சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. – சுனேஸ்

சிறுவர் துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டுமாக விருந்தால் நாட்டில் சிறுவர்க்கென்று தனியான நீதிமன்றுகள் அமைக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரிய தண்டனைகள் குறுகிய காலத்துள் வழங்கப்படவேண்டும்.

நீதிமன்றங்களில் பகிரங்கமாக விசாரிக்கப்படும் போது பல உண்மைகள் வெளிவராமல் தூங்கிவிடுகின்றன.எனவே நாட்டில் சிறுவர் நீதிமன்றங்கள்
அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாய தேவைப்பாடாக உள்ளது.

ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது.. உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பங்கினர் சிறுவர்களாகக்
காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எமது நாட்டில் இடம் பெற்ற யுத்தங்கள் கலவரங்கள் இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என்பது அனைத்து தரப்பினரும் அறிந்த உண்மை. எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் எமது நாட்டை பொறுத்தளவில் கொஞ்சம் பின்தங்கிய வண்ணமாகவே காணப்படுகின்றது.

தற்காலத்தில் பாடசாலை மட்டத்திலும், வெளி இடங்களிலும் ஏகப்பட்ட துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிய முடிகிறது.

சிறுவர் துஸ்பிரயோகம் துர் நடத்தைகளை நீக்குவதற்கு
பாடசாலை மட்டத்தில் நல்லொழுக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

கிராம மட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான
விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்கள் ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் துஸ்பிரயோகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்

இன்று இலங்கையில் நாவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இதில் பல்வேறு விதமான சிறுவர்கள் காணப்படுவதுடன் இவர்களின் தேவைகள் பல்வேறு விதமாக காணப்படும்.

இவர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

அத்துடன் இப்படியான ஒரு தினத்தில் சிறுவர்களை ஒன்று சேர்த்து அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பூரணமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

உலகத்திலேயே பல்வேறு வகையான சிறுவர்கள் பலவகையான திறன்களுடன் பிறக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்கள் தூய்மையான உள்ளங்களை உடையவர்களாகவும் நாட்டுக்கு விசுவாசம் உள்ளவர்களாக உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

18 வயதுக்கு குறைந்த அனைத்து மாணவர்களும் சிறுவர்களாக காணப்படுவர். இவர்களை அனைவரும் கண்காணித்து அவர்களுடைய அடிப்படை தேவைகள் அடிப்படை உரிமைகள் என்பவற்றை வழங்க வேண்டும்.

சிறுவர்கள் என்போர் தூய்மையானவர்கள் ஒழுங்கானவர்கள் இவர்களுடைய நடத்தைகளை சீர்குலைப்பதற்கு வெளியில் நிறைய சக்திகள் காணப்படுகின்றது.

இதிலிருந்து பாதுகாப்பாகவும் கண்காணிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் உங்களை உங்களுக்கு பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது இதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்..

உங்களை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரஜையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் அமையும் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் தெரிவித்துள்ளார்.

சிறுவர் உரிமை பிரகடனம்
உலகலாவிய ரீதியில் நோக்கின் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள் பாலியல் வன்புணர்ச்சி சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும் சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக் கொள்ளுதல் கடத்துதல் மோசடிகள் உள ரீதியான பாதிப்புள்ளாக்குதல் என பல் வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும் காப்பீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம்
சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன.

இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பங்கள் கடத்தல்கள் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் பிள்ளைத் தாய் பிரச்சனை போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனிப்பட்ட குரோதங்களுக்காகவும் பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும் குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக்
கூறப்படுகின்றன.

பெருந்தோட்டங்கள், கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு செல்வந்த வீடுகளுக்கும் கடைகள் ஹோட்டல்கள் கராஜிகள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர்.

சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளை
இல்லாதொழிக்க முடியும்.

ஓவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.

நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.

சுனேஸ் (மனித உரிமை செயற்பாட்டாளன்)