மழலைகளின் மனதினிலே – Dr.சி.சிவன்சுதன்

வளரும் குழந்தைகளின் மனதிலே பெரியவர்களும் பெற்றோர்களும் ஒரு சகலகலா வல்லவர்கள் என்ற மனப்பதிவே இருந்து கொண்டிருக்கும். தம்மை எந்தக் கஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பார்கள், தாம் விரும்புவதை செய்து தருவார்கள், சரியான பாதையிலே நடத்துவார்கள், நிலாவைக் கூடக் கையில் பிடிக்கும் வல்லமை உள்ளவர்கள், அவர்கள் செய்வதெல்லாம் நல்ல விடயங்களாகத்தான் இருக்கும் என்றெல்லாம் நம்பி கொள்வார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்தக் குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்கள் சின்னத்தனமாக நடந்து கொள்ளும் பொழுதும் கோட்டு தம்மிடையே சண்டை செய்யும் பொழுதும், அழும் பொழுதும், தமது இயலாமையை வெளிப்படுத்தும் பொழுதும், தீய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதும் குழந்தைகளின் மன ஓட்டம் குழப்பமடையும்.

இவர்களால் தம்மை பாதுகாக்க முடியுமா என்ற பாதுகாப்பற்ற தன்மை தோன்றும். அந்த சிறிய மனங்களிலே தீய விடயங்கள் ஆழப்பதியும். இது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆளுமை விருத்திக்கும் பெரும் பாதகமாக அமையும். எனவே சிறுவர் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயம் பற்றி சிந்திப்பது பயன் தரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்