பயம் கொள்ளத் தேவையற்ற விடயங்களுக்கு பயந்துகொண்டே இருப்பது…. ? – Dr.சி.சிவன்சுதன்

பயப்பட வேண்டிய விடயங்களுக்கு பயம் இன்றி இருந்து கொள்வது ஆபத்தானது பயம், என்றும் அதே சமயம் பயம் கொள்ளத் தேவையற்ற விடயங்களுக்கு பயந்துகொண்டே இருப்பதும் பயம் என்றும் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் பயம் கொள்ளத் தேவையற்ற பலவற்றிற்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பால் குடிக்க பயம், தயிர் சாப்பிடப்பயம், தவசி முருங்கை சாப்பிடப்பயம், இரவிலே இலைவகை உள்ள உணவுகள் உண்ண பயம், சில உயிர்க்காப்பு மருந்துகளை உள்ளெடுக்க பயம், இறால் சாப்பிடப்பயம், அகத்தி மரத்தை வீட்டில் வளர்க்க பயம், முட்டை சாப்பிட பயம், முட்டு வருத்தத்தால் கஷ்டப்படினும் பம் பாவிக்க பயம் இவ்வாறாக பயப்படத்தேவை அற்ற பலவற்றிக்கு நாம் பயந்து பயந்து வாழ்வதன் காரணம் என்ன? அதே வேளை பயப்பட வேண்டிய பலவற்றிக்கு பயம் இன்றி வாழ்ந்து பல ஆபத்துக்களை தேடிக் கொள்கிறோமே? இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

உடல் பருத்திருந்தும் உல்லாசமாய் உலாவி வருகிறோம். சந்தோசமாக சோடா குடிக்கிறோம். எதுவித பயமுமின்றி உடற்பயிற்சி செய்யாதிருக்கிறோம். உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று விளக்கமும் கொடுக்கின்றோம். தினமும் தொலைக்காட்சிக்கு முன்னால் மணிக்கணக்காக உட்கார்ந்து இருந்து மகிழ்கிறோம். இரசாயனம் சேர்க்கப்பட்ட மென்பானங்களை அருந்துவதில் பெருமை கொள்கிறோம். சினிமா கதாநாயகர்கள் பாணியில் குடித்து புகைத்து கும்மாளம் அடித்து கதா நாயகர்களாய் உலா வருகிறோம். வாகனம் ஒடுவதில் “திறமையை” காட்ட முயல்கிறோம். இவ்வாறாக பயம் கொள்ள வேண்டிய பல விடயங்களை பயமின்றிச் செய்யத் துணிந்ததன் காரணம் என்ன?

இந்த இரட்டிப்பு ஆபத்திலிருந்து மீள்வது எப்படி?

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்