மதுவும் வேலையும். குடிப்பதனை நியாயப்படுத்தும் காரணங்கள்

மது பாவிக்கின்ற பலர் குடிப்பதற்கு தங்களது வேலையுடன் தொடர்பான காரணங்களையும் சாட்டாகக் கூறுவதுண்டு.

அவர்கள் கடுமையான உடல் வேலை, அலுப்புக் களைப்பு, மன அழுத்தம், ரிலாக்ஸ்” பண்ண வேண்டும் என்ற நினைப்பு வேலை செய்யுமிடத்தில் நடைபெறுகின்ற விருந்துபசாரம் போன்றனவற்றைத் தாங்கள் குடிப்பதனை நியாயப்படுத்தும் காரணங்களாகக் கூறுவதுண்டு.

மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், வியாபாரம் சார்ந்து வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுபவர்கள், நகர்ப்புறக் கூலித் தொழிலாளிகள் போனற சில குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் இயல்பாகவே மிக அதிகளவு மது அருந்துபவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பொறுமையாகச் சற்று உற்று அவதானித்தால், மது அருந்துபவர்கள் மற்றும் மதுவக்கு அடிமையானவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை கீழ்வரும் உதாரணங்களில் பார்க்கலாம்.

குடிக்கின்ற ஒருவரின் உடலும் உள்ளமும் மதுவை நோக்கியே இயங்கிக் கொண்டிருப்பதனால் அவரது வேலையில் கவனக் குறைவு ஏற்படும்.
அவரால் வேலைக்கு ஒழுங்காகப் போக முடியாமல் இருப்பதோடு, வேலை செய்யும் நேரங்களிலும் தனக்குரிய வேலைகளை ஒழுங்காகச் செய்து முடிக்கவியலாமல் இருக்கும்.
இப்படியாக ஒருவர் தனது வேலையில் முழுத் திறன்களையும் பயன்படுத்த முடியாத நிலையில் அவர் பார்க்கின்ற வேலையில் தரக்குறைவு உண்டாகும்.
வேலை செய்யுமிடங்களில் கூர்மையான இயந்திரங்களோடு வேலை செய்பவர்கள், வாகனம் செலுத்துவோர் போன்றவர்கள் அதிகளவில் விபத்துக்களைச் சந்திக்க நேரிடலாம்.
மதுவுக்கு அடிமையாகிப் போனவர்களில் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து போகலாம். அத்துடன் அவர்களுக்கு மற்றவர்களுடன் உறவாடுவதில் பிரச்சினைகள் ஏற்பட ம். கருத்து முரண்பாடுகள் வளரலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
வேலை செய்யும் இடங்களில் வேலை வழங்குபவரிடமும், சேர்ந்து வேலை செய்பவர் களிடமும் கடன் வாங்குவதனால் அங்கே கடன் தொடர்பான பிரச்சினைகளும் தலைதுாக்கும்.
ஒரு கட்டத்தில் உடல் சம்பந்தமான நோய்கள் ஆரம்பித்து, உடல் சரிவர இயங்காத நிலையில், அடிக்கடி ஒய்வெடுத்துக் கொள்வர். அல்லது விடுமுறை எடுத்துக் கொள்வர்.
ஆனாலும் குடிக்கு அடிமையான ஒருவர், அவர் அதற்கு அடிமையாக இருப்பதனால், தனது வேலையில் பிரச்சினைகள் வந்தாலும் தொடர்ந்தும் குடித்துக் கொண்டே இருப்பார்.
கடைசியில் அவர் வேலையை விட்டுப் பணி நீக்கம் செய்யப்படும் நிலை கூட ஏற்படலாம்.
நன்றி –

சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்

”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்