சிறுநீர் கற்கள் தோன்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

சிறுநீரகக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன?

 • குறைந்த அளவு நீரை உள்ளெடுப்பதனால்
 • அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களுக்கு
 • சிறுநீர் கழிப்பதில் கஷ்டமிருப்பவர்களுக்கு
 • சிறுநீர் கழித்த பின் கணிசமான அளவு சலம் சிறு நீர்ப்பையில் தேங்குவதால்
 • சிறுநீர் தொகுதியில் ஏதும் குழாய்கள்/ விரியலாக்கிகள் இணைக்கப்பட்டிருப்பின்
 • கற்களை தோற்றுவிக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உள்ளெடுக்கும் போது.

இவை சிறுநீர் தொகுதியின் எப்பகுதியில் ஏற்படுகின்றன

இவை எல்லாப்பகுதிகளிலும் ஏற்படலாம்.-சிறுநீரகம் சிறுநீர்க்குழாய, சிறுநீர்ப்பை, சிறுநீர் வழி

சிறுநீர் கற்கள் இருப்பின் என்ன என்ன அறிகுறிகள் தென்படும்?

 • சிறுநீருடன் இரத்தம் வெளியேறல்
 • சல எரிவு
 • நாரி நோவு / அடி வயிற்றில் நோவு
 • அடிக்கடி சலம் கழித்தல்
 • இடுப்பிலிருந்து விதைப்பகுதியை நோக்கிய நோ

சிறுநீர் கற்கள் தோன்றாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?.

 • போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். விசேடமாக கோடை காலங்களிலும், கடினமாக வேலை செய்யும் போதும்
 • சிறுநீர் கற்களை தோற்றுவிக்கக்கூடிய பதார்த் தங்களின் அகத்துறிஞ்சலை குறைக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
 • சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் இருப்பின் அடிக்கடி சலத்தை வெளியேற்ற வேண்டும்.

சிறுநீர் கற்களுக்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கப்படுகின்றது?

 • சிறுநீர் கற்கள் தானாகவே சலத்துடன் வெளியேற மருந்து வழங்கப்படும்.இதில் 5 mm இலும் சிறிய கற்களே வெளியேறுகின்றன.
 • புறஊதா கதிர்களை பயன்படுத்தி கற்களை உடைத்து சலத்துடன் வெளியேற செய்தல்.
 • சிறுநீர் குழாய்க்குள் கமரா கொண்ட குழாயை செலுத்தி கமரா மூலம் பார்த்தவாறு கற்களை உடைத்து அகற்றல்.
 • மேற்கூறிய முறைகளில் செய்ய முடியா விடினோ அல்லது மேற்கூறிய முறைகள் பயனற்றுப் போயிடினோ சத்திரசிகிச்சை மூலம் அகற்றல்.

சடுதியாக சிறுநீர் கழிக்க முடியாமற்போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டீர்களா? ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது?

சாதாரணமாக நாம் சிறுநீர் கழிக்கும் போது எமது சிறுநீர்ப்பை சுருங்குகிறது. அதைத் தொடர்ந்து சிறுநீர்ப்பையின் கீழ்ப்பகுதியிலுள்ள இறுக்குகிகள் தளர்வடைகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீரானது சிறுநீர் வழியினுடாக வெளியேறுகிறது.

இச்செயற்பாடு ஆனது பின்வரும் செயற்பாடுகளினால் பாதிப்படையலாம்

 • சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டிகள்,சிறுநீர் கல்
 • சுக்கில சுரப்பியில் (Prostate) ஏற்படும் வீக்கம்.
 • சிறுநீர்வழி சுருக்கமடைதல் அல்லது கல் அடைத்தல்.

இவ்வாறு மீண்டும் ஏற்படாமல் இருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

 • வைத்தியர் வழங்கும் மருந்துகளை தொடர்ச்சியாக பாவிக்கவும்.
 • இரவில் அதிகம் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
 • மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.
 • புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்.
 • இரவில் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 • சிறுநீர் தொற்றுக்கான அறிகுறி தென்படின் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடி மருந்து பெற வேண்டும்.
 • உங்களால் சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீரை முழுமையாக ஒரே தடவையில் வெளியேற்ற முடியாது.எனவே ஒரு தடவை சிறுநீர் கழித்த பின் பதினைந்து நிமிடங்களின் பின் மீண்டும் மீதமுள்ள சிறுநீரை வெளியேற்றுங்கள்.

Dr.க.சிவசுகந்தன்
யாழ்.போதனாவைத்தியசாலை