அனாவசிய கட்டுப்பாடுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்(பகுதி 4) – சி.சிவன்சுதன்

மகிழ்ச்சியான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தின் அடிநாதமாக இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை குழப்பும் அநாவசியமான கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சிப்பது பயனுடையதாக அமையும்.

தினமும் 30 தொடக்கம் 90 நிமிடங்கள் வரை TV பார்ப்பது சுகாதார சீர்கேடுகள் எதனையும் ஏற்படுத்திவிடாது.நண்பர்கள, குடும்பத்தவர்கள், அயலவர்களுடன் சிறிது நேரம் அரட்டை அடிப்பது ஆரோக்கியமானது.

இது மூளையின் சில பகுதிகளுக்கு அமைதியையும் ஓய்வையும் கொடுக்கும். கணனி, கைத்தொலை பேசி என்பன எமது வேலைகள் பலவற்றை இலகு வாக்குகின்றன. இவற்றை தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவது தவறு ஆகாது. ஆனால் இவற்றை தவறான நடவடிக்கைகளுக்கு பாவிப்பதையும் அவற்றிற்கு அடிமையாவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எமது உடலை பராமரிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதும் விரும்பியோர் ஆபரணங்கள் அணிவதும், வாசனைத்திரவியங்கள் பயன்படுத்துவதும் தவறு ஆகாது.
இது மனதிற்கும் உடலிற்கும் புத்துக்கத்தை கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆனால் இவை கலாசார மரபுகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

பகற்கனவு காணாதே என்று உபதேசிப்பவர்கள் பலர். ஆனால் ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றியும, தனது குடும்பம், சமூகம் என்பவற்றின் எதிர்காலம் பற்றியும் கனவு காண்பது ஆரோக்கிய மாகவும் பயனுடையதாகவும் இருக்கும். ஆனால் அந்தக்கனவுகளும் திட்டங்களும் பிறரை பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது.

பிள்ளைகளின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது பிள்ளைகளுக்கு செல்லம் கொடுப்பது என்று அர்த்தப்படாது.

பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கக்கூடாது என்று கருதி பிள்ளைகளுடன்அ ளவுக்கதிகமாக கடுமையாக நடந்து கொள்வது பல எதிர்மறையான விளைவுகளை தோற்றுவிக்கும்.மற்றவர்களின் மன உணர்வுகளை விளங்கிக் கொண்டு ஆதரவு கொடுத்து அனைவரையும் நல்வழிப்படுத்தி வாழ முயற்சிப்பது பயனுடையதாக அமையும்.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனாவைத்தியசாலை.