மாதவிடாயின் போது அதிகளவு இரத்தப்போக்கு… காரணம் என்ன?

நான் 32 வயதுடைய பெண். 6 மாதகாலமாக மாதவிடாய் இரத்தப்போக்கு எனக்கு முன்பு உள்ள காலங்களை விட அதிகளவில் வெளியேறியது பெண் நோயியல் வைத்திய நிபுணரைச் சந்தித்து எனது பிரச்சனையைக் கூறினேன். என்னைப் பரிசோதித்த அவ் வைத்தியர் எனது வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறி எனது வயிற்றை “ஸ்கான்” செய்து பார்த்த போது எனது கர்ப்பப்பையின் சுவர்த்தசையில் ஒரு கட்டி – Fibroid இருப்பதாக கூறினார். எனினும் அது “புற்றுநோய் வகை அல்லாத கட்டி. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை“ என்றும் கூறினார். Fibroid என்றால் என்ன அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பப்பையில் கட்டி என்று கூறியதும் அனைவரும் பயம் கொள்வது இயல்பு. அடுத்தகணம், “பயப்படும் படியான (புற்றுநோய் வகை) கட்டியா?“ எனும் வினாவே பொதுவாக கேட்கப்படும். கர்ப்பப்பையில் வளரும் கட்டிகளில், இளம் வயதினரில் பொதுவாக காணப்படும் புற்றுநோய் வகை அல்லாத கட்டியே Fibroids ஆகும். இது கர்ப்பப்பைச் சுவரின் தசைப்பகுதியில் உருவாகும். ஈஸ்ரஜன் எனப்படும் ஓமோன் இத் தசைக் கட்டியின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. பொதுவாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் இந் நிலமை ஏற்படும் வாய்புகள் காணப்படுகின்றன.

இவ் Fibroids வகைக் கட்டிகள் உருவாவதற்கான ஆபத்து நிலையை கூடியளவில் கொண்டவர்களாக

கர்ப்பம் தரிக்காத பெண்கள்
உடற்திணிவுச் சுட்டி கூடியவர்கள் (obesity)
குடும்ப உறவினர்களுக்கு இவ்வகை கட்டி இருத்தல்
ஆபிரிக்க இனத்தவர்
ஆகியோர் விளங்குகின்றனர்.

பெரும்பாலான Fibroids கட்டிகள் எந்தவொரு நோய் நிலமைக்கான அறிகுறிகளையும் வெளிக்காட்டாது வேறு மருத்துவத் தேவைக்கு வைத்தியரை அணுகும் போது எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்படும்.

சிலவேளைகளில் அறிகுறிகளை வெளிக்காட்டும் பொதுவாக மாதவிடாயின் போது இரத்தப்போக்கு அதிகமாப காணப்படும். மேலும் வயிற்றுனுள் சலப்பையை அமுக்குவதால் அடிக்கடி சலம் கழிக்கும் நிலையையும் ஏற்படுத்தும். வயிற்றுவலி ஏற்படுவது குறைவு. அரிதாக சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்.

Fibroids கட்டி இருந்தால் குழந்தை உருவாகாது எனும் தப்பான அபிப்பிராயம் எமது மக்கள் மத்தியில் நிலவுகிறது. Fibroid கட்டியால் முட்டை செல்லும் குழாய்வழிப் பாதை அடைக்கப்பட்டால் அல்லது கருக்கட்டிய முட்டை பதியுமிடத்தில் Fibroid கட்டி காணப்பட்டால் மாத்திரமே குழந்தை தங்கும் நிலை அற்றுப் போகும். மேற்கூறிய வகையில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது Fibroid கட்டி காணப்படுமாயின் அதனை சத்திரசிகிச்சை மூலம் அகற்றவேண்டிய அவசியம் இல்லை. அக்கட்டி உள்ள போதே கர்ப்பம் உருவாகினால், அக் கர்ப்பம் இக் கட்டியால் அழிந்துவிடுமோ எனப் பயம் கொள்ளத் தேவையில்லை. அழிவதற்கான சந்தர்ப்பமும் இல்லை. கர்ப்பகால இறுதி நிலையில் கட்டி அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, சில வேளைகளில் குழந்தை வயிற்றுனுள் இருக்கும் நிலை மாறுபடலாம். அதாவது நிலைக்குத்தாக இருக்கவேண்டிய குழந்தை கிடையாக / வயிற்றுக்கு குறுக்காக காணப்படலாம் இதன் போது சத்திர சிகிச்சை மூலம் (சீசர்) குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்.

“ஸ்கானின்” (USS) உதவியுடன் இவ் Fibroid கட்டிகள் இனங்காணப்படும். தற்செயலாக கண்டுபிடிக்கப்படுமாயின் நோய் நிலமைக்கான அறிகுறிகளை ஏற்படுத்தாத விடத்து சிகிச்சை முறைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. 6- 12 மாதங்களுக்கு ஒரு தடவையேனும் உடற்பரிசோதனை மற்றும் ஸ்கான்க்கு ஒரு தடவையேனும் உடற்பரிசோதனை மற்றும் ஸ்கான் செய்து கட்டி வளரும் வீதத்தினை அவதானித்தல் வேண்டும். இரத்தப் போக்கு அதிகமாகக் காணப்படுமிடத்து மருத்துவச் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவையேற்படின் வைத்திய ஆலோசனைப்படி கட்டியை அகற்றும் சத்திர சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

Dr.கு.அபர்ணா