வயிற்றோட்டம் ஏற்படும்போது ……

ஒருநாளைக்கு மூன்று முறைக்குமேல் நீராக மலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும்போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தைத் தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.

நோய்க்கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள்

அழுக்கடைந்த கைகள்
அழுக்கடைந்த தண்ணீர்
அழுக்கடைந்த உணவு
முறையாகவும் போதியளவும் சமைக்கப்படாத உணவுகள்
வயிற்றோட்டத்தைத் தவிர்க்கும் முறைகள்

கொதித்தாறிய நீரைக் குடிக்கவேண்டும்.
சுத்தமான நீரைப்பயன்படுத்தல்
சாப்பாட்டிற்கு முன்னரும், மலசலம் கழித்த பின்னரும் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்
சுத்தமாக நன்கு சமைத்த உணவை உண்ணுவதோடு சமைத்த உணவைப் பூச்சிகள் மொய்க்காமல் மூடிப்பாதுகாக்கவேண்டும்.
வயிற்றோட்டத்திற்கான சிகிச்சைமுறைகள்

தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.
உப்புசேர் குளுக்கோசு நீர், உப்புசேர் கஞ்சி, பொரியரிசி நீர், தேசிக்காய்த் தண்ணிர் இளநீர் ஆகியவை எல்லா வயதுப் பிள்ளை களுக்கும் கொடுக்கலாம்
உணவு – வயிற்றோட்டத்தின்போது உணவுகளைக் கொடுக்கலாம். ஒரு பகுதியாவது செமித்து உடலிற்குச்சத்தைக் கொடுக்கும்.
வயிற்றோட்டம் குறைந்து வரும்போது கட்டாயமாக உணவுகளைத் திரும்பவும் கொடுக்கவேண்டும். வயிற்றோட்டத்தின்பின் ஒருகிழமைக்காவது ஒரு மேலதிக உணவு கொடுக்கவேண்டும்.
உப்புசேர் குளுக்கோசுநீர்

உப்புசேர் குளுக்கோசு அடங்கிய சரைகளைக் கடைகளில் வாங்கலாம் (ஜீவனி) இதில் சோடியம் குளோரைட்டு, சோடியம் இருகாபனேற்று, பொற்றாசியம் குளோரைட்டு, குளுக்கோசு அடங்கியுள்ளன. இவற்றை ஒரு லீட்டர் கொதித்தாறிய நீரில் அல்லது சுத்தமான நீரிற் கரைத்துப் பாவிக்கலாம். இதை வயிற்றோட்டம் இருக்கும் போது அடிக்கடி கொடுக்கவேண்டும். வாந்தி இருந்தாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இடையிடையே கொதித்தாறிய சுத்தமான நீரும் கொடுக்கவேண்டும். கரைத்த உப்புசேர் குளுக்கோசு 24 மணித்தியாலயங்களுக்கு வைத்துப்பாவிக்கலாம்.

உப்புசேர் கஞ்சி

வயிற்றோட்டத்திற்கான உப்புக்கள் அடங்கிய சரைகளை கடைகளில் வாங்கலாம். இதில் சோடியம் குளோரைட்டு, சோடியம் இருகாபனேற்று, பொற்றாசியம் குளோரைட்டு அடங்கியுள்ளன. வறுத்த அரிசி மாவு 50 கிராம் எடுத்துச் சுத்தமான நீரில் 5 நிமிடத்திற்குக் கொதிக்க வைத்துத் தண்ணிரில் முழு அளவை 1 லிட்டர் வரும்வரை கொதித்தாறிய நீரைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதற்குள் உப்புக்கள் அடங்கிய சரை ஒன்றைச் சேர்த்துக் கரைத்துவிடவேண்டும். இதனை 8-10 மணித்தியாலத்திற்குத்தான் வெளியில் வைக்கக்கூடியதாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியானால் கூடிய நேரத்திற்கு வைக்கலாம்.

வீடுகளில் வயிற்றோட்டத்திற்கான உப்புக் கரைசலோ, உப்புசேர் குளுக்கோசு கரைசலோ (ஜீவனி) எப்போதும் வைத்திருப்பது நல்லது.