங்கு மிகமோசமானவை என்பதனை மனதில் வைத்திருங்கள். உதாரணமாக கட்டுப்பாட்டில் இல்லாத உயர் குருதி அமுக்கம், பாரிசவாதம் போன்ற நோய்களுக்கு இட்டுச் செல்லும்.
 3. “இவ்வளவு மருந்து மாத்திரைகளையும் போட்டால் எனது உடம்பு என்னத்துக்காகும்?”
  அதிக நோய்களைக் கூட்டாக உடையவர்கள் இவ்வாறு நினைக்கிறோம். உதாரணமாக உயர்குருதி அமுக்கம், சலரோகம், இதயநோய்கள் இவை மூன்றையும் கூட்டாக உடையவர்கள் ஒரே தடவையில் ஐந்துக்கு மேற்பட்ட வெவ்வேறு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நேரலாம். மருந்து வில்லைகள் எங்கள் உடல் நிலைமையை மேம்படுத்துவதற்காக அன்றி மோசமானதாக்குவதற்கு அல்ல என்பதனைக் கருத்திற்கொள்வோம். இத்துடன் வைத்தியர் எமக்கு வழங்கும் மாத்திரைகள் நோயைக் குணப்படுத்த மட்டுமன்றி அவற்றில் எங்களுக்குத் தேவையான விற்றமின்கள், கனியுப்புக்கள் அடங்கிய மாத்திரைகளும் அடங்குகின்றன.எமது நோய்க்கான மருந்துகளை நாமாகவே மருந்துக்கடையில் (Pharmacy)இல் வாங்கிப் பாவித்தல் வைத்திய ஆலோசனையின்றி தேவையற்ற – எங்களுக்குத் தெரியாத மருந்துகளைப் பாவனை செய்யும் போது, எங்கள் நோய்களுக்கு மேலதிகமாக மேலும் நோய்களைத் தருவித்துக்கொள்ளும் ஆபத்துள்ளது. நாங்கள் உபயோகிக்கும் அல்லது வைத்தியரால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை மருந்துக்கடைகளில் வாங்கிப் பாவிக்கும்போது அங்கு (Pharmacy) இல் வழங்கப்பட்ட மருந்தும் வைத்தியரால் பரிந்துரைக் கப்பட்ட மருந்தும் ஒன்றா என்பதனை மீண்டும் உறுதி செய்து கொள்வோம். நோயாளர்களாகிய நாம் அனைவரும் வைத்தியரிடம் நாம் உபயோகிக்கும் மருந்துபற்றிக் கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியவை:

  1. எந்த நோய்க்காக மருந்து வழங்கப்படுகின்றது?
  2. மருந்தின் பெயர்
  3. மருந்தின் நோக்கம்
   – நோயைக் குணமாக்க
   – நோய்க் குணங்குறிகளை அகற்ற/இரண்டுக்குமாக
  4.  எப்போது/எவ்வாறு எந்நேரங்களில் மருந்துகளை உள்ளெடுத்தல்.
  5. ஒருமுறை போட மறந்தால் என்ன செய்வது?
  6. எவ்வளவு காலத்துக்கு மருந்துகளை உள்ளெடுக்கவேண்டும்?
  7. வேண்டத்தகாத பக்க விளைவுகளை அறிந்துகொள்வது எவ்வாறு?
  8. மருந்தில் ஏற்படுத்தும் பாதிப்பு.

 எஸ்.தனிஷன்