ஆறுதலும் தெளிவும் பெறுவோம்….. Dr.சி.சிவன்சுதன்

கஷ்டங்கள் வரும் பொழுது கடவுளின் ஞாபகம் சேர்ந்து வருகிறது. கவலைகளும் கஷ்டங்களும் தொடர்ந்தால் கடவுளிடம் மனமுருகி வேண்டியவையும் கிடையாது போனால் கோபம் கூட வருகிறது.

கேட்டும் கிடைக்காத போது கடவுள் நம்பிக்கையும் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கும் எம்மைக் காப்பதற்கும் மட்டும் தான் கடவுள் இருக்கிறரா? சரி கேட்பவற்றை எல்லாம் கொடுக்கும் கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் எல்லாவற்றையும் கேட்க எல்லாமே கிடைக்குமானால் இன்னொருவனுக்கு ஒன்றுமே கிடைக்காமல் போகாதா?இது நியாயமாகுமா? இதையும் மீறி எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடின் பூவுலகம் எவ்வாறு இயங்க முடியும். ஒன்றின் இழப்பிலே இன்னொன்று கிடைப்பதும் தோல்விகளும் வெற்றிகளும் மாறிமாறி ஏற்படுவதும் எதிர்பார்ப்பவற்றிலே சில கிடைக்காமல் போவதும் எதிர்பாராமலேயே சில கிடைக்கப்பெறுவதும் சர்வ நிச்சயமானது.

கடவுளிடம் எம்மை சரியான பாதையில் வழிநடத்துமாறு கேட்போம்.எமது மனோபலத்தையும் எதையும் தாங்கி சமாளிக்கும் மன உறுதியையும் வளர்த்து விடக் கேட்போம். எமது சந்தோசங்களையும் முன்னேற்றங்களையும் கடவுளிடம் பகிர்ந்து கொள்வோம். எமது கவலைகளையும் பிரச்சினைகளையும் அவரிடம் முறையிட்டு ஆறுதலும் தெளிவும் பெறுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் உலகை சரியான பாதையில் வழி நடத்துவார்.

Dr.சி.சிவன்சுதன்

பொது வைத்திய நிபுனர்