அப்போ எப்படி வாழ்வது?…. சி.சிவன்சுதன்

வாழ்க்கையில் விதிக்கப்படும் அனாவசியமான கட்டுப்பாடுகள் மனிதனின் உடல் உள சமூக நன்னிலை ஆகிய உண்மையான சுகாதார நிலையை பாதிக்கும் என ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
கோபப்படாதே, கவலைப் படாதே, சத்த மிட்டுச் சிரிக்காதே, அதிகம் சிரிக்காதே, கனவு காணாதே, இனிப்பு சாப்பிடாதே, ஸ்ரைல் பண்ணாதே, முட்டை சாப்பிடாதே, TV பார்க்காதே, பால் குடிக்காதே, சும்மா இருக்காதே, அரட்டை அடிக்காதே, பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காதே, கைத்தொலைபேசி பாவிக்காதே, உப்பு சாப்பிடாதே, புளி சாப்பிடாதே, உறைப்பு சாப் பிடாதே …… இவ்வாறாக கட்டுப்பாடுகள் கட்டுக் கடங்காமல் நீண்டு கொண்டே சென்றால் “அப்போ எப்படி வாழ்வது?” என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒன்றுமே இல்லாத இயந்திர வாழ் வின் அர்த்தம் என்ன என்றும் சிந்திக்க தோன்றுகிறது.
மகிழ்வான வேளைகளில் சந்தோசப்படுவதும் சிரிப்பதும் கவலையான நேரங்களில் கவலை கொள்வதும் அழுவதும் மனதிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த அடிப்படை மன உணர்வுகளை கூட வெளிக்காட்ட கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது ஆரோக்கியமாகாது. கவலை கொண்டுள்ள ஒருவரை அழவேண்டாம் என்று தடுப்பதை விடுத்து அவருக்கு ஆதரவாக உதவியாக அரவணைத்துச் செயற்படுவது பயனுடையதாக அமையும். எமது மகிழ்வை வெளிப்படுத்தும் பொழுது அது இன்னொருவரை ஏழனப் படுத்துவாதாகவோ துன்பப்படுத்துவாதாகவோ அமைந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியமானதாகும்.
சுவையாக உண்பதும் வாழக்கையின் ஒரு முக்கிய அம்சம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சுவையான உணவு வகைகளை யாரும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு போன்ற அனைத்து சுவைகளும் ஆபத்தானவை என எண்ணிக் கொள்கிறோம். ஜஸ்கிறீம், பாயாசம் போன்றவற்றை உணணும் பொழுது குற்ற உணவுர்க்கு ஆளாகின்றோம். உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உப்பின் அளவு உடலில் குறைந்து விட்டால் அது பல தீயவிளைவுகளுக்கு வழிவகுக்கும். வெப்ப வலய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு உப்பு தேவைப்படுகிறது. காரணம் வியர்வையின் மூலம் பெருமளவு உப்பு இழக்கப்படுதலாகும். எனவே உயர் குருதிய முக்கம் உள்ளவர்கள் கூட 6-10 கிராம் வரை யிலான உப்பை தினந்தோறும் உள்ளெடுப்பது நல்லது. உப்பின் முக்கியத்துவம் அறிந்தே எம் முன்னோர் “உப்பில்லா பண்டம் குப்பையிலே” “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது போன்ற பல உப்பை பற்றிய விடயங்களை கூறி வைத்திருக்கிறார்கள். எனவே போதியளவு உப்பு சேர்த்து கறிசமைக்க பயப்பட வேண்டிய அவசிய மில்லை. ஆனால் அளவுக்கு அதிகமான உப்பை உணவிலே சேர்த்துக் கொள்வதை தவிப்பது நல்லது.
இதே போன்று உணவிலே உறைப்பு, புளிப்பு சுவைகளை சேர்ப்பதனால் தீய விளைவுகள் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவை உணவின் சுவையை மெருகேற்றும் என்பதுடன் சமிபாட்டிற்கும் உறுதுணையாகயிருக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற விடயத்தை மறந்துவிடலாகாது.
பால், முட்டை போன்றவற்றை போதியளவு உணவிலே சேர்த்துக் கொள்ள முடியும். இவை இயற்கையான பாதுகாப்பான நிறை உணவு களாகும். வெங்காயம், உள்ளி, இயற்கையான வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்கள் கூட போதியளவு உண்ண முடியும். சுகதேகிகளும் நோய்க்குஆட்பட்வர்களும்உணவை சுவையானதாக சமைத்து உண்ணும் பொழுது அவர்களின் உடல் உள ஆரோக்கியம் மேம்படும்.
இனிப் பான பண்டங்களை உணன்னக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பலருக்கு மனக்கவலையை ஏற்படுத்தி நிற்பதுடன் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. சாதாரண நிறையுடைய ஆரோக்கியமான ஒருவர் அளவுடன் சீனி, சர்க்கரை போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. அதிகரித்த பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சீனிக்கு பதிலாக சீனிச்சுவையை ஒத்த இனிப் புட்டிகளை பாவிக்க முடியும். சிற்றுண்டி வகைகள், பாயாசம், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு கூட இந்த இனிப்புட்டிகளை பாவிக்க முடியும். இவை பாதுகாப்பானவை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சில விசேட நிகழ்வுகளின் பொழுது சீனி சேர்க்கப்பட்ட உணவு வகைகளை உண்டு விட்டால் அது சம்பந்தமாக அதிகம் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை அவர்களில் அன்றாட வாழ்க்கையில் தவிர்த்துக் கொள்வது நல்லது.
தினமும் 30 நிமிடங்கள் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை TV பார்ப்பது சுகாதாரப் பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. இன்றைய நிலையில் கைத் தொலைபேசி வாழ்க்கையின் ஒரு இன்றி அமையாத அங்கமாக மாறி இருக்கிறது. இதனை பாவிப்பதனாலும் பாரிய சுகாதாரப்பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் இவற்றிற்கு அடிமையாகி இவற்றை தீய வழிமுறைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக் கிறது.
எமது அன்றாட வாழ்க்கையில் ஓய்வு இன்றி அமையாததாகும். “சும்மா இருக்காதே” என்று ஒருவரை எந்த நேரமும் தொந்தரவு செய்து கொண்டிருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை குழப்பும் அநாவசியமான கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சிப்பது பயனுடையதாக அமையும்..நண்பர்கள, குடும்பத்தவர்கள், அயலவர்களுடன் சிறிது நேரம் அரட்டை அடிப்பது ஆரோக்கியமானது. இது மூளையின் சில பகுதிகளுக்கு அமைதியையும் ஓய்வையும் கொடுக்கும். கணனி, கைத்தொலை பேசி என்பன எமது வேலைகள் பலவற்றை இலகு வாக்குகின்றன. இவற்றை தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவது தவறு ஆகாது. ஆனால் இவற்றை தவறான நடவடிக்கைகளுக்கு பாவிப்பதையும் அவற்றிற்கு அடிமையாவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எமது உடலை பராமரிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதும் விரும்பியோர் ஆபரணங்கள் அணிவதும், வாசனைத்திரவியங்கள் பயன்படுத்துவதும் தவறு ஆகாது. இது மனதிற்கும் உடலிற்கும் புத்துக்கத்தை கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆனால் இவை கலாசார மரபுகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
பகற்கனவு காணாதே என்று உபதேசிப்பவர்கள் பலர். ஆனால் ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றியும, தனது குடும்பம், சமூகம் என்பவற்றின் எதிர்காலம் பற்றியும் கனவு காண்பது ஆரோக்கிய மாகவும் பயனுடையதாகவும் இருக்கும். ஆனால் அந்தக்கனவுகளும் திட்டங்களும் பிறரை பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது.
பிள்ளைகளின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது பிள்ளைகளுக்கு செல்லம் கொடுப்பது என்று அர்த்தப்படாது. பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கக்கூடாது என்று கருதி பிள்ளைகளுடன்அ ளவுக்கதிகமாக கடுமையாக நடந்து கொள்வது பல எதிர்மறையான விளைவுகளை தோற்றுவிக்கும்.மற்றவர்களின் மன உணர்வுகளை விளங்கிக் கொண்டு ஆதரவு கொடுத்து அனைவரையும் நல்வழிப்படுத்தி வாழ முயற்சிப்பது பயனுடையதாக அமையும்.
ஒருவருக்கு உயர்குருதி அமுக்கமோ அல்லது நீரிழிவு நிலையோ ஏற்பட்டு விட்டால் அவருக்கு பால், முட்டை என்பன கொடுக்கக் கூடாது என்று அவர் மீது சமூகத்தினால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அத்துடன் இவை ஆபத்தான உணவு வகைகள் எனக் கூறி அவர் பயமுறுத் தப்படுகிறார். இதனால் அவர் “நான் பயந்து பால், முட்டை என்பன உண்பதில்லை என சொல்லத் தலைப் படுகிறார். இந்த உன்னதமான நிறை உணவுவகை களை அவர் தவிர்த்து விடுவதால் அவரின் உடல் நிலை மேலும் பலவீனம் அடைகிறது.
நாம் எமது நாளாந்த வாழ்விலும் இங்கே குப்பை போட வேண்டாம் இங்கே துப்ப வேண் டாம். இங்கே சிறுநீர் கழிக்க வேண்டாம்”, எதுவுமே வேண்டாம் என பற்பல கட்டுப்பாடுகளால் கட்டுண்டு கிடக்கிறோம். குப்பைத் தொட்டி ஒன்றை வைத்து இங்கே குப்பை போடவும் என அறிவுறுத்துவது கூடிய பயனைத் தரும். அதேபோல அருகில் எங்கே மலசலகடம் இருக்கிறது என்பதை எழுதி வைப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
நடைமுறைப்படுத்த முடியாத அல்லது நடை முறைப்படுத்துவது, கடினமான கட்டுப்பாடுகளை விதிப்பது எதிர்மறையான விளைவுகளை தோற்றிவிக்கலாம். ஒருவர் வாழும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக் கியத்துவம் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக, திருப்தியாக, நிறைவாக வாழ்கிறார் என்பதற்கும் கொடுக்கப்பட வேண்டும். அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கைத் தராதரத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“கிரந்தி உணவுகள் கூடாது, குளிர் உணவுகள் ஆபத்தானவை, இரவில் இலைவகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும், சூடான உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் இதுபோன்ற கட்டுப் பாடுகளும் மனிதன் சுதந்திரமாக, ஆரோக்கிய மாக உண்ணுவதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி நிற்கின்றன ஒருவருக்கு ஒரு வகையான உணவு ஒத்துக் கொள்ளுமாயின் ஒரு ஒவ்வாமை விளைவுகளும் ஏற்படாத விடத்து அந்த உணவு வகைகளை அவர் உண்ண முடியும். அநாவசியமாக உணவு வகைகளை வகைப்படுத்தி தவிர்த்து விடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.