குடல் இறக்கம் /கர்ப்பப்பை இறக்கம். மருத்துவர் கந்தையா குருபரன்

பல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின்வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் ஒரு வெளியில் சொல்லமுடியாத அல்லது வெளியில்சொல்லவிரும்பாத ஒருபிரச்சினையாக கர்ப்பப்பை இறக்கம் உள்ளது.

பொதுவாக பல குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்தில் ஆயுதம் பாவித்து பிரசவம் ஏற்பட்டிருப்பினும் ஏற்படலாம். மேலும் பெண்களின் வயது கூடும் போதும் இவ் வகை குடல் இறக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கருப்பை இறக்கம் தனியாகவும் வரலாம். பல வேளைகளில் சிறுநீர்ப்பை மற்றும்பெருங்குடல் ஆகியனவும் சேர்ந்து கர்ப்பப்பையுடன் பிறப்பு வாசல் வழியாக கீழே இறங்கலாம்.

இயற்கையே இதற்குக் காரணம்

பெண்களின் உடலமைப்பில் பிள்ளைப் பேற்றுக்காக இடுப்புப்பகுதியின் கீழ்ப்பகுதி என்புகள் அற்று தசை மட்டுமே இருக்கும். இப்பகுதியினுடாகவே சாதாரணமாகப் பிள்ளை பிறக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
பல பிள்ளைகளைப் பெறும்போது இத்தசைநார்கள் தமது வலிமையை இழக்கும். இதனால் கர்ப்பப்பையை வழமை போல்தாங்கி வைத்திருக்க முடியாமல் இருக்கும். இதன் விளைவாகக் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும். பிள்ளை பெற்றபின் சரியான உடற்பயிற்சியை முறையான வழிகாட்டலின் கீழ் செய்தால் இவ்வகை குடல் இறக்கம் ஏற்
படுவதை ஓரளவு தடுக்கலாம்.

என்ன அறிகுறிகள் ஏற்படலாம்?

பிறப்புவாசலில் ஒருகட்டி எப்போதும் வெளித் தெரியலாம். (irreducible prolapse)
சிலருக்கு இருமும் போது ஒரு கட்டி மட்டும் வந்து போகலாம். (reducible prolapse)
சிலருக்கு அதிகளவில் இரத் தப்போக்கு வெள்ளைபடுதல் அல்லது சிலவேளைகளில் இரத்தப் போக்கும் ஏற்படலாம்.
சிலவேளைகளில் நாரி வலி அல்லது முதுகுவலி இருக்கலாம்.
சிறுநீர் சம்பந்தமான அறிகுறிகளும் சிலருக்கு இருக்கலாம் உதாரணமாக இருமும் அல்லது தும்மும்போது சிறுநீர் போகலாம். சிலருக்கு அவர் களை அறியாமல் கட்டுப் பாடின்றி சிறுநீர் போகலாம்.
மேலும் சிலர் மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்க முடியாமல் அவதிப்படலாம். இதனால் பெண்களின் நாளாந்த வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படலாம். பொதுநிகழ்வுகளில் பங்கு பற்ற முடியாது போகலாம்.

எவ்வகை சிகிச்சைகள் உள்ளன?

இவ்வகை அறிகுறி இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்களுக்கு உள்ள பிரச்சினையை சரியாக அறிந்தால் அதற்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட வகையான உடல் பயிற்சிகளை (pelvic floor exercise) செய்வதன் மூலம் சிலருக்கு நோய் அறிகுறிகளை சரி செய்ய முடியும்.
சிலருக்கு வளையம் (Pessary) ஒன்றை வைப்பதன் மூலம் தீர்வைப் பெறலாம்.
சத்திர சிகிச்சை (Surgery) சிலருக்குத் தேவைப்படலாம்.

நோயாளியின் நோய் அறிகுறிகள், எவ்வகை குடல் இறக்கம் மற்றும் நோயாளிக்கு உள்ள வேறு மருத்துவப்பிரச்சினைகள் என்பவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறலாம்.

மிக சிறிய அல்லது ஆரம்ப நிலையில் உள்ள குடல் இறக்கம் எனில் உரிய அளவுக்குரிய வளையம்(Pessary) ஒன்றைகர்ப்பப்பைவாசல் அருகே வைப்பதன் மூலம் அவர்களின் சிரமங் களைக் குறைக்கலாம். இவ்வளையத்தை குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
வளையம்(Pessary)

பெரிய அல்லது நோயாளியின் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கும் குடல் இறக்கம் எனில் சத்திர சிகிச்சை (vaginal hysterectomy) மூலமே இதற்கு தீர்வுகாண வேண்டும்.

இவ்வகை சத்திரசிகிச்சை செய்த பின் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (இரண்டு மாதங்கள்) மிக கடின வேலைகளைத்தவிர்த்தல் வேண்டும். மேலும் சிலருக்கு இவ்வகைச் சத்திரசிகிச்சை செய்த பின்னும் பலவருடங்களின் பின் குடல் இறக்கம் மீளவும் ஏற்படக்கூடும்.

மருத்துவர் கந்தையா குருபரன்
பெண்நோயியல் மகப்பேற்றியல் நிபுணர்.
சிரேஷ்ட விரிவுரையாளர்
மருத்துவபீடம்.