பொல்லு – Dr.சி.சிவன்சுதன்

பொல்லு ஒரு பெருமையின் அடையாளமாக அனுபவத்தினதும் ஆளுமையினதும் செங்கோலாக சின்னமாக இருந்த ஒருகாலம் இருந்தது.

அன்றைய காலத்திலே உடையார் ஒரு வைபவத்திற்கு போக முடியாமல் இருந்தால் உடையாரின் பொல்லு அவரின் பிரதிநிதியாக அங்கே அனுப்பிவைக்கப்படும்.

பிரபுக்கள் பலரும் தமது அந்தஸ்தின் சின்னமாக பொல்லை கருதினர். அவர்கள் பொல்லு இன்றி வெளியே செல்வது அரிதாகக் காணப்பட்டது.

ஆனால் இன்று பொல்லு பாவிப்பது ஒரு பலவீனத்தின் அடையாளமாக பலரும் கருதத்தொடங்கி இருப்பது ஒரு வேதனையான உண்மை.

பொல்லுபாவிப்பது மூட்டுக்களுக்கும் முள்ளந்தண்டிற்கும் ஒருபக்க பலத்தைக் கொடுத்து அவற்றை பாதுகாப்பதுடன் பல எலும்பு உடைவுகளையும் தடுத்து நிறுத்துகிறது.

பொல்லு பாவனை ஒருவர் தவறிவிழும் சந்தர்ப்பங்களைக் குறைப்பதுடன் மூட்டுவலி, உடல் வலி என்பவற்றையும் குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.

அத்துடன் ஒருவர் உடற் பயிற்சிக்காக பொல்லு பாவனை உறுதுணையாக இருக்கிறது.

இவ்வாறாக பொல்லு பாவனை பயனுடையதாக இருந்தும் அதனை கொண்டு செல்வதற்கும் பாவிப்பதற்கும் நாம் தயங்குவதற்கு காரணம் என்ன?

“சுவரிலும் கதிரை மேசைகளிலும் பிடித்து நடந்தாலும் நடப்பேனே தவிர பொல்லுப்பிடிக்கும் அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல.” என்றுஅடம்பிடிப்போர் பலர்.

பொல்லுபாவியுங்கள் என்று வற்புறுத்த முயன்று கடைசியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதையாக மாறிப்போன சம்பவங்களும் உண்டு.

பொல்லுப் பாவனை சம்பந்தமான எமது சிந்தனைகளில் மாற்றம் ஏற்படவேண்டியதேவை ஒன்று உணரப்படுகிறது.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்