தைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்களும் அதற்கான தீர்வுகளும். மருத்துவர்.M.அரவிந்தன்.

1. தைவாயிட் சுரப்பி தொடர்பான நோய்கள் பற்றிச் சிறிது கூறுங்கள்?
தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பதனால் ஏற்படு கின்ற நோய் (Hypothyroidism), தைவராயிட் சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படுகின்ற நோய் (Hyperthyroidism) ஆகும். மற்றும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும்.

02. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரத்தல் முக்கியமான ஒரு நோயாக உள்ளது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவும்?

தைரொயிட் சுரப்பு குறைவாக சுரக்கும் நோயானது எமது நாட்டிலும் காணப்படுகின்ற மிகப் பிரதான மான தைரொயிட் தொடர்பான நோயாகும். இந்த நோயாளர்கள் கழுத்தில் கழலையோடோ, கழலையின்றியோ இருக்கலாம். சோர்வு, பகல் நேரத்தில் அதிக தூக்கம், உடற்பருமன் அதிகரித்தல், மலச் சிக்கல், குளிர் தாங்க முடியாமல் இருத்தல் மற்றும் பெண்களில் மாதவிடாய் அதிகமாக இருத்தல் போன்ற குணங்குறிகள் இந்த நோயாளர்களுக்கு இருக்கும். இவர்களின் குருதியிலுள்ள தைரொயிட் ஹோர்மோன் அளவை (Free T4, TSH) பரி சோதிப்பதன் மூலம் நோயை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். கழுத்தில் கழலை போன்ற வீக்கமுள்ளவர்களுக்கு ஸ்கான் பரிசோதனை மற்றும் இழையப்பரிசோதனை (FNAC) போன்றவை மேற்கொள்ளப்பட நேரிடுகின்றது.

03. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரப்பதாகக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் வைத்திய சிகிச்சையைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்?

இவர்களுக்குதைரொயிட்மருந்தானது அவர்களின் உடல்நிறை மற்றும் வேறுநோய்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தேவையான அளவில் வைத்தியர்களால் வழங்கப்படுகின்றது. இவ்வாறான நோய் ஏற்பட்டதற்கான காரணத்தை அறியும் சோதனைகளும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை தைரொயிட் ஹோர் மோனின் அளவை (TSH) மதிப்பிடுவதன் மூலம் தைரொயிட் மருந்தின் அளவானது தேவைப் படின் மாற்றப்படுகின்றது. தைரொயிட் மருந்து உட்கொள்பவர்கள் அதனை அதிகாலையில் வெறு வயிற்றில் உட்கொள்வது அவசியமானதாகும். இதன் பின்னர் அரை மணித்தியாலத்துக்கு உணவு மற்றும் தேநீர் போன்றவற்றை உள்ளெடுக்கக்கூடாது. அத்துடன், கல்சியம், இரும்புச்சத்துமருந்து போன்றவற்றையும் தைரொக்சினுடன் சேர்த்து உள்ளெடுக்கக் கூடாது. இவ்வாறு உள்ளெடுக் கும்போது தைரொக்சினின் அகத்துறிஞ்சலானது குறைவடைய நேரிடுகிறது.

04. தைரொயிட் சுரப்பி அதிகளவில் சுரக்கும் நோயின் அறிகுறிகள் யாவை?
தைரொயிட் சுரப்பி அதிகளவில் சுரக்கப்படும்போது உடலில் பல்வேறுபட்ட குணங்குறிகள் ஏற்படுகின்றன. படபடப்பு, கைநடுக்கம் ஏற்படுதல், அதிகளவு வியர்வை ஏற்படுதல், அடிக்கடி மலம் கழித்தல், அதிக வெப்பத்தைத் தாங்கமுடியாமல் இருத்தல், உடல் மெலிவடைதல் மற்றும் பெண்களில் மாதவிடாய் ஒழுங்கற்று காலப்பகுதி குறைவடைதல் என்பவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோயாளருக்கும் தைரொயிட் ஹோர்மோன் அளவை (Seram FreeT4, TSH) குருதியில் பரிசோதிப்பதன் மூலம் நோயை உறுதிசெய்துகொள்ளமுடியும். சில நோயாளருக்கு கண்கள் வெளித்தள்ளி கண் உருட்டுதல், பார்வை இரண்டாகத் தெரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படநேரிடலாம். கழுத்துப்பகுதி யில் தைரொயிட் பெரிதாகி கழலை ஏற்பட்டு இவ்வாறான கண் சம்பந்தமான பிரச்சினைகள் G r a v e s disease எனஅழைக்கப்படுகின்றது. தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன.

5. தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் வைத்திய சிகிச்சைகள் பற்றி விளக்கிக் கூறவும்?

கார்பிமஸோல் (Carbimazole) எனப்படும் குளிகையானது இந்த நோயைக் கட்டுப்படுத்த வழங்கப்படுகின்றது.வைத்திய ஆலோசனையின்படி நோயாளியின் குணங்குறிகள் மற்றும் குருதியிலுள்ள தைரொயிட் ஹோர்மோனின் அளவு என் பவற்றைக் கருத்திற் கொண்டு இந்த மருந்தின் அளவு (dosage) தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை குருதியிலுள்ள தைரொயிட் ஹோர்மோனின் அளவைப் பரிசோதித்து அதற்கேற்ப கார்பிமஸோல் மருந்தின் அளவு மருத்துவர்களால் மாற்றப்படுகின்றது. இந்த மருந்தைப் பாவிக்கும்போது ஏற்படும் சில பக்கவிளைவுகள் சம்பந்தமாக மருத்துவர்கள் எடுத்துக் கூறுவார்கள். கார்பிமஸோல் மருந்தைப் பொதுவாக 18 முதல் 24 மாதங்களுக்கு உள்ளெடுக்கும்போது இந்தநோயானது முற்றிலும் குணமடையும்வாய்ப்பு அதிகமாகும். சில வகையான தைரொயிட்சுரப்பு அதிகரிக்கும் நிலைமைகளின்போது கார்பிமஸோல் மருந்தை இரண்டு வருடங்கள் பயன் படுத்திய பின்னரும் நோயானதுகுணமடையாமல் இருக்கும். இந்தநோயாளருக்கு சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு மருந்தை உட்கொள்ளும் சிகிச்சைடு.(Radio iodine treatment)போன்றவை வழங்கப்பட நேரிடுகின்றது.

06. தைரொயிட் தொடர்பான பிரச்சினையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துக் கூறவும்?

தைரொயிட் சுரப்புக் குறைபாடுடைய (Hypothyroidism) பெண்மணியொருவர்கர்ப்பம்தரித்தலை உறுதிப்படுத்திய உடனேயே தனது தைரொக்ஸின் மருந்தின் அளவை 25mg இனால் அதிகரித்தல் அவசியமாகும். இதன் பின்னர் வைத்திய ஆலோசனைப்படி பரிசோதனைகளை மேற்கொண்டுமருந்தின் அளவை மாற்றுதல் அவசியமாகும்.

கர்ப்பம் தரித்து முதல் 3 மாத காலப்பகுதி மிகவும் முக்கியமானதொரு காலப்பகுதியாகும். சிசுவின் உடல் அங்கங்களின் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் இந்த காலப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. எனவே வைத்திய ஆலோசனையின்படி தேவையான அளவு தைரொக்ஸின் மருந்தை எடுக்காது விடும்போது, பல் வேறுபட்ட குறைபாடுகள் சிசுவில் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதேபோல தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரக்கும் பிரச்சினையுள்ள பெண்மணியொருவர் கர்ப்பம் தரிக்கும் போது அவரது மருந்தின் அளவு வைத்திய ஆலோசனையின்படி மாற்றப்பட (adjustmen) நேரிடுகிறது. கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களின்போது (1st trimester) Propyl thiouracil என்ற மருந்தே Carbimazole க்குப் பதிலாக வழங்கப்பட வேண்டும். எந்தவொரு தைரொயிட் நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்கும் மாதாந்தம் தைரொயிட்ஹோர்மோன் நிலையானது பரிசோதிக்கப்படுவது அவசியமாகும்.

07. தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் புற்று நோய்கள் யாவை?

தைரொயிட் சுரப்பியில் கழலை ஏற்படும்போது சில சந்தர்ப்பங்களில் குணங்குறிகள் மற்றும் கழலையின் தன்மை என்பவற்றைக் கொண்டு புற்று நோய் இருக்கின்றதா என மருத்துவர்கள் சந்தேகிப் பார்கள். இந்த நோயாளருக்கு ஸ்கான் பரிசோதனை மற்றும் இழையப் பரிசோதனை (FNAC) என் பவற்றின் மூலம் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் புற்று நோய்கள் பலவகைப்படும். இவற்றுக்கான சிகிச்சை முறைகளும் புற்றுநோயின் தன்மைக்கேற்ப வேறுபட நேரிடுகின்றது.

08. இறுதியாக, தைரொயிட் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் எமது மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

தைரொயிட்தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளுமிடத்து, அந்த நோயிலிருந்து குணமடைய அல்லது அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. எமது யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள அகஞ்சுரக்கும் தொகுதியியல் (ஹோர்மோன்கள் தொடர்பான) சிகிச்சை நிலையமானது வடமாகாணத்திலுள்ள சகல மக்களுக்குமான ஒரேயொரு ஹோர்மோன்கள் தொடர்பான சிகிச்சை நிலையமாகும். தேவையேற்படுகின்ற நோயாளர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் எமது சிகிச்சை நிலையத்தை அணுகுவதன் மூலம் தேவைப்படும் தரமான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவர்.M.அரவிந்தன்.
விசேட வைத்திய நிபுணர்,
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி,