ஆட்டிசம் இந்நிலைமையுடைய குழந்தைகளை மேம்படுத்த…

மாதவம் பற்றிச் சொல்லவும்?
IMHO வின் ஆதரவுடன் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந்நிலையம் யாழ்ப்பாணத்தில், கச்சேரி நல்லூர் வீதியில் உள்ளது.இங்கு கவலைக்கிடமான அறிகுறிகள் உள்ள பிள்ளைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற இடையீடுகள் ஆரம்பிக்கப் படுகின்றன.
பெற்றோர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
நிலைமையை இனங் கண்டவுடன் உணர்ச்சி வசப்படுவது இயல்பே. மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
குழந்தையை பராமரிப்பதால் மனமும் உடலும் களைப்படையும்.
.அனைவரின் கவனமும் பாதிக்கப்படட குழந்தையில் உள்ளதால் குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையிலான தொடர்பாடல் குறைவடைந்து குடும்பத்தில் விரிசல்கள் உண்டாகலாம்.
சமுதாய நிகழ்வுகளில் சாதாரணமாகப் பங்கு பற்ற இயலாத நிலைமை ஏற்படும்.
மன உளைச்சல் காரணமாக வேளையில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும்.இதனாலும் பாதிக்கப் பட்ட குழந்தையின் மேலதிக சிகிச்சைச் செலவுகளினாலும் பொருளாதார நெருக்கடிகள் தலைதூக்கும்.
சகோதரர்களும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் போது மனத்தாக்கங்களிற்கு ஆளாகலாம்

பெற்றோர்களுக்கு என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?
இந்த குழந்தையை வளர்ப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள்.
குழந்தையை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். ( Accept ).
குழந்தையைப் புரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை சற்று அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் ( Adapt ).
குழந்தையில் உள்ள நல்ல இயல்புகளையும் சுயமுயற்சிகளையும் பாராட்ட வேண்டும் ( Appreciate )
குழந்தையின் அடிப்படை தேவைகளையும் மற்றும் மேலதிக தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு வாதாடத் தயங்கக் கூடாது.
( Advocate )
குழந்தையின் குறைபாடுகளை மறைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தை சமுதாயத்தில் ஒருவராக வாழ்வதற்கு, சமுதாயம் உங்கள் பிள்ளையை அறிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும்.
” பரிமாறிக் கொள்ளுங்கள் தடைக் கற்கள் அகலுவது உங்களுக்கே தெரியும்”

சமுதாயத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இந்தக் குழந்தைகளை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் எதிர்நோக்கும் சவால்களை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இருக்கும் சுற்றாடலை இந்தக் குழந்தைகளும் அனுபவிக்கக் கூடிய மாதிரி சிறு சிறு மாற்றங்களைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.
இக் குழந்தைகளுக்கு பொறுமை குறைவு, எனவே வரிசையில் முன்னிடம் கொடுங்கள்.
உரத்த சத்தங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள், மெல்லப் பேசுங்கள்.
ஒளி மிக்க சூழல் இவர்களை உறுத்தும், ஒளியளவைத் தாழ்த்துங்கள்.
அவர்களின் நடத்தைகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையே, கேலி செய்யாதீர்கள்.
திறமையைப் பாராட்ட தவறாதீர்கள்.

இந்நிலைமையுடைய குழந்தைகளை
மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு என்ன?
கல்வித் திணைக்களமும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து, இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
எப்படி என்றால்,
1. கவலைக்கிடமான வளர்ச்சிப் படிநிலைகளில் உள்ள பிள்ளைகளை ஆரம்ப கட்ட்த்திலேயே இனம் கண்டு, தகுந்த இடையீடுகளை கால தாமதமின்றி ஆரம்பித்தல். (Early screening and early intensive behavioral intervention).
2. சிறப்புத் தேவைக் கல்விக்கான ( Special education ) வசதிகளைப் பாடசாலைகளில் வலுப்படுத்தல்.
3. சிறுதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
மேற்குறியவற்றை நடைமுறைபடுத்த ஆளணிகள், அவர்களுக்கான பயிற்சிகள், சேவையை தொடர்வதற்கான கட்டிட தொகுதிகள் அவசியமாகும். இதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.

“தீரன் இவன்” பற்றி?
IMHO வின் ஆதரவில் “தீரன்” என்ற புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது.
இக் கதையின் பிரதான பாத்திரமான தீரன் சமுதாயத்தில் பல சவால்களை எதிர் நோக்கும் ஒரு மாற்றுத் திறனாளியாகப் ( special need kid ) படைக்கப்பட்டுள்ளான் இவன் தனது பலத்தையும் பலவீனத்தையும் சமுதாயத்துடன் பகிர்வதன் மூலம், தன்னையும் சமுதாயத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறான்.
இந்த புத்தகமானது தமிழ் பேசும் சமூகத்திலே, குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியிலே மாற்றுத் திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த உதவ வேண்டும், என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

தொகுப்பு :
காவேரி சிவரூபன், MD.
சிவாணி பத்மராஜா,MD.