வேலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு வேலைசெய்ய ….

நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கவேண்டும். அது உங்களுக்கு வசதியாகவும் ஏற்றதாகவும் இருந்தால் மட்டுமே, உங்களால் நல்ல முறையில் வேலை செய்து சிறந்த பெறுபேற்றைக் கொடுக்க முடியும். நீங்கள் உங்கள்  வேலைத்தளத்தில் பணிகளை மகிழ்ச்சியுடன் ஆற்ற சில விடயங்களைப் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக நீங்கள் உங்களது முதலாளியை எப்படி சமாளிப்பது என்றும், உங்களது நண்பர்கள் போல நடிக்கும் உங்கள் சக தொழிலாளர்களை எப்படி அடையாளம் கண்டுகொண்டு அதற்கேற்ற போல செயற்படுவது எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணமானது உங்களுடைய சுமையை அதிகரிக்குமே தவிர குறைக்காது. இந்த எண்ணங்களில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தினீர்களானால், உங்களுடைய வேலைகளைச் சரிவர செய்யமுடியாததோடு மன அழுத்தமும் ஏற்பட்டுவிடும். இந்நிலைமையானது நீங்கள் வேறு புதிய வேலை தேடுவதற்கான ஒரு சூழ்நிலையிலே உங்களைக் கொண்டுசென்றுவிட்டுவிடும். அடிக்கடி வேலை மாற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான தீர்வாகுமா? உங்கள் வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை யோசிப்பதே சிறந்தது. வேலையை விட்டுவிடுவது அல்ல.

நல்ல நண்பர்களை உருவாக்கல்

நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் ஒரு மன ஒன்றிப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நல்லதொரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும். வீட்டிலேயே எப்போதும் சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் உடன் வேலை செய்பவர்களோடு வெளியேசென்று அவ்வப்போது சாப்பிடலாம். வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து, அனைவருடனும் பகிர்ந்து உண்ணலாம். இது உங்களுக்கு உங்களுடன் வேலை செய்பவர்களுடன் நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இது நீங்கள் பணி புரியும் இடத்தில் நல்ல மகிழ்ச்சிகரமான சூழலைத் தோற்றுவிக்கும். எனவே, வேலைதளத்தில் மகிழ்ச்சியோடு பணியாற்ற எளிய சில வழிமுறைகள் உங்களுக்காக..

சொந்த விடயங்களை எப்போதும், தனிப்பட்டதாகவே வைத்துக்கொள்ளல்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக முக்கியமாக உங்களுடைய சொந்த விடயங்களை நீங்கள் தனிப்பட்டதாகவே வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றை உங்கள் வேலையோடு சோ்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அது எல்லா விதத்திலும் உங்களுடைய பணித்திறமையைப் பாதித்து விடும். எனவே நீங்கள் வேலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு இருக்க உங்கள் சொந்த விடயங்களை உங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல்

நீங்கள் உழைப்பை வெறுத்தால், பின் உங்களுடைய வேலையும் உங்களுக்கு வெறுத்து விடும். எனவே நீங்கள் சோம்பலுக்கும் கெட்டபழக்கவழக்கங்களுக்கும் இடங்கொடுக்காமல் உற்சாகமாகவும் நியாயமான முறையிலும் உங்களுடைய பணியை ஆற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும்.

தனித்து இருத்தலைத் தவிர்த்தல்

உங்களுடன் பணிபுரிபவர்களுடன் நட்பு மனப்பான்மையுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நட்பு மனப்பான்மை உங்களுக்கு துன்பங்கள் வரும் போது கை கொடுக்கும். ஆனால் நீங்கள் யாரிடமும் ஒட்டாமல் தனித்து இருந்தால் அது உங்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகளையே தோற்றுவிக்கும்.

நன்றி சொல்லுதல்

வேலைத்தளத்தில் சக ஊழியா்கள் செய்யும் சிறிய சிறிய உதவிகளுக்கும் நன்றி சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் அவா்களுக்கும் இடையில் சுமூகமான உறவைப் பேண உதவுதோடு, அவா்கள் மென்மேலும் உங்களுக்கு உதவமுன்வர தூண்டுதலாக அமையும்.