உயர்குருதி அழுத்த நிலையிலிருந்து எம்மை தற்காத்துக் கொள்ள… – Dr.திவாகரன் சிவமாறன்

உயர் குருதியழுத்தம் என்பது உங்களின் குருதியழுத்த மானது சாதாரணமாக இருக்க வேண்டிய குருதியழுத்தத்திலிருந்து சற்று உயர்வாகக் காணப்படும் நிலைமையாகும்.

இது பூரணமாக கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலையாகும். இதனைக் கட்டுப்படுத்தி நீங்கள் சாதாரணமாக வாழ முடியும்.

சாதாரணமாக குருதியழுத்தமானது 120/80 mmHg என்ற பெறுமானத்தை விடக் குறைவாகவே காணப்படும்.இதில் 12O என்பது இதயம் சுருங்கும் போது குருதியானது சுற்றோட்டத்தொகுதிக்குள் அனுப்பப்படும் போது குருதிக்கலங்களில் காணப்படும் அழுத்தமாகும். இது 90 – 130 என்ற பெறுமானத்திற்கு இடைப்பட்டு மாற்றமடைந்து காணப்படலாம்.

மேலே குறிப்பிட்ட 😯 என்பது இதயம் தளர்வடைந்து குருதியானது இதயத்தினுள் நிரப்பப்படும் போது ஏற்படும் அழுத்தமாகும். இது 60-85 என்ற அளவிற்கு உட்பட்டு மாறுபடலாம்.

உங்கள் இரத்த அழுத்தமானது 140/90 ஐ விட அதிக மாக உள்ள நிலையே உயர் குருதியழுத்தமாகும்.

உயர் குருதியழுத்தம் உங்களில் ஏற்படுவதற்கான காரணங்கள்

 • கூடிய உடற் பருமன், குறைவான உடற்பயிற்சி
 • பரம்பரைக் காரணிகள் அதாவது உங்கள் சகோ தரர்களுக்கோ, பெற்றோருக்கோ உயர் குருதியமுக்கம் இருப் பின் உங்களுக்கும் உயர்குருதியழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
 • மதுபாவனை
 • நிறை குறைந்து பிறக்கும் பிள்ளைகளில் உயர் குருதியழுத்தம் ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகமாகும்.
 • மனஅழுத்தம் (Stress)

இதற்கு மேலதிகமாகவுள்ள காரணங்களைக் கண்டறிய சில பரிசோதனைகள் வைத்தியர்களால் மேற்கொள்ளப் படும். இந்த சோதனைகள் சிறுநீரக கோளாறு. இரத்தக் குழாய் பிரச்சினை. சில அகஞ்சுரக்கும் சுரப்பி பிரச்சினை என்பவற்றைக் கண்டறிவதற்கு செய்யப்படுகின்றது.

சில மருந்து வகைகளும் உங்கள் உயர்குருதியழுத் தத்திற்கு காரணமாகலாம். உதாரணமாக Steroid மருந்து வகை, கர்ப்பத்தடை மருந்துகள் NSAID எனும் வகை வலியை போக்கப் பயன்படும் மருந்துகள்.

எனவே நீங்கள் மருந்துகள் ஏதாவது பாவிப்பின் அவற்றை பற்றி வைத்தியரிடம் கூறவும். வைத்திய ஆலோ சனைப்படி வேறு வகையான கர்ப்பத்தடை மருந்துகளை நீங்கள் தெரிவு செய்ய முடியும்.

உயர்குருதியழுத்தம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றது

உங்கள் குருதியழுத்தத்தை உங்களால் உணர முடியாது. குருதியழுத்தத்தை அளவிடுவதன் மூலமே இதனை அறிய முடியும். எனவே இதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தெரியாமலும் போகலாம். உங்களுக்குதலையிடி, மயக்கம், நெஞ்சு படபடப்பு, மூச்சு விடுதலில் சிரமம், களைப்பு, மூக் கிலிருந்து இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.

குருதியழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் பாரிசவாதம், மாரடைப்பு போன்ற பாரதுாரமான பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். நீண்டநாட்களாக குருதியழுத்தம் கட்டுப்பாடின்றி இருப்பின் சிறுநீரக செயலிழப்பு. இருதய செயலிழப்பு. கண்பார்வை பாதிப்பு போன்றவை எற்படலாம். எனவே இவற்றைத் தடுப்பதற்கு உங்கள் குருதியழுத்தத்தை கட்டுப்பாடாக வைத்திருத்தல் முக்கியமானது.

உங்கள் குருதியழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை

 • உங்கள் உடல் நிறையை சரியான அளவில் பேணுதல்
 • உங்களுக்கு இருக்க வேண்டிய நிறையின் அளவு உடற்திணிவுச்சுட்டெண் மூலம் அறியப்படும். இது 18.5-24 ற்குள் பேணப்பட வேண்டும்.
  • உடற்திணிவுச்சுட்டெண்ணை கணிப்பதற்கு உங்கள் உயரத்தை மீற்றரிலும், நிறையை kg இலும் அளந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் நிறையை உயரத்தின் வர்க்கத்தால் பிரிப்பதன் மூலம் இது கணிப்பிடப்படும். உதாரணமாக உங்கள் நிறை 60 kg எனவும் உயரம் 1.6 m எனவும்.இருப்பின் உங்கள் உடற்திணிவுச்சுட்டெண் ஆனது 60kg/(1.5×1.5)m = 26.66 என பெறப்படும்.
 •  நீங்கள் கொழுப்புக் கூடிய உணவைத் தவிர்ப்பது நல்லது. கடைகளில் வாங்கும் துரித உணவுகள், நெய், பொரித்த உணவுகள் Margarine போன்றவற்றைக் குறைப் பது நல்லது. மாப்பொருள் மற்றும் இனிப்பு கூடிய உணவு களை கட்டுப்பாடாகப் பயன்படுத்துவதால் உடல் நிறையை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
 •  தினமும் உணவில் மரக்கறிகள், பழவகைகள் சேர்த்துக் கொள்வது நல்லது.
 • உணவில் உப்பின் அளவை குறைவாகப் பாவிப்பது  நல்லது.
 • மதுபானப் பாவனையை நிறுத்துதல் நல்லது.
 • புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றாக தவிர்ப்பது நல்லது.
 • தினமும் 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடு படலாம். வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடல் நல்லது.
 • ஆரம்பத்தில் சிறிய பயிற்சிகளைத் தொடங்கி பின்னர் உங்கள் உடற்றகைமைக்கு ஏற்ப அதிகரிக்கலாம்.
 • நடத்தல், சைக்கிள் ஓடுதல், நீச்சல் போன்ற பயிற்சி களில் ஈடுபடலாம். உயர்த்திகளை தவிர்த்து மாடியில் படியால் ஏறிச் செல்லுதல், வீட்டுத்தோட்டம், ஏனைய வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.
 • மன உளைச்சலை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது. இதற்காக நீங்கள் தியானம். yoga போன்றவற்றில் ஈடுபடலாம். ஆலயங்களுக்கு செல்லுதல் மன அமைதிக்கு என சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொள்ளல் போன்றனவும் உதவியாக அமையும்.
 • மீன் வகைகளை உண்பது நல்லது.

உங்கள் குருதியழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு வைத்தியரால் சில மருந்துகள் வழங்கப்படும். இம் மருந்துகளை சரியான அளவில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒழுங்காக வைத்திய ஆலோசனைப்படி பாவிப்பது அவசியமாகும். தகுந்த வைத்திய ஆலோசனையின்றி இம்மருந்தை நிறுத்துவதையோ / மருந்தின் அளவை மாற்றுவதையோ தவிர்க்க வேண்டும். இம் மருந்துகள் குருதியழுத்தத்தைக் கட்டுப்படுத்தி ஒரு சமநிலையாக பேணுகின்றன. இதனை நீங்கள் திடீரென்று நிறுத்தினால் இது உங்களுக்கு பாரதுாரமான விளைவை ஏற்படுத்தலாம். சில வேளைகளில் உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய நிலையும் உண்டாகலாம்.எனவே ஒரு வேளை மருந்தையும் தவறவிடாது எடுத்து வர வேண்டும்.

உங்களுக்கு வழங்கப்படும் மருந்தின் பெயரையும் மருந்தின் அளவையும் வைத்தியரிடபமிருந்து கேட்டு அறிந்து கொள்வது நல்லது. Clinic இல் தரப்படும் மருந்து முடிவடைந்தாலும் அல்லது நீங்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வந்தாலும் இம் மருந்தின் பெயரைக் கூறி வேறு சிகிச்சை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் clinic ற்கு வரும் பொழுது அந்த நாளிற்குரிய மருந்தை உரிய வேளையில் எடுத்திருப்பது அவசிய மாகும். எனவே clinic இல் உங்கள் இரத்த அழுத்தம் இம்மருந்தினால் கட்டுப்பாடாக உள்ளதா என்பதை வைத்தியரால் அறிய முடிவதுடன் மருந்தின் அளவில் மாற்றம் தேவையா என்பததையும் தீாமானிக்க முடியும்.

சில மருந்துகள் ஆரம்பிக்கும் போது உங்களுக்கு தலைச்சுற்று. தலையிடி, கால் வீக்கம் நெஞ்சு படபடப்பு. இருமல், அதிகமாக வியர்த்தல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

சில மருந்துகள் ஒத்துக் கொள்ளாதவிடத்து அதற்கான மாற்று மருந்துகள் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளைப் பாவிக்காது விட்டுவிட்டு வைத்தியர் பேசுவார் என்பதற்காக அதனை மறைப்பது உங்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதுாரமான விளைவிற்கு இட்டுச் செல்லலாம்.

நீங்கள் ஏதாவது காரணத்திற்காக மருந்துகளை எடுக்க தவறி யிருப்பின் அதற்கான உண்மையான நிலையை வைத்தியரிடம் வெளிப்படுத்துங்கள். உங்கள் குருதி அழுத்தத்தை அளவிடுவதற்கு இலத்திரனியல் உபகரணம் ஒன்றை வீட்டில் பாவிப்பது நல்லது. இதனை அளவிடும் போது பயம், களைப்பு, பசிபோன்றவை இல்லாத அமைதியான நிலையிலேயே குருதி அழுத்தத்தை அளவிடுதல் வேண்டும்.

இந்த குருதி அழுத்தத்தை நீங்கள் clinic வரும் பொழுது வைத்தியரிடம் தெரிவிக்கலாம். நீங்கள் உங்கள் உயர்குருதியழுத்தத்திற்கு பொருத்த மான மருந்தினைப் பாவித்து அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் அதனால் தாக்கங்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் குருதியழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ள போது நீங்களும் சாதாரண சுகதேகி போல வாழ முடியும்.

Dr.திவாகரன் சிவமாறன்
யாழ். போதனா வைத்தியசாலை