நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் Dr.சொளதாமினி சூரியகுமாரன்.

இலங்கையைப் பொறுத்த வரை பிறந்ததிலிருந்து 12 வயது வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் தேசிய தடுப்பேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின்படி குறித்த சில ஆபத்தான நோய்களுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்தும், வழங்கப்படும் வயது குறித்தும் கீழே சுட்டிக் காட்டப்படுகின்றது.

BCG – பிறந்தவுடன்
முக்கூட்டு (DTP) + Hep B + Hib 2ம், 4ம், 6ம் மாதங்கள்
போலியோ 2ம், 4ம், 6ம் மாதங்கள் 1½ வயது, 5 வயது.
முக்கூட்டு 1½ வயது, (8ம் மாதம்)
JE 9ஆம் மாதம்
MMR 1 வயது, 3 வயது
DT – 5 வயது
ATD 10 – 15 வயது
BCG தொற்றுத் நோய்த் தடுப்பு மருந்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறந்து 24 மணி நேரத்தினுள் வழங்கப்படுகின்றது. இது பிறப்பு நிறை குறைந்த பிள்ளைகளுக்கு வீடு செல்லும் போதும் 6ம் மாம் 5 வயது வரையுள்ள BCG தழும்பு இல்லாத பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகின்றன. இது காச நோயை ஏற்படுத்தும் Mycobacaiunterius tuberculosis எனப்படும் பக்ரீரியாவுக்கு எதிராக வழங்கப்படுகின்றது. இந்த தடுப்பு மருந்து, இந்தத் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் மூளைக்காய்ச்சல் மற்றும் சுவாசப்பை தவிர்ந்த ஏனைய உடற்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் காசநோய் என்பவற்றைத் தடுக்கின்றது.

மூக்கூட்டு DTP தடுப்பு மருந்து குக்கல், தொண்டைக்கரப்பான் மற்றும் ஈர்ப்பு வலிக்கு எதிரான தடுப்பு மருந்தாகக் காணப்படுகின்றது. இந்தத் தடுப்பு மருந்து 2ம், 4ம், 6ம் மாதங்களிலும் 1½ வயது, 3 வயதிலும் வழங்கப்படுகின்றது. இது மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.

Hepatitis B தடுப்பு மருந்து Hepatitis B எனப்படும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் ஒரு வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தாகும். இந்த வைரஸ், ஈரல் அழற்சி, ஈரல் புற்று நோயையும் ஏற்படுத்துவதுடன், இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நீண்டகால காவிகளாக இருப்பதால் பிறருக்கு இந்த நோய் தொற்றும் ஆபத்தும் அதிகரிக்கின்றது. இந்தத் தடுப்பு மருந்து, 2ம், 4ம், 6ம் மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

Hib தடுப்பு மருந்தானது Haemophilus influenzae B எனப்படும் ஒரு வகை பக்ரீரியாவுக்கு எதிராக வழங்கப்படும் ஒரு தடுப்பு மருந்தாகும். இந்தப் பக்ரீரியா சிறு குழந்தைகளில் மூளைக்காய்ச்சல், நியுமோனியா மற்றும் செப்ரிசீமியா ஆகிய ஆபத்தான நோய்நிலைமைகளை ஏற்படுத்துகின்றது. இந்தத் தடுப்பு மருந்து மூலம் இந்த நோய்கள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாம். 2ம், 4ம், 6ம் மாதங்களில் இது வழங்கப்படுகின்றது.

போலியோ (Polio) தடுப்பு மருந்து, சிறுபிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் போலியோ எனப்படும் ஒரு வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தாகும். இது சொட்டு மருந்தாக வாய்மூலம் வழங்கப்டுகின்றது. இது 2ம், 4ம், 6ம் மாதங்களிலும் 1½ வயது மற்றும் 5 வயதிலும் வழங்கப்படுகின்றது.

JE தடுப்பு மருந்து என்பது ஜப்பானிய மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தாகும். இந்த வைரஸ், மனிதனின் மைய நரம்புத் தொகுதியை தாக்கி காக்கைவலிப்பு, கோமா மற்றும் உடற்பாகங்கள் செயலிழத்தல் போன்ற நோய் நிலைமைகளை ஏற்படுத்துவதுடன் சில வேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்துகின்றது.

இந்தத் தடுப்பு மருந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் 9ம் மாத முடிவில் வழங்கப்படுகின்றது. இந்தத் தடுப்பு மருந்தைக் காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது கடந்த ஒரு வருடத்தில் வலிப்பு வந்த குழந்தைகளுக்குகோ வழங்கப்படக்கூடாது. எனவே கடந்த ஒரு வருடத்துக்குள் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டிருப்பின் அதனைத் தடுப்பு மருந்து வழங்கப்பட முன்னர் அதனை வழங்கும் வைத்தியரிடமோ அல்லது குடும்ப சுகாதார உத்தியோகத்தரிடமோ தெரிவிப்பது அவசியமாகும்.

MMR தடுப்பு மருந்து என்பது சின்னமுத்து, கூகைக்கட்டு, ஜேர்மன் சின்ன முத்து என்ற நோய்களுக்குகெதிரா வழங்கப்படும் தடுப்பு மருந்தாகும்.இது ஒரு வயது, மூன்று வயதில்வழங்கப்படுகின்றது.

இவற்றைத் தவிர வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளும் காணப்படுகின்றன. இவை இலங்கையில் தேசிய தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்படாத போதிலும் குறித்த நோய் ஏற்படும் ஆபத்துள்ளவர்கள் அவற்றைத் தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது அரச மருத்துவமனைகளிலோ பெற்றுக்கொள்ளலாம். அவையாவன.

கொப்புளிப்பான் – Varicella தடுப்பு மருந்து
நியுமோனியா – Pneumococcal தடுப்பு மருந்து
வயிற்றோட்டம் – Rotavirus – தடுப்பு மருந்து ( குழந்தைகளுக்கு)
நெருப்புக்காய்ச்சல் – Typhoid தடுப்பு மருந்து
விசர்நாய்க்கடி – Rabies தடுப்பு மருந்து
மஞ்சள்காமாலை – HepaTitis தடுப்பு மருந்து
கொலறா – Cholera தடுப்பு மருந்து
Varicella தடுப்பு மருந்து கொப்புளிப்பான் நோய்க்கு எதிராக வழங்கப்படுகின்றது. கொப்புளிப்பான் வயது வந்தவர்களுக்கு ஏற்படுகையில் சிறுவர்களைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நோய்த் தொற்றுக்குள்ளாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளவர்கள், இந்த தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த நோயைத் தடுக்கலாம். உதாரணமாக சுகாதார உத்தியோகத்தர்கள், நோய் எதிப்புத்திறன் குறைந்த குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக சத்திர சிகிச்சைக்குட்பட்டவர்கள், மருந்து எடுப்பவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றுபவர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோர் இந்தத் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்தவர்களுக்கான ஈர்ப்பு வலித்து தடுப்பு மருந்தானது ( Adult Tetanus toxoid) பொதுவாக காயமேற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது. சிறுவயதில் 5 தரம் இந்த toxoid பெற்றுக்கொண்டவர்கள் காயம் ஏற்பட்ட பின் ஒரு தடவை மாத்திரம் பெற்றுக் கொள்ளல் போதும்மானது. 6 தடவை இந்த toxoid பெற்றுக்கொண்டவர்கள் ( 5 தடவை சிறுவயதில்) காயம் ஏற்பட்டாலும் இதனை எடுக்கத் தேவையில்லை. அதே போல் 5 தடவை Tetanus Toxoid பெற்றுக் கொண்ட சிறுவர்களுக்கு காயம் ஏற்படினும் இதனை எடுக்கத் தேவையில்லை. ஆனால் Tetanus Toxoid 2 முதல் தடவையாக 12 வயதுக்கு பின்னர் பெற்றதுடன் , 5 தடவைகள் எடுத்திருந்தால் அவர்கள் இதனை எடுக்கத் தேவையில்லை.

ஆனால் முதல் தடவையாக 12 வயதின் பின் Tetanus Toxoid எடுப்பவர்கள் 3 தடவை எடுக்க வேண்டும். காயம் ஏற்பட்டவுடன் முதல் ஊசியையும் இரண்டாவது ஊசி 6 கிழமைகளின் பின்னரும் 3வது ஊசி 6 மாதங்களின் பின்னரும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

Rota Virus தடுப்பு மருந்து குழந்தைகளில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாக Rota Virus எனப்படும் வைரசுகு எதிரான தடுப்பு மருந்தாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றோட்டம் நீரிழப்பை ஏற்படுத்துவதனால் சில வேளைகளில் இறப்பை ஏற்படுத்துகின்றது. அத்துடன் அடிக்கடி ஏற்படும் வயிற்நோட்டத்தினால் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. இந்த நோயைத் தடுப்பதற்கு Rota Virus தடுப்பு மருந்தை குழந்தைகளுக்க வழங்குவதினால் மேற்குறிப்பிட்ட நிலைமைகளிலிருந்து குழந்தைகளைக் காத்துக்கொள்ளலாம். இந்தத் தடுப்பு மருந்து 6 வாரம் தொடக்கம் 2 வயது வரையானகுழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது. முதல் ஊசி வழங்கப்பட்டு 4 வாரங்களின் பின்னர் அடுத்த ஊசி வழங்கப்பட வேண்டும்.

Dr.சொளதாமினி சூரியகுமாரன்.