மாரடைப்பு ஒரு கண்ணோட்டம் – Dr.கே.ரஞ்ஞதயாளன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுநம் முன்னோள் வாக்கு. அந்த நோயற்ற வாழ்வு வாழ்வது என்பது எம் ஒவ்வொருவர் கையிலும் ஓரளவு தங்கியுள்ளது.நோய்கள் பலரகம் அதில் முக்கியமாதொன்று மாரடைப்பு ஆகும்.


இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் இருதய நோய்க்கு (மாரடைப்பு) எம்மவரில் பலரும் விதி விலக்கு அல்ல. இந்தநோய்க்கான காரணிகள் பல அதில் முக்கியமானவை

 • குருதியில் கூடுதலானகொழுப்புபதார்த்தம் சேருதல் (cholestrol)
 • சலரோகம் (diabetes)
 • இரத்த அழுத்தம் கூடுதலாக இருத்தல். (high blood pressure)
 • உடற்பருமன் (body weight) அதிகரித்து இருத்தல். முக்கியமாக வயிறுபெருத்து இருத்தல்.
 • புகைபிடித்தல்.
 • போதியளவு உடற்பயிற்சியின்மை.
 • போதியளவு மரக்கறி உணவுகளை உண்ணாது விடுதல்.

வெள்ளம் வருமுன்னே நாம் அணைபோடுவது நல்லதல்லவா. எனவே மேல் கூறியகாரணி களை கருத்தில் கொண்டு அவற்றை பின்வரும் வழிகளால் மட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டும்.

 • கொழுப்புச்சத்து (fat) கூடுதலாக உள்ள மாமிசங்களை குறைத்து கோழி, மீன் போன்ற உணவு களை உட்கொள்ளுதல் சிறந்தது. போதியளவு மரக்கறிகளை உண்ணுதல் சாலச் சிறந்தது.
 • மாச்சத்து அல்லது சீனி, சர்க்கரை உள்ள பதார்த்தங்களை குறைந்த அளவில் உட்கொள்ளுதல்.
 • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்.
 • தினமும் குறைந்தது 30 நிமிடத்திற்கு சுறுசுறுப்பாகநடத்தல்.

மாரடைப்பு வியாதியின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி. இந்தவலி வழக்கமாக நடு நெஞ்சில் அல்லது நெஞ்சின் இடப்பக்கத்தில் ஆரம்பமாகி பின்னர் இடது தோள்பட்டைக்கு அல்லது கழுத்துப் பகுதிக்கோ பரவும் .

இந்த வலி நெஞ்சை இறுக்குவதுபோல் இருக்கும். சிலவேளைகளில் இது நெஞ்சு எரிவு போன்ற வலியாக இருக்கும். இந்த மாரடைப்புக்கு காரணம் -கொழுப்பு படிந்த இருதய நாடிகளில் ஒன்றில் குருதி ஓட்டம் (இரத்த ஓட்டம்) முற்றாக அடைபட்டிருப்பதால் ஆகும்.  இந்த அறிகுறிவரும் பொழுது மருத்துவ உதவியை உடனடியாக நாடுதல் அத்தியாவசியம் ஆகும்.

அடைபட்ட இரத்தநாடியை மருந்து மூலமாகவோ அல்லது வேறு சிகிச்சைமுறை மூலமாகவோ (angioplasty) குணப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படின் இருதயத்தின் பாதிப்பு (damage) கூடுதலாக இருக்கலாம். அத்துடன் மாரடைப்பினால் ஏற்படும் பலகுறைபாடுகளையும் தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

ஒரு இருதய நோயாளி பின் கூறப்பட்ட மருந்துகளை பொதுவாக தினசரி பாவிப்பார்கள்.

 1. அஸ்பிரின் (aspirin)- இது இரத்தம் கட்டிபடும் தன்மையை குறைக்கும்.
 2. குளோபிட்டோகிரல் (clopidogrel) இந்த மருந்தும் அஸ்பிரின் போல இரத்தம் (குருதி) கட்டிபடும் தன்மையை குறைக்கும். மாரடைப்பு வந்தவர்க்கு இந்த இரண்டு மருந் தையும் சேர்த்து கொடுப்பது வழக்கமாகும்.
 3. Betablocker – atenolol carvedilol – இந்த வகையை சேர்ந்த குளிசைகள் பல நன்மையான விளைவுகளை இருதயத்திற்கு கொடுக்கும். உதாரணமாக பாதிக்கப்பட்ட இருதயத் தசை பலவீனமடைவதைக் குறைக்கும். இருதயத் துடிப்பின் அளவை 50-60/நிமிடம் என்றஅளவில் வைத்திருக்கும். இருதய வலிவரும் சாத்தியக் கூற்றை குறைக்கும்.
 4. Gtm மாத்திரை – இந்த மாத்திரையை நாவுக்குகீழ் வைக்கும் போது அது விரைவாக உடலில் போய்ச் சேரும். ஒரு இருதய நோயாளிக்கு நடக்கும் போது வலிவந்தால் (angina) இதைப் பாவிக்கலாம். ஆனால் அடிக்கடி இருதயவலி அல்லது வலி கூடுதலாக இருந்தால் அவர் நிச்சய மாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.
 5. Statin குளிசை – simvastatin atro vastatinfl avastatinpravasstatin – இந்த statin மருந்து உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்யும். இந்த மரு ந்துடன் உணவிலுள்ள கொழுப்பையும் குறைவாக உட்கொண்டால் நிச்சயமாக கொழுப்பின் அளவை நன்றாக கட்டுப்படுத்தலாம்.

இந்த மருந்துகளை விட வேறு பலமருந்துகளையும் ஒரு இருதய நோயாளி பாவிக்ககூடிய தேவை ஏற்படலாம்.

சிலமருந்துகள் நோயாளியைப் பொறுத்து மாறுபடலாம். இரத்த அழுத்தத்தை (bp) கட்டுப்பாட்டில் வைத் திருத்தல் கொழுப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் சாதாரண அளவில் வைத்திருத்தல, புகை பிடிப்பதை தவிர்த்தல்,மதுபானம் கூடுதலாக பாவிப்பதை தவிர்த்தல் ஒரு நோயாளிக்கு மிகவும் முக்கியமாகும்.

இத்தோடு வைத்திய ஆலோசனைகளை தக்கமுறையில் கடைப்பிடித்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் உண்டு.

வந்ததை நினைத்து அச்சமுற்றுக் கொண்டிருக்காமல் மேற்கூறிய அறிவுரைகளை கடைப் பிடிப்பதன் மூலம் நீண்டகாலம் நிறைந்த சுகதேகியாக வாழலாம் என்பதில் ஐயமில்லை.

Dr.கே.ரஞ்ஞதயாளன்.
இருதயசிகிச்சைநிபுணர் லண்டன் (uk)