எனக்குப் பல வருடங்களாகக் கடுமையான வேலைகள் செய்யும் பொழுது உடம்பு நோ ஏற்படும் தன்மை காணப்படுகின்றது. இந்த நோயை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எனக்குப் பல வருடங்களாகக் கடுமையான வேலைகள் செய்யும் பொழுது உடம்பு நோ ஏற்படும் தன்மை காணப்படுகின்றது. இந்த நோயை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வலி என்பது ஒரு வேதனையளிக்கும் உணர்வாகும். இது உடலில் ஏற்படும் காயம் அல்லது என்பு மற்றும் தசைகளில் ஏற்படும் பிரச்சினைகாரணமாக உருவாகின்றது. வலி உண்மையில் எமது உடலால் ஏற்படுத்தப்படும் தற்காப்புப் பொறிமுறையாகும். எடுத்துக்காட்டாக எம்மை அறியாமல் நாம் ஒரு முள்ளிக் மீது கால் வைக்கும் போது ஏற்படும் வலி காரணமாக உடனடியாக காலை எடுக்கின்றோம். இதனால் எமது காலுக்கு ஏற்படவிருந்த மேலதிக பாதிப்புத் தவிர்க்கப்படுகின்றது. வலியைத்தாங்கும் தன்மை ஒவ்வொரு தனிநபர்களிடையும் வேறுபடுகின்றது. உதாரணமாக ஒரேயளவு வலியை ஒரு வயது வந்தவர் தாங்கும் தன்மை சிறுவர்களிடம் இருந்து வேறுபடுகின்றது. சாதாரணைமாக தசைப்பிடிப்பு, மூட்டுநோ போன்றன பொதுவாக அதிக வேலை செய்த பின்னரே உருவாகின்றன. இவை சிறிது நேர ஒய்வின் பின்னர் குணமாகிவிடக்கூடியன. இவ்வாறாக சிறு வலிகளுக்கு சக்தி வாய்ந்த வலி நிவாரணிகளை நீண்ட காலம் பாவித்தால் சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்புண் போன்ற விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே இவ்வாறான சாதாரண வலிகள் கூடும் போது பரசிற்றமோல் வகை மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் சக்தி வாய்ந்த வலி நிவாரணிகளை வைத்திய ஆலோசனையின் பின்னரே பாவிக்க வேண்டும். மூட்டுவாதம், முள்ளந்தண்டென்புகளில் ஏற்படும் பாதிப்புக் காரணமாக உருவாகும் நாரிக்குத்து போன்றவற்றிற்கு வலி நிவாரணிகளைப் பாவித்தல் தற்காலிகமாக வலியைக் குணப்படுத்துமே தவிர வலிக்குக் காரணமாக நோயைக் குணப்படுத்தாது. இவ்வாறான கடுமையான வலிகளுக்கு வைத்திய ஆலோசனைப்படி பரிசோதனைகளின் பின்னர் வலி நிவாரணிகளுடன் நோய்க்குரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.