குட்டான் என்ற குருத்து – Dr.சி.சிவன்சுதன்

நேரம் இரவு எட்டுமணியை நெருங்கிக்கொணர்டிருந்தது. தெரு சந்தடி குறைந்து அமைதியாக இருந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய ஒளியிலே அங்கங்கே மறைந்தும் மறையாமலும் மனித உருவங்கள் நடமாடுவது தெரிந்தது. அவசரம் அவசரமாக நடந்து கொண்டிருக்கின்றேன். ஏன் இத்தனை அவசரம்? எனக்கே காரணம் புரிய வில்லை.

அந்த அமைதியை குலைத்துக் கொண்டு திடீரென்று “வசந்த்’ என்று என்னை அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். யாரும் இல்லை. மீண்டும் நடக்க முற்பட்டேன். திரும்பவும் அதே அழைப்புக் குரல்.சுற்றும் முற்றும் பார்த்தேன் யாருமே இல்லை.

எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கவில்லை. அந்தக் குரலுக்குரியவனை எனக்கு நன்கு தெரியும்.சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவனது முழுமையான முகத்தைக் கூட என் மனக் கண்முன்னே கொண்டு வர முடியும்.

இத்தனை வருடங்கள் கடந்தும் என்றும் மார்க்கண்டே யன் போல அவனது முகம் இளமையாக, சாந்தமாக ஆனால் ஆழமான பார்வையுடன் என்றும் தென்படும். தலைக்கு எண்ணெய்வைத்து பக்கமாக சீவி இருப்பான். அவன் இப்பொழுது இந்த நேரத்தில் என்னை அழைக்கக் காரணம் என்ன? எங்கிருந்து அழைக்கிறான்.

அவனை எனக்கு பல வருடங்களாக தெரியும்.எட்டாம் ஆண்டுவரை என்னுடன் ஒரே வகுப்பிலே ஒன்றாகவே இருந்து படித்து வந்தான். அவனது உண்மையான பெயர் குருகுலன். இந்தப் பெயர் பலருக்குத் தெரியாது. அவனை பொதுவாக “குட்டான்” என்று பட்டப்பெயர் சொல்லித் தான் அழைப்பார்கள். அதனையும் அவன் தனது பெயராக ஏற்றி ருந்ததாலோ என்னவோ அவ்வாறு பட்டப்பெயர் சொல்லும் பொழுது அவன் கவலைப்பட்டதாகவோ கோபப்பட்டதாகவோ காட்டிக் கொள்வதில்லை.

யாருடனும் அவன் அதிகம் பழகுவதில்லை என்பதிலும் பார்க்க அவனுடன் யாரும் அதிகம் பழகுவதில்லை. என் பதே கூடப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம் என்ன? சிலர் அவன் ஒரு மாதிரி என்று கூடச் சொல்வார்கள். தவறாது பாடசாலைக்கு வருவான் . அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் விரிவான பதில் சொல்ல முற்படுவான். அதனை முற்றாகக் கேட்கும் பொறுமை பலருக்கு இருப்பதில்லை. பரீட்சைகளில் அதிக புள்ளிகள் அவனுக்கு கிடைப்பதில்லை.அவனிடம் திறமை இல்லை என்று சொல்லி விட முடியாது.

வாழ்க்கையில் அடிபட்ட உலக அனுபவமும் தன்னம் பிக்கையும் வித்தியாசமான சிந்தனா சக்தியும் அவனுக்கு நிறையவே இருந்தன. யுத்தத்தினால் அவன் தனது தந்தையை இழந்திருந்தாலும் தாயின் அரவணைப்பும் வழிகாட்டலும் அவனுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருந்தன.

அவனது சிந்தனைகள் உண்மையிலே வித்தியாசமானவை. வாடும் புற்களுக்காகக் கூட வேதனைப்படு வான். தென்னங்கன்றுகளின் கருக்களை இளநீர் என்று பெயர் வைத்து அதனை அறுத்துக்குடித்து விட்டு நாம் நட்டு நீருற்றி வளர்த்த தென்னை இளநீரைத் தந்து தமக்கு நன்றிக்கடன் செலுத்துகிறது என்று வியாக்கியானம் சொல்லும் மனிதர்களை நினைத்து கவலைப்படுவான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தால் எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை. இவனை மற்றைய மாணவர்கள் ஒதுக்கிவைத்து கேலி செய்ய காரணம் என்ன?

அவனது ஏழ்மையான தோற்றமா? வித்தியாசமான சிந்தனை ஓட்டமும் பேச்சுமா?அல்லது அவனை கேலிசெய்வது மற்றவர்களுக்கு ஒரு பொழுது போக்காக இருந்ததா? அல்லது ஏனையோர் அவனை தம்மிலும் குறைவானவன் என்று எண்ணிக் கொண்டார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை எனக்கு விடை தெரியாது.

சில சமயம் அவன் தனிமையிலிருந்து எதையாவது சிந்தித்துத் கொண்டிருப்பான். “டேய் அங்கை பாரெடா குட்டான் தவம் செய்கிறான் என்று பலரும் பேசிக் கொள்வார்கள்.ஆனால் அது அவனின் சிந்தனை ஓட்டத்தை குழப்பு வதில்லை.

எனக்கு கவலையான வேதனையான நிலைமைகள் தோன்றும் போதெல்லாம் அவனிடம் பேசுவேன். சின்னச் சின்ன வார்த்தைகளினால் என்னென்னவோ எல்லாம் சொல்லுவான். கேட்பான். அவை ஒன்றும் இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை.

ஆனால் அவனது வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலைக் கொடுக்கும். இருந்தபொழுதும் அவனுடன் நெருங்கிப் பழகும் பொழுது என் அடிமனதிலே இனம் புரியாத ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது. சக மாணவர்கள் என்னையும் அவனது பட்டியலில் சேர்த்து எனக்கும் ஒரு பட்டம் சூட்டி விடுவார்களோ என்ற மனப்பயம் அடிக்கடி என்மனதிலே எழும்.

அன்றொருநாள் நான் பயந்தது நடந்து விட்டது.எனக்கு “குட்டானின் பிரதம சிஷ்யன்” என்ற பட்டம் வழங்கப்பட்டு அந்தப் பட்டம் மாணவர்கள் பலரினதும் வரவேற்பையும் பெற்றது. இது எனது மனதிலே பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படியாவது அவனிடம் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.குட்டானைப் போல எனக்கு என் புதிய பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் அல்லது அக்கறைப்படாது இருக்கும் மனப்பக்குவம் இருக்கவில்லை. மனதளவில் நான் அவனளவு பலமானவனும் இல்லை.

குட்டானை புறக்கணிப்பதும் எனக்கு பெரும் மனப் போராட்டமாக இருந்தது.அடிக்கடி “வசந்த் “வசந்த்” என்று என்னிடம் வரும் அவனை எப்படி புறக்கணிப்பது?அவனுக்கு வேறு நண்பர்கள் யாருமே இல்லை. எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் எனது வலது கரமாக இருந்து என்னை தூக்கி நிறுத்தியவன்.

இறந்து போன தனது தந்தையின் விருப்பத்திற்கமைய வாழ்வில் உயர வேண்டும் என்று உண்மையாக போராடிக் கொண்டிருக்கும் ஒரு போராளி. வாழ்விலே பல கவிழ்டங்களை அனுபவித்து மனம் புண்பட்டு அதனுடே தலைநிமிர முயலும் ஒரு பண்பட்ட மென்மையான குண இயல்புகள் கொண்டவன். இவனை நான் புறக்கணிப்பது நியாயமா குமா?

அந்த நேரத்திலே எனக்கு தெரியாது அடுத்த நாள் அவன் இறந்துவிடுவானென்று. மறுநாள் அவன் உண்மையிலேயே இறந்து போனான். அன்று ஒரு புதன்கிழமை. வழமைபோல பாடசாலைக்கு வந்திருந்தான். அன்று அவனின் முகத்திலே உற்சாகம் தெரியவில்லை. ஏன் அப்படி இருக்கிறான் என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. மீண்டும் அவனைப் பார்த்த பொழுது மேசையில் கை வைத்து குப்புறப்படுத்திருந்தான். இடைவேளைக்கும் எழுந்து வர வில்லை. நானும் அவனுடன் பேசவில்லை.மனம் ஏனோ பாரமாக இருந்தது.அவனது அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். உடல் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.எழுந்து என் முகத்தை பார்த்தான்.

அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை . குடிப்பதற்கு தண்ணி கேட்டான். வழக்கமாக என்னிடம் தண்ணிர் கேட்டு வாங்கி குடிப்பது அவனது பழக்கம். ஆனால் அன்று அவன் தண்ணிர் கேட்ட விதம் வித்தியாசமாக இருந்தது. அன்று தான் அவனுக்கு கடைசித் தடவையாக நான் தண்ணி கொடுக்கிறேன் என்று தெரியாமலே கொடுத்தேன் குடித்தான்.

காய்ச்சல் காரணமாக அன்று முழுவதும் சோர்வுடனேயே காணப்பட்டான். பாடசாலை முடிந்ததும் அவன் நடந்து வீடு செல்வது வழக்கம். அந்த அனல் பறக்கும் வெயிலினுாடே அவனால் நடந்து வீடு செல்ல முடியாதென்பது என் இதயத்திற்கு புரிந்திருந்தது.

அப்பா என்னை சைக்கிளில் அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். குட்டானையும் கொண்டு போய் வீட்டிலே இறக்கி விடும் படி அப்பாவிடம் கேட்டிருந்தால் அவர் கட்டாயம் அதைச் செய்திருப்பார். ஆனால் நான் கேட்க வில்லை ஏன்? அவனிடமிருந்து விலகி இருக்க நான் நினைத்தது தான் இதற்கு காரணமாயிருக்குமோ? நான் அப்பாவின் சைக்கிளில் ஏறிச் செல்லுமுன் மீண்டும் ஒருமுறை குட்டானைப் பார்த்தேன்.

அவன் சோர்வுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையால் அவன் என்னை ஏதோ கேட்பது போன்றிருந்தது. ஆனால் நான் எதுவும் பேசாமல் அப்பாவுடன் சென்று விட்டேன்.” இயலாமல் இருக்கிறது என்னைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டு விடுவாயா? என்று கேட்டிருப்பானோ?

அதன் பின்னர் அவன் தனியே கடும் வெயிலினுடே வீடு நோக்கி நடந்து செல்ல முற்பட்டதும் இடைநடுவில் மயக்கமுற்று விழுந்ததும் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டதும் மரணமானதும் பிறர் கூறித்தான் அறிந்து கொண்டேன். அந்த மரணத்திற்கு காரணம் யார்?குட்டான் என்ற இந்த குருத்து கருகிப்போனது ஏன்?

அப்பாவையும் அழைத்துக் கொண்டு அவனுக்கு இறுதி மரியாதை செய்ய சென்றிருந்தேன்.அவனின் அம்மா கதறி அழும் காட்சி என்மனதை உலுக்கியது.சக மாணவர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் உண்மையிலேயே அழுதார்கள். ஆனால் ஏனோ எனக்கு அழுகையே வரவில்லை.அன்று யாரும் அவனை குட்டான் என்று சொல்லவில்லை.கண்ணீர் அஞ்சலிகளில் கூட”குருகுலன்” என்ற அவனது உண்மையான பெயரே எழுதப்பட்டிருந்தது. அன்று தான் அவனது பெயர் பலருக்கு தெரியவந்தது.

ஒவ்வொரு உயிரின் முடிவிலும் இத்தனை சோகங்கள் இருக்கும் என்று அன்று தான் எனக்கு முதன் முதலில் தெரியவந்தது. நான் குற்றவாளியா என்று எண் மனம் என்னை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளும். “வசந்த்” என்று குட்டான் அழைக்கும் குரல் அடிக்கடி எனக்கு கேட்டுக் கொள்ளும். அமைதியாக ஒரு இடத்தில் இருந்து சிந்திப்பதற்கு மனம் விருப்பப்படும். குட்டானைப் போன்று புதிய சிந்தனைகள் தோன்றும். என்னை “ஒரு மாதிரி என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நானும் குட்டானைப் போல் அது பற்றி இப்பொழுது அதிகம் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை.

பிறரை கேலி செய்து மகிழும் கலாசாரத்திலிருந்து என்று மீட்சி பெறுவோம்.
ஒருவனை துயரப்படுத்தி அந்த சலசலப்பை பொழுது போக்காகவும் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையும் களமாகவும் பாவிப்பது மனிதத்துவம் ஆகாது.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்