உள்ளங்கை, பாத கசிவு (Hyper hidrosis). Dr.P.T.ரஞ்சனா

உடலின் ஒருசீர்த்திடனிலையின் ஒரு அங்கமே வெப்பச்சீராக்கல், சாதாரண உடல் வெப்பச்சீராக்கலில் வியர்வைச் சுரப்பிகளின் பங்கும் குறிப்பிடத்தக்களவில் அமைகின்றது. சாதாரண உடல்வெப்பச்சீராக்கலுக்கு மேலதிகமாக சிலரில் அதிகமான வியர்வை சுரக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு அதிக வியர்வை வெளியேற்றம் உடையோர் உளவியல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்டுகின்றனர். நாளாந்த வேலைகளில் நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக எழுதுகருவியை தொடர்ந்து பிடிப்பதில் கூட சிரமத்தைச் சந்திக்கின்றனர். அது மட்டுமன்றி அதிக வியர்வை ஏற்படும் இடங்களில் பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்படுவதனாலும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அடிப்படையான உள்ளங்கை, பாத கசிவு உடையவர்களில் குறிப்பிட்ட பகுதிகளில் அதாவது உள்ளங்கை, பாதம் மற்றும் கமக்கட்டுப் பகுதிகளில் அதிக வியர்வைச் சுரப்பு காணப்படும். இரு புறமும் பொதுவாக சமாந்தரமாகவே வியர்த்திருக்கும். வாரமொன்றில் ஆகக் குறைந்தது ஒரு தடவையாவது இவ்வாறான வியர்வை அதிசுரப்பு காணப்படும். பொதுவாக இவ்வாறான நிலைமை 25 வயதிற்கு முன்னதாகவே ஆரம்பத்திருக்கும். நித்திரையில் இவ்வாறான வியர்வை நிலைமை நிறுத்தப்பட்டிருக்கும். 65 வீதமானவர்களில் குடும்ப அங்கத்தவர் ஒருவர் இவ்வகை நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டிருப்பர்.

இவ்வகை வியர்வை அதிசுரப்பு நிலைமை எல்லா வயதினரிலும் ஏ்படலாமாயினும், பதின்ம பராயத்தினரிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுவர்களில் உள்ளங்கைகள் மற்றும் பாதங்களிலும் பூப்பின் பின் கமக்கட்டுகளிலும் இவ்வாறான வியர்வை அதிசுரப்பு காணப்படுகின்றது. ஆண்களை விட பெண்களே சற்று அதிகமாக இந்நிலைமையால் பாதிக்கப்படுகின்றனர்.
ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது? இவர்களிலும் மற்றையோரைப் போன்றே எண்ணிக்கையில் சமனான அளவு வியர்வைச் சுரப்பிகள் இருப்பினும், அவற்றினால் உருவாக்கப்படும் வியர்வைச் சுரப்பு மற்றையோருடன் ஒப்பிடும் போது அதிகமாகக் காணப்படுவதுடன். இவ் வகை அதிக வியர்வை சுரக்கவல்ல வியர்வைச் சுரப்பிகள் உள்ளங்கை, பாதம், கமக்கட்டு பகுதிகளில் செறிந்திருக்கின்றன. இவ்வகை வியர்வைச் சுரபை்பிகள் உலர்காலநிலை, மன அழுத்தம், உடற்பயிற்சி மற்றும் சிகரட், மது பாவனை, உறைப்பான உணவு உண்ணுதல் என்பவற்றின் போது கிட்டத்தட்ட 10 லீற்றர் வரையான வியர்வையைக் கூட சுரக்க முடிவதுண்டு!
இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் அவதியுறுவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்க்க வேண்டும்.

உறைப்பான உணவகள், சிகரட் மதுபானம் பாவித்தல் என்பவற்றையும் தவிர்த்தல் வேண்டும். இயற்கை நாரிலான தளர்வான அடைகளையே அணிவதற்காகத் தெரிவு செய்ய வேண்டும். இவ்வகை அடிப்படையான உள்ளங்கை பாதக் கசிவுடையோர் அலுமினிய குளோரைட் தயாரிப்புகளை அதிசுரப்பு வியர்வை உடைய இடங்களில் பூசுவதன் மூலம் குணப்படுத்தலாம் எனினும் இது நிரந்தரத் தீர்வாகாது. சிலருக்கு பூசுமிடங்களில் கடி ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை முறை மாற்றம் அலுமினிய குளோரைட் தயாரிப்புப் பாவனையின் பின்னரும் அதிசுரப்பு வியர்வை நிலைமை இருப்பின் தோல் வைத்திய நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

குறிப்பிட்ட பாகங்கள் மட்டுமன்றி உடல் முழுவதும் கடுமையாக வியர்க்கும் தன்மை இரவு நேரத்தில் வியர்த்தல், திடீர் நிறை இழப்பு, நெஞ்சுப்படபடப்பு போன்ற நோயறிகுறிகள் இருப்பின் உடனடி வைத்திய ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். ஏனேனின் மேற்கூறிய அறிகுறிகள் உடலில் வேறு நோய்களின் தாக்கம் ஏற்பட்டு அந்நோய்த்தாக்கத்தின் விளைவினாலேயே அதிக வியர்வை சுரத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்ப வல்லன. அதாவது காசநோய், மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் போது சில வகை மருந்துகளாலும், நீரிழிவு, கேடயச்சுரப்பியின் அதிசுரப்பு நிலை (Hypethyrodism) மற்றும் சில அகஞ்சுரப்பிகளில் ஏற்படும் நோய் நிலைமைகள் (Hyperpituitarism, Phalochromoaytoma) சில வகைப் புற்றுநோய்கள் (Lymphoma) இதய செயலிழப்பு, பதற்றம் (Anxiety) பாரிசவாதம், முண்ணாண் பாதிப்பு ஏற்படல், மாதவிடாய் நிறுத்தம் ஏற்படல் போன்ற நிலைமைகளிலும் அதிகமான வியர்வை சுரத்தல் காணப்படும்.

உள்ளங்கை, பாத கசிவு தவிர்த்து மேற்படி நோயறிகுறிகளும் இருக்கும் பட்சத்தில் வைத்திய ஆலோசனையை நாடுதல் நன்று.

Dr.P.T.ரஞ்சனா