இளவயதுத் திருமணங்கள் பெரும் சுகாதாரப்பிரச்சினையாக மாறும் ஆபத்து

சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும்.
பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே சிறுவயது திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.
குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான சிறுவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக கூறுகிறார் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி.
இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இது நடைமுறை சிக்கல் என்று இது தொடர்பாக செய்தி நிறுவனங்களுக்கு விளக்கினார் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன்.
சிறுவயது திருமணத்தை பொறுத்தவரை சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது