எனது வலது பக்க மார்பகம் இடது பக்க மார்பகத்தை விட சிறியதாக இருப்பதை அவதானிக்கின்றேன் இது ஒரு குறைபாடா?

நான் 15 வயதுடைய பெண் எனது வலது பக்க மார்பகம் இடது பக்க மார்பகத்தை விட சிறியதாக இருப்பதை அண்மைக்காலமாக அவதானிக்கின்றேன். நான் 14 வயதில் பூப்படைந்து விட்டேன். இது ஒரு குறைபாடா இல்லையா என எனக்கு அறியத்தரவும்.

பொதுவாக எல்லாப் பெண்களிலும் வலதுபக்க, இடது பக்க மார்பகங்களுக்கிடையில் அளவிலோ அல்லது வடிவத்திலோ அல்லது இரண்டிலுமோ வித்தியாசம் இருக்கும். மார்பகத்தின் வளர்ச்சியானது பூப்படைய முன் 2 வருடத்தின் முன் ஆரம்பித்து பூப்படைந்த பின் 2- 4 வருடம் வரையும் விருத்தியடைகின்றது. இவ் விருத்தியானது பரம்பரை, ஈஸ்ரஜன் ஒமோன் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பக்க மார்பகக் கலங்கள் மற்றயதை விட ஈஸ்ரஜன் ஓமோனின் விளைவுகளுக்கு அதிக உணர்வு உள்ளதாயிருந்தாலும் வித்தியாசம் ஏற்படலாம். பருவ நிலையிலும், கர்ப்ப காலங்களிலும், மாதவிடாய் நின்ற பின்னரும் ஓமோனின் விளைவால் மார்பகங்கள் சமச்சீரற்றுக் காணப்படலாம். மார்பக நோய்கள் அதாவது கட்டிகள், சீழ்க்கட்டிகள் (Abscess) ஒரு பக்க மார்பகத்தில் இருப்பதாலலும் மார்பகங்களின் அளவில் வித்தியாசம் ஏற்ப்படலாம். பொதுவாக இந்த வயதில் ஆபத்தில்லாத கட்டிகள் தான் ஏற்ப்படும். ஏதாவது கட்டிகள் அவதானிக்கப்பட்டால் வைத்தியரை அணுகவும். வலதுபக்க, இடது பக்க மார்பகங்களுக்கிடையிலுள்ள சிறிதளவு வேறுபாடு ஒரு குறைபாடு அல்ல. பொதுவாக பருவ நிலையில் ஏற்படுகின்ற மார்பகத்தின் சமச்சீரற்ற தன்மையானது சாதாரண விடயம். 2 வருட காலத்திக் பின்னரும் உங்கள் மார்பகத்தின் அளவில் பெரிய வித்தியாசம் இருப்பின் வைத்தியரை அணுகவும்.