நிறைவான உணவை உண்டு வளமாக வாழ்வோம் – Dr.S.கேதீஸ்வரன்

இன்று நாம் இயந்திர மயமான உலகில் வாழ்கின்றோம். காலையிலிருந்து இரவு வரை வேலை, படிப்பு. டிவி பார்த்தல் என நேரம் போய் விடுகின்றது. இதனால் நாம் உண்ணும் உணவைக் கவனிப்பதில்லை. இலகுவாகச் சமிபாடடையக் கூடிய, விரைவாகத் தயாரிக்கக் கூடிய பதப்படுத்தப்பட்ட மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை நாடுகின்றோம். நிறைவான உணவு உண்ணப்படாததினால் எமது உடற் பருமன் அதிகரிக்கின்றது. அத்துடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதக்குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு, நாம் போதிய உடற்பயிற்சிகளையோ உடலை வருத்தி வேலைகளையோ செய்வதில்லை. இதனாலும் உடற்பருமன் அதிகரிப்பதுடன் சலரோகம், உயர்குருதியமுக்கம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு எத்தகைய உணவை உண்ண வேண்டும் என்று பார்ப்போம். ஆரோக்கியமான உணவென்பது எல்லோருக்கும் பொதுவானது. சிறுவயது முதல் நாம் ஆரோக்கியமான உணவு (Healthy diat) உணவைப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் எமது உணவில் அதிகளவு பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள் எமக்கு விற்றமின் C, விற்றமின் A போன்ற அத்தியாவசிய விற்றமின்களை வழங்குகின்றன. பழங்களில் உள்ள பொட்டாசியம் குருதியமுக்கத்தைக் குறைக்கின்றது. பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுகிக்கின்றது. இதனால் பெருங்குடல் புற்றுநோய், மூல நோய் (Piles) போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது குறைகின்றது. நீரிழிவு நோயுள்ளவர்கள் அதிக இனிப்புள்ள மாம்பழம், பலாப்பழம் என்பனவற்றைத் தவிர்ப்பது நல்லது. அவர்கள் கதலி அல்லது இதரை வாழைப்பழம், பச்சை அப்பிள், விளாம்பழம், பப்பாசிப்பழம், கொய்யா, நாவல் ஆகியவற்றை உண்ணலாம். சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் பழங்களை முற்றாகத் தவிர்ப்பது நல்லது.

பழங்களைப் போலவே மரக்கறி வகைககள் மற்றும் கீரை வகைகள் மிகுந்த பயனைத்தருகின்றன. அவை உடலுக்குத்தேவையான விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருவதுடன் நார்ச்சத்தையும் தருகின்றன.

பயறு, கடலை, கௌபி, சோயா, அவரை போன்றவை எமக்குப் புரதச் சத்தையும், இரும்புச் சத்தையும் வழங்குகின்றன. இவற்றில் காபோவைதரேற்றுக்கள் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை சிறந்தவை.

தானிய வகைகளைப் பொறுத்தவரை தீட்டப்படாத முழுத்தானியங்களே சிறந்தவை. தீட்டாத அரிசயில் நார்ச்சத்தும், விற்றமின் B ம் அதிகம் உள்ளன. ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாங்கள் அதிக மாச்சத்துள்ள சோறு மற்றும் அரிசிமா, கோதுமைமாப்பண்டங்களை அதிகளவில் உண்கிறோம். உடலை வருத்தி வேலை செய்யதாவர்களுக்கு இது தீங்கானது. எனவே நாம் மரக்கறி வகைகளை அதிகமாகவும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாகவும் உண்ண வேண்டும். மாவகைகளில் ஆட்டாமா சிறந்ததாகும்.

எண்ணை வகைகளை உணவில் குறைத்துக் கொள்வது நல்லது. நிரம்பிய கொழுப்பமிலங்களால் ஆன (Saturated fattyacids) மரக்கறி எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பன இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே அவற்றின் பாவனையைக் குறைப்பது நல்லது. Non unsaturated fat ஆல் ஆன ஓலிங் எண்ணெயே மிகச் சிறந்த எண்ணெய் ஆகும். இது நல்ல கொலஸ்ரோலை HDE Cholostorol கூட்டிக் கூடாத கொலஸ்ரோலைக் (LDL Cholostorol) குறைக்கும் Polyunsaturatedfat எனப்படும் நிரம்பாத கொழுப்பமிலங்களையுடைய சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், நல்லெண்ணெய் என்பவை பொதுவாகக் கொலஸ்ரோலைக் குறைவடையச் செய்வதனால் பாவிக்க உகந்தவை. மாஜரீன் மற்றும் பிஸ்கட் வகைகளில் Trans Fattyacid என்ற தீங்கான கொழுப்பமிலம் உள்ளது இது இருதய நோய்களை எற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது.

பால் ஒரு நிறையுணவு வளரும் பிள்ளைகளுக்கு பால் புரதத்தையும், கல்சியம், மற்றும் விற்றமின்களையும் வளங்குகின்றது. பாலிலுள்ள பிரச்சினை அதிலுள்ள கொலஸ்ரோலும் நிரம்பிய கொழுப்புமாகும். எனவே கொலஸ்ரோல் அதிகமுள்ளவர்கள் பசுப்பாலையும் முழு ஆடைப்பால்பால்மாக்களையும் தவிர்த்து கொழுப்பற்ற பால்மாவைப் பயன்படுத்தலாம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு ( Vegetarians) விற்றமின் B12 பாலின் மூலம் மட்டுமே கிடைப்பதால் கட்டாயம் அவர்கள் பால் அருந்த வேண்டும்.

மீன் எமக்குத் தேவையான புரதம், கல்சியம், விற்றமின்கள், அயடீன் என்பவற்றை இது அளிக்கிறது. மீனிலுள்ள கொழுப்பில் ஓமேகா – 3 எனும் கொழுப்பமிலம் உள்ளது. இது இருதய நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பெரிய மீன்கள் தீங்கானவை என்ற கருத்து நம்மிடையே உள்ளது இது தவறானது.

இறைச்சி வகைகளில் கோழி இறைச்சி ஆரோக்கியமானதாகும். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என்பவற்றில் நிரம்பிய கொழுப்பமிலங்கள் ( Saturated fat) கொலஸ்ரோல் என்பன அதிகமுள்ளதால் தவிர்ப்பது நல்லது இவை ( Red meat ) புற்றுநோயையும் ஏற்படுத்தக் கூடும்.

உணவில் உப்பை முடியுமான வரை குறையுங்கள் உயர் குருதியமுக்கம் உள்ளவர்கள் அதிக உப்புள்ள சூப்வகைகள், கருவாடு என்பவற்றை தவிர்க்க வேண்டும்.

எந்த வயதினராக இருந்தாலும் எல்லோருமே இனிப்பு வகைகளைக் குறைக்க வேண்டும். இனிப்புள்ள மென் பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்பு பிஸ்கற்றுக்கள், கேக் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும் போது மென்பானங்களைத் தவிர்த்து நீரை அருந்த வேண்டும்.

கூடுமான வரை இயற்கையான புதிய உணவுகளை உண்ணுங்கள், பதப்படுத்தப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவுகளிலுள்ள இரசாயனப் பொருள்கள் உடலுக்கு தீங்கிழைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் போதுமான அளவு நீரை அருந்துங்கள், வளர்ந்த ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தொடக்கம் இரண்டரை லீற்றர் கொதித்தாறிய நீரைப்பருக வேண்டும். இதன் மூலம் சிறு நீரகக்கற்கள், சிறு நீர்க்கிருமித் தொற்று என்பவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கிய உணவான பால், வயது வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானது, ஆரோக்கிய உணவு உண்பதன் மூலம் நீரிழிவு உயர் குருதியழுத்தம், கொலஸ்ரோல் போன்ற நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நோய் வாய்ப்பட்ட பின்னர் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதை விட வருமுன்னர் காப்பதே சிறந்தது.

Dr.S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை