ஆட்டிசம் என்ற நிலைமையுடைய குழந்தைகளை சமுதாயத்தில் எப்படி அடையாளம் காணலாம்? காவேரி சிவரூபன், MD. சிவாணி பத்மராஜா,MD.

ஆட்டிசம் ( Autism ) என்றால் என்ன?
நரம்புத் தொகுதியில், முக்கியமாக மூளை விருத்தியில் ஏற்படுகின்ற அசாதாரண மாற்றத்தால் அல்லது குழப்பத்தால் உருவாகும் இந்த நிலைமை பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்,
1. பேச்சு வன்மையில் தடங்கல் அல்லது பாதிப்பு.
( Impaired communication ).
2. சமூகத் தொடர்பாடலில் பாதிப்பு ( Impaired social interaction )
3. மீண்டும் மீண்டும் செய்யும் நோக்கமில்லாத உடலசைவு.
( Repetitive movements ) .

ஆட்டிசம் என்ற நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
இன்று வரை அடிப்படைக் காரணம் என்னவென்று தெரியாது.
ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
பரம்பரை அலகுகளில் வரும் மாற்றம் ( Gene mutation ) என்று சந்தேகிக்கப்படுகிறது.
தடுப்பூசிகள் ( Vaccines ) இந்நிலைமைக்கு காரணம் இல்லை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

இந்நிலமையுடைய குழந்தைகளை சமுதாயத்தில் எப்படி அடையாளம் காணலாம்?
குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் இருக்காது. இவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாகப்
1. பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் . இருத்தல் (Poor eye contac)
2. தன் வயதொத்தவர்களுடன் நட்புணர்வு கொள்வதிலும் சமூகத் திறன்களை வெளிக்காட்டுவதிலும் ஈடுபாடற்று இருத்தல்.
3 பிறருடன் பொருந்திச் செல்லாமல் தனித்து இருத்தல் ( உணவு, விளையாட்டு போன்றன).
4. பேச்சுத் திறனற்று இருத்தல் அல்லது சொல்லியவற்றை மீண்டும் மீண்டு சொல்லுதல்
5. அன்றாட வேலைகளில் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட எதிர்கொண்டு சமாளிப்பதில் சிக்கல் இருத்தல்.
7. மீண்டும் மீண்டும் செய்யும் நோக்கமில்லாத உடலசைவுகள். (Stimming )
8. பரபரப்பான சத்தம் நிறைந்த சூழல்களில், (எடுத்து காட்டாக, விளையாடுமிடம்) மிகவும் படபடப்புடன் காணப்.படுதல்.
9 சிலருக்கு சிலவகைத் துணிகள் அணிவதிலோ அல்லது தங்கள் உடல் மேல் உடை உராயும்போதோ சிரமம் ஏற்படுதல்.

எப்படி இந்த நிலைமையைக் கண்டு பிடிப்பது?
( Diagnosis )
இருக்கும் பல விதமான முறைகள் வினா கொத்தை அடிப்படையாகக் கொண்டவை.
குழந்தை நல மருத்துவர், மனநோய் மருத்துவர், மனோதத்துவ நிபுணர் கொண்ட குழு இந்த நிலைமையை இனங் காணுவர்.
இந்த நிலைமையை அடையாளம் காண சிறப்புப் பரிசோதனைகள்
( Special tests ) கிடையாது.
தாய் கர்ப்பமாக இருக்கும் போதே கருவில் இந்த நிலைமையை கண்டு பிடிப்பதற்கு சோதனைகள் இருக்கின்றதா?
இன்னும் இல்லை.
எந்த வயதில் இந்த நிலைமை இனங் காணப்படுகிறது?
இந்நிலைமையுடைய குழந்தைகளின் அடையாளங்கள் முதல் மூன்று வயதிற்குள் வெளிப்படும்.
ஆனால் பிள்ளைகளின் வளர்ச்சிப்படி நிலைகளில் ஏற்படும் கவலைக்கிடமான தாமதங்களையும் கருத்திற் கொண்டு இடையீடுகளைக்
( Interventions ) காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்.

Dr.காவேரி சிவரூபன், MD. Dr. சிவாணி பத்மராஜா,MD.

தொடரும்.